கடின உழைப்பால் உயர்ந்த ஆகாயப்படை உயரதிகாரி பாண்டிகுமரன்

கடின உழைப்பால் உயர்ந்த ஆகாயப்படை உயரதிகாரி பாண்டிகுமரன்

2 mins read
மூத்த வாரண்ட் அதிகாரியாகப் பதவி உயர்வு
db87525a-4001-4760-99a7-c3217d6dd71f
சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையில் 27 ஆண்டுகள் அரும்பணியாற்றி, மூத்த வாரண்ட் அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார் அ.பாண்டிகுமரன். - படம்: சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு
multi-img1 of 2

சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையில் மாஸ்டர் வாரண்ட் அதிகாரியாகப் பணியாற்றிய 47 வயது அ.பாண்டிகுமரன், மூத்த வாரண்ட் அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

ஜூலை 1ஆம் தேதி நடைபெற்ற சிங்கப்பூர் ஆயுதப்படை தின நிகழ்ச்சியில் அவர் பதவி உயர்வு பெற்றார்.

திரு பாண்டியின் ராணுவப் பயணம் கடின உழைப்பும் தலைமைத்துவப் பண்பும் நாட்டுப்பற்றும் நிறைந்தது.

“சிறிய நாடான சிங்கப்பூருக்கு, தேசியச் சேவை என்பது நாட்டின் பாதுகாப்பிற்கான அடித்தளமாகும். சிங்கப்பூரின் இறையாண்மையைப் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை,” என்று தேசியச் சேவையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார் திரு பாண்டி. 

1998ஆம் ஆண்டில் அடிப்படை ராணுவப் பயிற்சியின்போது, பறப்பதற்கும் உலகைச் சுற்றி வருவதற்கும் இருந்த வாய்ப்புகளால் ஈர்க்கப்பட்டு, அவர் ஆகாயப்படையில் சேர்ந்தார்.

இவரது ஆரம்பகாலப் பணி ‘ஃபோக்கர் 50’ (Fokker 50) விமானத்தில் விமான ஊழியராகத் (aircrew specialist) தொடங்கியது. விமானத்தின் எடைக் கணக்கீடுகளை நிர்வகிப்பது, சிங்கப்பூரின் கடல்துறை வழித்தடங்களைப் பாதுகாப்பதற்காகக் கடல்வழி அச்சுறுத்தல்களைக் கண்டறிவது போன்ற மிக முக்கியமான பொறுப்புகளை அவர் கவனித்துக்கொண்டார்.

இவரது ராணுவ வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையாக 2002ல் ‘கேசி-135 ஸ்ட்ராட்டோடேங்கர்’ (KC-135 Stratotanker) விமானப் பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டார். போர் விமானங்களின் வான்வழித் தாக்குதல் திறனை நீட்டிக்க, பறந்து கொண்டிருக்கும்போதே மற்றொரு விமானத்திலிருந்து எரிபொருள் நிரப்பும் (Air-to-air refueling) சவாலான பணி அது.

அத்துறையில் மேம்பட்ட பயிற்சி பெற அமெரிக்க ஆகாயப்படையுடன் (USAF) இணைந்து பணியாற்றிய அவர், அங்குப் பெற்ற அனுபவங்களைக் கொண்டு சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படைப் பிரிவை வலுப்படுத்த உதவினார்.

உத்திபூர்வத் திட்டமிடல், அனைத்துலக மனிதநேயப் பணிகள்

செயல்பாட்டுத் தளங்களிலிருந்து உத்திபூர்வ பொறுப்புகளுக்கு நகர்ந்த வேளையில் மாஸ்டர் வாரண்ட் அதிகாரியாகப் பதவி வகித்த திரு பாண்டி, மனிதநேய உதவிகளிலும் பேரிடர் நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.  

2013ல் பிலிப்பீன்சைத் தாக்கிய ‘ஹையான்’ சூறாவளி, விபத்துக்குள்ளான ‘ஏர்ஏஷியா QZ8501’ விமானத்தைத் தேடுதல் போன்ற பணிகளுக்கான உத்திபூர்வராக அவர் முன்னின்று நடத்தினார்.

2023 தேசிய தின அணிவகுப்பில் முக்கியப் பொறுப்பு

திரு பாண்டியின் ராணுவப் பணிச் சாதனைகளில் 2023ஆம் ஆண்டு தேசிய தின அணிவகுப்பின் ரெஜிமென்டல் சார்ஜண்ட் மேஜராக (PRSM) நியமிக்கப்பட்டதும் அடங்கும். அதில் அவர் பாடாங்கில் ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்களை ஒருங்கிணைத்து அணிவகுப்பை வழிநடத்தினார். 

“அது ஒரு கனவு நனவான தருணம், என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்,” என்றார் இவர்.

தற்போதைய இலக்கு

தற்போது, ஆயுதப்படையின் 'சாஃப்வோஸ்’ (SAFWOS) தலைமைத்துவப் பள்ளியில் வழிநடத்தும் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார் திரு பாண்டி. ராணுவத்தின் வாரண்ட் அதிகாரிகள், ராணுவ வல்லுநர்கள் உள்ளிட்டோரைச் சிறந்த தலைவர்களாக வடிவமைக்கும் முக்கியப் பொறுப்பு அவருக்கு உண்டு.

சிங்கப்பூர் ஆயுதப்படை எவ்வளவுதான் நவீன தொழில்நுட்பங்களையும் விமானங்களையும் வழங்கினாலும், வீரர்களின் மன உறுதியை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். மன உறுதி இருந்தால், போரிடும் திறன் தானாகவே வரும்,” என்று திரு பாண்டி கூறினார்.

குறிப்புச் சொற்கள்