சிங்கப்பூருக்கான இலங்கைத் தூதர் செனரத் திசநாயக்கவை சந்தித்தனர் சிங்கப்பூர் ரத்தின வர்த்தகர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள்.
சங்கத்தின் தலைவர் ரஃபி அகமது மற்றும் நிர்வாகிகள், திரு திசநாயக்கவை செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பின்போது, அண்மையில் நிகழ்ந்த இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கையின் மறுகட்டமைப்பு முயற்சிகளுக்கு ஆதரவாக சங்கம் நிதியுதவி வழங்கியது.
ரத்தின மற்றும் நகைத் துறையில் நெருக்கமான ஒத்துழைப்பு தொடர்பில் நிலவும் வாய்ப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, 2026ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெறவிருக்கும் ‘FACETS‘ இலங்கை ரத்தின, நகைக் கண்காட்சியில் பங்கேற்க வருமாறு சங்கத்திற்கு அழைப்பு விடுத்தார் திரு திசநாயக்க.
சந்திப்பு குறித்து கருத்துரைத்த திரு திசநாயக்க, “சிங்கப்பூர் ரத்தினக்கல் வணிகர்கள் சங்கம் அளித்துள்ள இந்தப் பொருளுதவி, இலங்கை மக்களுக்கு உதவும் நோக்கில் அவர்கள் ஒருங்கிணைந்துள்ளதை வெளிப்படுத்துவதாக உள்ளது,” என்றார்.

