சிங்கப்பூரின் 60வது தேசிய தினத்தை முன்னிட்டு, 27 வயது இந்திய நாட்டவர் ஜனனி முருகன், உப்பினால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய ஓவியத்தைச் சிங்கப்பூரில் வடிவமைத்துள்ளார்.
‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற கருப்பொருளைக்கொண்ட இந்தக் கலைப்படைப்பு, ஆகஸ்ட் 3 முதல் 5ஆம் தேதி வரை புளோக் 51 கென்ட்வில் பெவிலியனில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. குடியிருப்பாளர்கள், அடித்தளத் தலைவர்கள் உள்ளிட்டோரின் பாராட்டை அது பெற்றது.
புதுச்சேரியை பூர்வீகமாகக் கொண்ட ஜனனி, 2022ல் சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தார். தற்போது அவர் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத் திட்டங்களில் மின்பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
சிறுவயதிலிருந்தே கலையில் ஆர்வம் கொண்டிருந்த ஜனனிக்கு, இந்தியாவில் திருவிழாக்களில் ரங்கோலி வடிவமைப்புகள் உருவாக்கிய அனுபவம் உண்டு.
சிங்கப்பூரின் கொள்கைகளாலும் விழுமியங்களாலும் கவரப்பட்ட அவர், முதன்முதலில் 2023ல் இந்தச் சாதனைக் கலைப்படைப்பை வடிவமைக்கத் திட்டமிடத் தொடங்கினார்.
“நான் சிங்கப்பூரர் இல்லையென்றாலும், இந்த நாட்டின் ஒழுக்கம், ஒருங்கிணைப்பு, ஒற்றுமை முதலியவற்றை நேசிக்கிறேன். இந்த ஓவியம் என் நன்றியின் அடையாளம்,” என்று அவர் கூறினார்.
முதலில், எஸ்ஜி59 தேசிய தினத்திற்காக இந்தக் கலைப்படைப்பை உருவாக்க விரும்பிய ஜனனியை, அவரது வேலையிட மேலாளர் எஸ்ஜி60 தேசிய தினத்திற்கு இதைச் செய்தால் அதன் தாக்கமும் முக்கியத்துவமும் அதிகரிக்கும் என்று ஊக்கமளித்ததாக ஜனனி கூறினார்.
மேலும், சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூவின் உரைகள் இந்தக் கலைப்படைப்புக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருந்ததாகவும், அவற்றின் ஆழ்ந்த தாக்கத்தைத் தான் இன்றும் உணர்வதாகவும் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தக் கலைப்படைப்பைச் சரியாக வடிவமைக்க, திட்டமிடல் பணிகளுக்கு ஜனனி பல மாதங்கள் செலவிட்டார். இறுதியில் 350 கிலோகிராமுக்கும் அதிகமான பாறை உப்பைப் பயன்படுத்தி இந்தப் பெரிய கலைப்படைப்பை உருவாக்கினார்.
“தூய்மை, சுத்தத்தின் அடையாளம் என்ற பொருளைப் பாறை உப்பு கொண்டிருப்பதால் அதைத் தேர்ந்தெடுத்தேன்,” என்றார் அவர்.
சிங்கப்பூரின் தேசிய நிறத்துக்கு ஏற்பச் சிவப்புச் சாயமிட்டும் வெள்ளையாகவும் அந்த உப்பு கலைப்படைப்பில் பயன்படுத்தப்பட்டது.
4.5 மீ x 7.5 மீ பரப்பளவைக் கொண்ட இந்த ஓவியத்தில் மெர்லயன், சிங்கப்பூர் ராட்டினம், மரீனா பே சேண்ட்ஸ் உள்ளிட்ட நாட்டின் முக்கிய அடையாளச் சின்னங்கள் இடம்பெற்றன.
“இந்த ஓவியத்தில் உப்பைச் சமமாகப் பரப்புவதுதான் மிகப்பெரிய சவாலாக இருந்தது. எங்கும் இடைவெளி இல்லாமல் இருப்பது, காற்றில் உப்பு அடித்துச் செல்லப்படாமல் இருப்பது உட்பட எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க மிகுந்த கவனத்துடன் செயல்பட்டேன்,” என்று ஜனனி கூறினார்.
வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) மாலை தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 3) விடியற்காலை வரை கிட்டத்தட்ட 36 மணி நேரம் உழைத்து, இந்தக் கலைப்படைப்பை அவர் நிறைவு செய்தார்.
பெரும்பாலான பணிகளை அவர் தனியாகவே மேற்கொண்டாலும், அவரது நிறுவனத்தில் பணிபுரியும் சக ஊழியர்கள் சிலர் உப்பைத் தேவைக்கேற்பச் சாயமிடவும் கனமான உப்பு மூட்டைகளை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு ஏற்றி இறக்கவும் உதவினர்.
அந்த இடத்தை வழங்கியதற்கும் தொடக்கத்திலிருந்தே அளித்த ஆதரவிற்கும் கென்ட்வில் வசிப்போர் தொடர்புக் கட்டமைப்புக்கு ஜனனி நன்றி தெரிவித்தார்.
“ஓவியத்தை நான் உருவாக்கிக்கொண்டிருந்தபோது குடியிருப்பாளர்கள் சிலர் என்னிடம் வந்து பேசினார்கள். சிலர் பானங்களை வழங்கி எனக்கு ஊக்கமளித்தார்கள். அந்த ஆதரவை என்னால் என்றும் மறக்க முடியாது.
“நீங்கள் சிங்கப்பூரை மிகவும் நேசிக்கிறீர்கள் என்று பலர் என்னிடம் சொன்னார்கள். நான் உண்மையிலேயே இந்த நாட்டை மிகவும் நேசிக்கிறேன்,” எனப் பெருமையுடன் ஜனனி குறிப்பிட்டார்.
‘சிங்கப்பூரில் ஒரு தனிநபரால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய பாறை உப்பு ஓவியம்’ எனும் சாதனையைப் படைத்துள்ள ஜனனியின் கலைப்படைப்பு அதிகாரபூர்வமாக சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
மத்திய சிங்கப்பூர் வட்டார மேயரான டெனிஸ் புவா அந்தக் கலைப்படைப்பை நேரில் பார்வையிட்டு, ஜனனியின் முயற்சியைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
இதையடுத்து, தேசிய தினத்தை மேலும் கொண்டாடும் நோக்கில், தனது சக ஊழியர்களுடன் இணைந்து இன்னொரு கூட்டுக் கலைப்படைப்பை உருவாக்கும் திட்டத்தில் தற்போது ஈடுபட்டுள்ளதாக ஜனனி கூறினார்.