உலக அரங்கில் சிங்கப்பூர்த் தமிழர்களின் கதை

உலக அரங்கில் சிங்கப்பூர்த் தமிழர்களின் கதை

5 mins read
வியந்து பார்த்த வெளிநாட்டுப் பேராளர்கள்
da37547e-0ab7-4fca-af2d-205bde79d7b3
தேசிய நூலக வாரியத்தின் உதவி இயக்குநரும் முதன்மை நூலகருமான திரு அழகிய பாண்டியன் தென்கொரியாவின் பூசான் நகரில் நடந்த அனைத்துலக நூலகர்கள் மாநாட்டில், சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம் உருவான வரலாற்றை விவரித்தார். - படம்: அழகிய பாண்டியன்
multi-img1 of 2
Google News Preferred Icon

கதை சொல்வது எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் வரலாறு பற்றிய கதை என்றால் மகிழ்ச்சியோடு சொல்வேன். அண்மையில் தென்கொரியாவின் பூசான் நகரில் நடந்த அனைத்துலக நூலகர்கள் மாநாட்டில் ஒரு வித்தியாசமான கதைகூறும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.

ஒரு சூழ்நிலையைக் கற்பனை செய்து பாருங்கள் என்ற வரியோடு எனது கதையைத் தொடங்கினேன்.

ஒரு சமூகம் ஒரு நாட்டில் இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகிறது. அந்தச் சமூகம் பற்றிய கதைகள் இருக்கின்றன; புகைப்படங்கள் இருக்கின்றன; நூல்களும் செய்தித்தாள்களும் இருக்கின்றன; ச​மூகம் குறித்த நினைவுகளும் இன்னமும் உயிரோடு இருக்கின்றன.

ஆனால், அந்தச் ச​மூகத்தைச் சேர்ந்த இளையர் ஒருவர் தன் சமூகத்தின் வரலாற்றை அறிய முற்படும்போது, அந்த வரலாறானது நூலகங்கள், ஆவணக் காப்பகங்கள், பழைய செய்தித்தாள்கள், தனியார் சேகரிப்புகள், வாய்மொழிப் பதிவுகள், மூத்தோரின் நினைவுகள் எனப் பல்வேறு இடங்களில் சிதறிக் கிடப்பதைத்தான் அவரால் பார்க்க முடியும்.

அவ்வாறு சிதறிக் கிடப்பவற்றை ஒன்றுதிரட்டி ஒரே இடத்தில் அந்தச் ச​மூகத்தின் வரல​ற்றைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தினால் எப்படி இருக்கும்? அந்தக் கேள்விக்குப் பதிலாக உதித்ததுதான் சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம் (Encyclopedia of Singapore Tamils) என்று எனது கதையைத் தொடங்கினே​ன்.

அந்த மேடையில் நான் ஒரு நூலகத் திட்டத்தை மட்டும் அறிமுகப்படுத்தவில்லை. சிங்கப்பூர்த் தமிழர்களின் வரலாற்றுப் பங்களிப்புகளை ஒருங்கிணைத்த கதையை உலகிற்கு எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தேன்.

சிங்கப்பூரிலிருந்து உலக அரங்கிற்கு…

2026ஆம் ஆண்டுக்கான அனைத்துலக நூலகச் சங்கங்கள், நிறுவனங்களின் கூட்டமைப்பின் (ஐஎஃப்எல்ஏ) மாநாட்டில் 111 நாடுகளைச் சேர்ந்த ஏறக்குறைய 3,200 பேராளர்கள் கலந்துகொண்டனர். 305 பேச்சாளர்களில் நானும் ஒருவன்.

இத்தனை நாடுகளின் அனுபவங்களுக்கு இடையில், நமது சிறிய தீவின் ஒரு சிறிய ச​மூகத்​தின் கதையும் ஒலித்தது.

சிங்கப்பூரின் வளர்ச்சியுடன் தமிழ்ச் சமூகம் இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பின்னிப் பிணைந்துள்ளது. கல்வி, இலக்கியம், அரசியல், சமயம், கலை, பொதுச்சேவை எனப் பல துறைகளில் தலைமுறை தலைமுறையாகத் தமிழர்கள் பங்களித்துள்ளனர்.

ஆனால், அந்த வரலாற்றின் பல பகுதிகள் எளிதில் கண்டறியக்கூடிய வகையில் ஒரே இடத்தில் இருந்ததில்லை.

சில கதைகள் குடும்பங்களுக்குள் இருக்கின்றன. சில புகைப்படங்கள் வீட்டு அலமாரிகளில் உறங்கிக்​ கொண்டிருக்கின்றன. சில தகவல்கள் பழைய செய்தித்தாள்களில் புதைந்திருக்கின்றன. சில நினைவுகள் மூத்த தலைமுறையினரிடம் மட்டுமே இருக்கின்றன. அவையும் பதியப்படாமல் போனால் நமது அனுபவ நினைவுகள் காற்றோடு கரைந்துபோகும்.

நம் கதையை யார் சொல்ல வேண்டும்?

இந்தக் கேள்வியே சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியத்தின் அடிப்படைச் சிந்தனைகளில் ஒன்று.

தேசிய நூலக வாரியமும் சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையமும் இணைந்து உருவாக்கிய சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம், சிங்கப்பூர்த் தமிழர் பாரம்பரியத்திற்கான முதல் இருமொழி மின்னிலக்கக் கலைக்களஞ்சியம்.

ஆனால், சமூகத்தைப் பற்றிய ஒன்றை மட்டும் உருவாக்காமல், சமூகத்துடன் இணைந்து அதை உருவாக்க வேண்டும் என்பதே தொடக்கம் முதலே எங்கள் எண்ணமாக இருந்துவந்தது.

அதனால்தான் 400க்கும் மேற்பட்ட தொண்டூழியர்களை அதில் ஈடுபடுத்தினோம். அவர்களில் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், கலைஞர்கள், சமூகத் தலைவர்கள், துறை வல்லுநர்கள் எனப் பலரும் அடங்குவர்.

தேசிய நூலக வாரியத்தின் உதவி இயக்குநரும் முதன்மை நூலகருமான திரு அழகிய பாண்டியன் தென்கொரியாவின் பூசான் நகரில் நடந்த அனைத்துலக நூலகர்கள் மாநாட்டில், சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம் உருவான வரலாற்றை விவரித்தார்.
தேசிய நூலக வாரியத்தின் உதவி இயக்குநரும் முதன்மை நூலகருமான திரு அழகிய பாண்டியன் தென்கொரியாவின் பூசான் நகரில் நடந்த அனைத்துலக நூலகர்கள் மாநாட்டில், சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம் உருவான வரலாற்றை விவரித்தார். - படம்: அழகிய பாண்டியன்

நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புகளின் பங்களிப்புடன், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளில் ஏறத்தாழ 20,000 மணி நேர உழைப்பின் ​மூலம் உருவானதுதான் இந்தத் திட்டம் என்று நான் கூறியபோது நூலகர்களின் முகங்களில் வியப்பையும் புன்னகையையும் கண்டேன்.

இந்த எண்களுக்குப் பின்னால் இருப்பது ஒரு முக்கியமான நம்பிக்கை - நமது கதைகள் பதிவு செய்யப்பட வேண்டியவை என்ற நம்பிக்கை.

வாழும் வரலாறான மூத்த குடிமக்கள்

ஒரு சமூகத்தைப் பற்றிய அறிவு நூலகங்களிலோ, அமைப்புகளிடமோ மட்டும் இருப்பதில்லை. அது மக்களிடமும் வாழ்கிறது.

ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் இன்று இல்லாத ஒரு பள்ளியின் கதையை அறிந்திருக்கலாம். பொதுச் சேகரிப்புகளில் இல்லாத பழைய புகைப்படங்கள் ஒரு குடும்பத்திடம் இருக்கலாம். சமூகத்தில் முக்கியப் பங்காற்றியிருந்தும் வரலாற்றில் போதிய அளவு பதிவு செய்யப்படாத ஒருவரைப் பற்றிய நினைவுகள் இன்னொருவரிடம் இருக்கலாம்.

இத்தகைய நினைவுகள் எளிதில் மறைந்துபோகக்கூடியவை.

அதனால்தான் நம் பெற்றோரிடமும் தாத்தா பாட்டியிடமும் கேள்விகளைக் கேட்பது முக்கியம். அவர்கள் வாழ்ந்த வட்டாரங்கள், படித்த பள்ளிகள், செயல்பட்ட அமைப்புகள், சந்தித்த மனிதர்கள் பற்றிக் கேட்டறிய வேண்டும். பழைய புகைப்படங்களை எடுத்துப் பார்த்து, அவற்றின் பின்னாலுள்ள கதைகளைப் பதிவுசெய்ய வேண்டும்.

இன்று ஒரு குடும்பத்தின் சாதாரண நினைவாகத் தோன்றுவது, நாளை சிங்கப்பூர் வரலாற்றின் முக்கியத் தடயமாக இருக்கலாம்.

மின்னிலக்க உலகிலும் தமிழ் வாழ வேண்டும்

சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம் ஓர் இருமொழிக் கலைக்களஞ்சியம் என்பதும் முக்கியமானது.

தமிழ் சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழிகளில் ஒன்று. நமது பாரம்பரியத்தைப் பாதுகாக்கும்போது, முக்கியமான அனைத்தும் உருவாக்கப்பட்ட பிறகு சேர்க்கப்படும் மொழிபெயர்ப்பாக மட்டும் தமிழ் இருக்கக்கூடாது.

மின்னிலக்க அறிவுலகிலும் தமிழுக்குச் சமமான இடம் இருக்க வேண்டும்.

இன்றைய இளையர்கள் உலகை அதிகமாகத் திரைகளின் வழியாகவே சந்திக்கின்றனர். எனவே, தமிழ் வீட்டிலும் வகுப்பறையிலும் மட்டும் வாழ்ந்தால் போதாது. வரலாறு, ஆய்வு, பண்பாடு, அறிவு ஆகிய மின்னிலக்கத் தளங்களிலும் அது நம்பிக்கையுடன் இடம்பெற வேண்டும்.

உயிருடன் வளரும் நம் வரலாறு

கடந்த ஆகஸ்ட் அறிமுகமான சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம், இந்த ஓராண்டில் கிட்டத்தட்ட 50,000 பக்கப் பார்வைகளைப் பெற்றுள்ளது. ஆனால், அதன் வெற்றியை இதுபோன்ற எண்களால் மட்டும் அளந்துவிட முடியாது.

தமிழ் இளையர் ஒருவர் தமக்கு முந்தைய தலைமுறையைப் பற்றி புதிதாக ஒன்றைக் கண்டறியும் தருணம்; தமிழ்ச் சமூகத்தைச் சாராத ஒருவர் சிங்கப்பூர்த் தமிழர் வரலாறு நாட்டின் வரலாற்றுடன் எவ்வளவு ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளது என்பதை உணரும் தருணம் - அவையே இதன் உண்மையான பயன்.

மேலும், சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம் முற்றுப்பெற்ற கலைக்களஞ்சியம் அன்று! புதிய பதிவுகளைச் சேர்க்கலாம்; ஏற்கெனவே உள்ளவற்றை மேம்படுத்தலாம்; புதிய கண்டுபிடிப்புகளை இணைக்கலாம். சமூகம் வளர்வதைப் போல அதன் வரலாற்றுப் பதிவும் தொடர்ந்து வளர முடியும்.

அடுத்த அத்தியாயம் நம் கைகளில்!

நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் பேராளர்கள் முன்னிலையில் சிங்கப்பூர்த் தமிழர்களின் அனுபவத்தைப் பகிர்ந்தது எனக்குப் பெருமையான தருணம்.

அதே நேரத்தில், ஒரு முக்கியமான உணர்வுடனும் திரும்பினேன்.

நமது பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் பணி ஒரு கலைக்களஞ்சியத்துடன் முடிந்துவிடுவதில்லை.

இன்னும் சொல்லப்படாத கதைகள் இருக்கின்றன. குடும்பப் புகைப்படத் தொகுப்புகளில் வரலாறு இருக்கிறது. நினைவுகூரப்பட வேண்டிய மனிதர்கள் இருக்கிறார்கள். எந்த இணையத் தேடுபொறியாலும் கண்டுபிடிக்க முடியாத நினைவுகள் நம் மூத்தோரிடம் இருக்கின்றன.

நூலகங்கள் ஆவணங்களைப் பாதுகாக்கலாம். தொழில்நுட்பம் தகவல்களை இணைக்கலாம். ஆய்வாளர்கள் வரலாற்றைப் பதிவு செய்யலாம்.

ஆனால், சமூகங்கள்தான் வாழ்ந்த அனுபவங்களின் நினைவுகளைத் தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்கின்றன.

அவை அனைத்தும் ஒன்றிணையும்போது நாம் தகவல்களை மட்டும் பாதுகாப்பதில்லை. நாம் யார் என்ற அடையாளத்தையும் பாதுகாக்கிறோம்.

நமது சமூகத்தின் வரலாற்றை நமக்காக வேறு யாரோ பாதுகாத்துத் தருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

இது நம் கதை. நாம் நினைவில் வைத்திருக்க வேண்டிய கதை.

நாம் பங்களித்து வளர்க்க வேண்டிய கதை. அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டிய கதை.

சிறுபான்மைச் ச​மூகத்தின் வரலாற்றைப் பதிவு செய்யும் சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம், உலகின் மற்ற பகுதிகளில் உள்ள சிறுபான்மைச் சமூகங்கள், புலம்பெயர் சமூகங்கள், வரலாறு அதிகம் பதியப்படாத சமூகங்கள் ஆகியவற்றுக்கும் பொருந்தும் என்ற செய்தியை என் கதையின் நிறைவில் பதிய வைத்தேன்.

இதுபோன்ற ஒரு கலைக்களஞ்சிய முயற்சியை நாமும் முயன்று பார்க்கலாமே என்ற எண்ணத்தை உலகம் தழுவிய நூலகர்களிடம் விதைத்த நிறைவில் சிங்கை திரும்பினேன்.

அழகிய பாண்டியன்
குறிப்புச் சொற்கள்
தேசிய நூலக வாரியம்கலைக்களஞ்சியம்சிங்கப்பூர்தமிழர்தென்கொரியா