மாணவர் திறன் போட்டியில் சவால் கிண்ணம் வென்ற ஸ்பெக்ட்ரா உயர்நிலைப் பள்ளி

மாணவர் திறன் போட்டியில் சவால் கிண்ணம் வென்ற ஸ்பெக்ட்ரா உயர்நிலைப் பள்ளி

2 mins read
825011b8-3e35-4652-941b-ba85613dbccb
வணிக வர்த்தக சவாலில் இரண்டாம் இடம் பிடித்த லோயாங் வியூ உயர்நிலைப் பள்ளிக் குழுவின் உறுப்பினர் யோகேஷ் பிரகாஷ். - படம்: தொழில்நுட்பக் கல்விக் கழகம்

தொழில்நுட்பக் கல்விக் கழகம் இவ்வாண்டு ஏற்பாடு செய்த ‘இக்னைட்’ திறன் போட்டியில் வெற்றியாளர் கோப்பையைத் தட்டி சென்றது ஸ்பெக்ட்ரா உயர்நிலைப் பள்ளி. 

போட்டியில் இடம்பெற்ற சவால்களில் முதல் மூன்று இடங்களில் ஆக அதிகமாக 15 முறை அப்பள்ளி இடம்பெற்று சவால் கிண்ணத்தை வென்றது.

சிங்கப்பூரின் எதிர்கால மேம்பாட்டுத் திட்டத்தின் அம்சங்களான அறிவார்ந்த புதுக் கண்டுபிடிப்புகள், பசுமையான எதிர்காலம், துணிகரமான இலக்குகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு போட்டியின் 16 சவால்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. 

“போட்டியின் ஒவ்வொரு சவாலும் கல்விக் கழகங்களில் வழங்கப்படும் பாடங்களின் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன,” என்று தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லோ காஹ் கெக் கூறினார்.

“இச்சவால்களில் பங்கெடுப்‌பதன்வழி மாணவர்கள் தங்களது கனவுகளையும் திறன்களையும் கண்டறிவதோடு எதிர்காலத்தையும் வடிவமைக்க முடியும் என நம்புகிறோம்,” என்று அவர் தம் உரையில் கூறினார். 

கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் நடைபெற்று வரும் இத்திறன் போட்டியில், இவ்வாண்டு 63 பள்ளிகளைச் சேர்ந்த 589 குழுக்கள் பங்கேற்றன. 

கடந்த ஐந்தாண்டுகளில், இந்த ஆண்டுதான் ஆக அதிகமாக 1,767 மாணவர்கள் பங்கேற்றனர் என்று தொழில்நுட்பக் கல்விக் கழகம் தெரிவித்தது. 

போட்டியின் தகுதிச் சுற்றுகள் ஏப்ரல் 14 முதல் 16 வரை நடைபெற்றன. இறுதிச் சுற்றுக்குத் தேர்வான குழுக்கள் செவ்வாய்க்கிழமை (மே 20) தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் மத்திய வளாகத்தில் மோதின. 

சவால்களில் ஒன்றான வணிக நிறுவன சவாலில் இரண்டாம் இடத்தைப்‌ பிடித்த லோயாங் வியூ உயர்நிலைப் பள்ளிக் குழுவின் உறுப்பினர் யோகேஷ் பிரகாஷ் இந்த போட்டி தமக்கு பல முக்கியப் பாடங்களைக் கற்பித்ததாகக் கூறினார். 

“இந்தச் சவாலில் பங்கெடுத்ததன் மூலம் ஒரு வணிகத்தில் எவ்வளவு செலவுகள், கஷ்டங்கள் உள்ளன என்பதைத் தெரிந்துக்கொண்டேன். இந்த அனுபவம் என்னாலும் எதிர்காலத்தில் ஒரு தொழிலைத் தொடங்க முடியுமென்ற நம்பிக்கையைத் தந்துள்ளது,” என்றார் உயர்நிலை நான்கில் படிக்கும் அவர். 

போட்டியில் அவரது குழு, பேனா விரும்பிகளுக்கும் கலைஞர்களுக்குமான தனித்துவமான பேனா தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கும் யோசனையை முன்வைத்தது. 

குறிப்புச் சொற்கள்