சமூகப் பங்களிப்புகளைப் பறைசாற்றிய நோன்பு துறப்பு, இரவு விருந்து நிகழ்ச்சி

சமூகப் பங்களிப்புகளைப் பறைசாற்றிய நோன்பு துறப்பு, இரவு விருந்து நிகழ்ச்சி

3 mins read
515571a5-6e47-4cdc-ac7c-78575ef78a21
கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட சமூகத் தலைவர்கள், தொண்டூழியர்கள், ஆதரவாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். - படம்: தமிழர் பேரவை
multi-img1 of 3

சிங்கப்பூரின் வளர்ச்சிக்கும் சமூக நல்லிணக்கத்துக்கும் அடித்தளமாக விளங்கும் சமூகத்தினரைக் கௌரவிக்கும் வகையில், சமூக நோன்பு துறப்பு மற்றும் இரவு விருந்து நிகழ்ச்சிக்கு தமிழர் பேரவை சனிக்கிழமை (மார்ச் 7) ஏற்பாடு செய்திருந்தது.

கரையோரப் பூந்தோட்டங்களில் அமைந்திருக்கும் ‘ஃபிளவர் ஃபீல்ட்’ மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில் சமூகத் தலைவர்கள், தொண்டூழியர்கள், ஆதரவாளர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இணை அமைப்புகள் தங்களின் திட்டங்களைச் சமூகத்திற்கு எடுத்துரைக்க, சிறப்புக் கண்காட்சிக் கூடங்களை அங்கு அமைத்திருந்தன.

விழாவில் உரையாற்றிய பேரவையின் தலைவர் வெ.பாண்டியன், தொண்டூழியர்களின் சேவையைப் பாராட்டினார்.

“மேடையில் அமரும் சிறப்பு விருந்தினர்களுக்குப் பதிலாக, இங்கு அமர்ந்திருக்கும் ஒவ்வொருவருமே இன்றைய முக்கிய விருந்தினர்களாவர்.

“பல தொண்டூழியர்கள், பங்காளர்கள் நமக்கு ஆதரவாக உள்ளனர்; அவர்களுக்கெல்லாம் நன்றி தெரிவிக்கும் எண்ணத்திலேயே இந்த ஏற்பாட்டைச் செய்தோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் உரையாற்றும் தமிழர் பேரவையின் தலைவர் வெ.பாண்டியன்.
நிகழ்ச்சியில் உரையாற்றும் தமிழர் பேரவையின் தலைவர் வெ.பாண்டியன். - படம்: தமிழர் பேரவை

தமிழர் பேரவை சமூக நோன்பு துறப்பு நிகழ்ச்சியை நடத்துவது இதுவே முதன்முறை எனக் குறிப்பிட்ட அவர், இது ஒவ்வோர் ஆண்டும் தொடரும் என உறுதியளித்தார்.

பேரவையின் துணைத் தலைவரும் விழா ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான ஷெரீன் பேகம், கடந்த 75 ஆண்டுகளாகத் தொண்டூழியர்களாலேயே தங்களது அமைப்பு வளர்ந்துள்ளதைச் சுட்டினார்.

தொடர்புடைய செய்திகள்
நிகழ்ச்சியில் உரையாற்றும் தமிழர் பேரவையின் துணைத் தலைவரும் விழா ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான ஷெரீன் பேகம்.
நிகழ்ச்சியில் உரையாற்றும் தமிழர் பேரவையின் துணைத் தலைவரும் விழா ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான ஷெரீன் பேகம். - படம்: தமிழர் பேரவை

“இளையரணிக்கும் நிர்வாகக் குழுவிற்கும் இடையே பெரிய வேறுபாடு தேவைப்படாத ஒரு கட்டத்தை நாம் அடைந்துள்ளோம். மாறாக, அனுபவமிக்க உறுப்பினர்களும் இளம் தொண்டூழியர்களும் புதிய யோசனைகளுடன் தோளோடு தோள் நின்று செயலாற்றும் ஒரே சமூகமாக நம்மைப் பார்க்கிறோம்,” என்று குமாரி ‌ஷெரீன் கூறினார்.

சிறுபான்மைச் சமூகத்தினர், பரந்த அளவிலான சிங்கப்பூர்ச் சமூகத்துடன் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தைப் பேரவையின் ஆலோசகர் ஆர்.ரவீந்திரன் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றும் தமிழர் பேரவையின் ஆலோசகர் ஆர். ரவீந்திரன்.
நிகழ்ச்சியில் உரையாற்றும் தமிழர் பேரவையின் ஆலோசகர் ஆர். ரவீந்திரன். - படம்: தமிழர் பேரவை

“நாம் நமது சமூகத்திற்குள் மட்டுமே முடங்கிவிடாமல், பரந்த சமூகத்துடன் இணைந்து செயல்படும்போதுதான் ஒரு சிறந்த பிணைப்பு உருவாகும்,” என்ற அவர், கூடுதலான இளையர்கள் தலைமைத்துவப் பொறுப்புகளை ஏற்று விழாக்களின் ஏற்பாடுகளை முன்னின்று நடத்துவதைக் காண்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக, சமூகத்திற்கு ஆற்றிய சேவைகளைப் பாராட்டி, பங்காளித்துவ அமைப்புகள் நினைவுப் பரிசுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன. சிண்டா, தமிழ் முரசு, தேசிய நூலக வாரியம், இந்து அறக்கட்டளை வாரியம் உள்ளிட்ட 24 முக்கிய அமைப்புகளின் பிரதிநிதிகள் அவற்றைப் பெற்றுக்கொண்டனர்.

அவ்வாறு கௌரவிக்கப்பட்ட அமைப்புகளில் ஒன்றான ‘தமிழா’ அமைப்பின் தலைவர் ஃபஹ்மிதா சனா, 22, நமது மொழியையும் பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்ல இளையர்களின் ஈடுபாடு மிகவும் அவசியம் எனக் குறிப்பிட்டார்.

‘தமிழா’ அமைப்பின் 22 வயதுத் தலைவர் ஃபஹ்மிதா சனா (இடது).
‘தமிழா’ அமைப்பின் 22 வயதுத் தலைவர் ஃபஹ்மிதா சனா (இடது). - படம்: தமிழர் பேரவை

சிங்கப்பூரில் இளையர்களால் வழிநடத்தப்படும் ‘தமிழா’ அமைப்பு, தமிழ்க் கலை, கலாசாரம் சார்ந்த தளங்கள் வாயிலாக அவர்களை மேம்படுத்தி வருகிறது. நடனம், இசைக்குழு ஆர்வக் குழுக்களுடன் ‘அத்தியாயம்’ என்ற பெயரில் ஈராண்டுகளுக்கு ஒருமுறை மேடை நாடகத்தையும் அவர்கள் அரங்கேற்றி வருகின்றனர்.

“இளையர்கள் வகுப்பறையைத் தாண்டி நமது மொழியுடனும் கலாசாரத்துடனும் ஈடுபாடு கொள்ளும்போதுதான் அதனைத் தங்களின் அர்த்தமுள்ள அடையாளமாகக் காண்பார்கள்,” என்றார் குமாரி சனா.

பல்வேறு அமைப்புகளின் தலைவர்களைச் சந்திக்கவும் புதிய கூட்டு முயற்சிகளை ஆராயவும் இந்நிகழ்ச்சி ஒரு சிறந்த தளமாக அமைந்ததாகவும் அவர் கூறினார்.

இனிய இரவு விருந்து, இசை, நடன மேடை நிகழ்ச்சிகளுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

குறிப்புச் சொற்கள்