தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘சமூகம் பெண்மையைப் போற்றுவது அவசியம்’

3 mins read
a4b4a0f7-f8d7-413b-b7f4-13fd22016d10
சிறப்புப் பேச்சாளர் எம்.பி. நாதன், தமிழ் மொழி பண்பாட்டுக் கழகத் தலைவர் திரு ஹரிகிருஷ்ணன் முத்துசாமி உடன் ஔவையார் விழா ஏற்பாட்டுக் குழுவினர். - படம்: லாவண்யா வீரராகவன்

பெண்ணையும் பெண் உரிமையையும் போற்றுவதைவிட இந்தச் சமூகம் பெண்மையைப் போற்றுவது அவசியம். 2023ஆம் ஆண்டு ஔவையார் விருது பெற்ற செல்வி சித்ரா துரைசாமி இவ்வாறு கூறினார்.

தமிழ் முரசு நாளிதழில் பத்திரிகையாளராகத் தொடங்கி இன்று நற்பணித் தமிழ்ப் பேச்சாளர் மன்றத்தின் நிறுவனத் தலைவராகவும் மக்கள் கழக நற்பணிப் பேரவையின் புரவலராகவும் இருக்கும் இவர், “அனைவரும் ஔவை வழிப்படி அறத்தின்பால் நடந்தால் வாழ்க்கை அழகாகும், மேன்மையும் அடையும் என்பது எனது கருத்து,” என்றார்.

(இடமிருந்து) தமிழ் மொழி பண்பாட்டுக் கழக உறுப்பினர் முனைவர் சீதாலட்‌சுமி, கழகத் தலைவர் திரு ஹரிகிருஷ்ணன் முத்துசாமி, ஔவையார் விருதுபெற்ற செல்வி சித்ரா துரைசாமி, ‘ரோசஸ் ஆஃப் பீஸ்’ நிறுவனரும், முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினருமான திரு முகம்மது இர்ஷாத், கழகத்தின் இரண்டாம் துணைத் தலைவி திருவாட்டி பத்மினி செல்லைய்யா.
(இடமிருந்து) தமிழ் மொழி பண்பாட்டுக் கழக உறுப்பினர் முனைவர் சீதாலட்‌சுமி, கழகத் தலைவர் திரு ஹரிகிருஷ்ணன் முத்துசாமி, ஔவையார் விருதுபெற்ற செல்வி சித்ரா துரைசாமி, ‘ரோசஸ் ஆஃப் பீஸ்’ நிறுவனரும், முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினருமான திரு முகம்மது இர்ஷாத், கழகத்தின் இரண்டாம் துணைத் தலைவி திருவாட்டி பத்மினி செல்லைய்யா. - படம்: தமிழ் மொழி பண்பாட்டுக் கழகம்

தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் 2023ஆம் ஆண்டிற்கான ஒளவையார் விழா, ஆகஸ்ட் 13ஆம் தேதியன்று பீட்டி சாலையில் உள்ள உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்றது.

பொதுச் சேவை விருது, பொதுச் சேவை நட்சத்திர விருது ஆகிய இரு தேசிய தின விருதுகளைப் பெற்றுள்ள சித்ரா துரைசாமி, இந்த ஆண்டிற்கான ஔவையார் விருதைப் பெற்றார்.

‘ரோசஸ் ஆஃப் பீஸ்’ அமைப்பின் நிறுவனரும், முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினருமான திரு முகம்மது இர்ஷாத் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இவ்விழாவில் வழக்கறிஞரும், எழுத்தாளருமான திரு எம்.பி. நாதன் ஒளவையின் திறன், அவரின் தமிழ்த் தொண்டு, தமிழ்ப் பண்பாடு, மொழியின் சிறப்பு ஆகியன குறித்து சொற்பொழிவாற்றினார்.

பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட ஆத்திசூடி, மூதுரை, கொன்றை வேந்தன் ஆகியவற்றை மனனம் செய்து ஒப்புவிக்கும் போட்டிகள், வண்ணம் தீட்டும் போட்டி ஆகியவற்றில் சிறப்பாகப் பங்காற்றி வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசளித்த திரு எம்.பி. நாதன், “காலங்கள் தாண்டி, கடல் கடந்து தமிழ் மொழி சிறந்து விளங்குவது மகிழ்வூட்டுகிறது. இளைய தலைமுறையினருக்கு மொழி குறித்த வேட்கையை உருவாக்கும் நோக்கில் செயல்படும் இதுபோன்ற தளங்களுக்கு நான் வாய்ப்பு கிடைக்கும்பொழுதெல்லாம் உறுதுணையாக இருப்பேன்,” என்றார்.

ஒப்புவித்தல், ஓவியம், கட்டுரை, பேச்சு என அனைத்துப் போட்டிகளுடன் பரிசளிப்பு விழாவையும் ஏற்பாட்டுக்குழுத் தலைவராகச் செயல்படுத்திய திருவாட்டி கோவிந்தராஜூ சுமதி, 42, கூறுகையில் “இப்போட்டிகளில் நடுவராக சிங்கப்பூரைச் சேர்ந்த 35 தமிழாசிரியர்கள் கலந்துகொண்டனர். மேலும், 60 தொண்டூழியர்கள் பங்காற்றியுள்ளனர்,” என்றார்.

ஜூலை 8ஆம் தேதி போட்டிகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து ஆகஸ்ட் 6ஆம் தேதியன்று போட்டிகள் நடைபெற்றன. பங்குபெற்ற மாணவர்களில் 150 மாணவர்கள் வெற்றிபெற்றுள்ளனர். ஒரு பள்ளிக்கு 2 பேர் என 420 பேர் கலந்துகொண்டாலும், மேலும் பல பெற்றோர்கள் போட்டிகளில் பங்குபெற ஆர்வம் தெரிவித்தனர் என்றார் விழா ஏற்பாட்டுக்குழுவின் துணைத் தலைவர் 43 வயது அழகு தெய்வானை.

பாரதி மன்றப் பேச்சாளரின் உறுப்பினரான திரு பாரதி செல்வன் பரமசிவம், “தமிழார்வமுள்ள அனைவருக்கும் பேச்சுத் திறமையையும் தலைமைத்துவப் பண்புகளையும் வளர்த்துக்கொள்ள வாய்ப்பளிக்கும் பேச்சாளர் மன்றத்தை இவ்விழா மூலம் தெரியப்படுத்தியுள்ளோம்,” என்றார்.

ஆத்திசூடி ஒப்புவிக்கும் போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசு பெற்றுள்ள சகோதரர்கள் அன்பழகன் அலங்காரன் (10), அறநேசன் அலங்காரன் (6), “இப்போட்டிக்காக ஒரு வாரம் படித்தோம். எங்கள் தாயார் தான் சொல்லிக்கொடுத்தார். ஆசிரியர்களும் ஊக்கமளித்தனர்,” என்றனர்.

ஆத்திசூடி ஒப்புவித்து இரண்டாம் பரிசு வென்ற தொடக்கப்பள்ளி இரண்டு மாணவி சம்ருத்தி சந்திரசேகர், “50 ஆத்திசூடி ஒப்புவித்துப் பரிசு வாங்கியுள்ளேன். மிக்க மகிழ்ச்சி,” என்றார்.

தொடக்கநிலை மூன்றில் பயிலும் வேலாயுதம் சித்தார்த், “நானும் முதல் பரிசு வாங்கியுள்ளேன். எனக்கு இது பெருமையாக இருக்கிறது,” என்றார்.

வண்ணம் தீட்டும் போட்டியில் வெற்றிபெற்றுள்ள பாலர் பள்ளி மாணவி லிக்‌ஷிகாவின் தாயார் செல்வம் சுகன்யா, “இயல்பாக வண்ணங்களின் மேல் ஆசையுள்ள லிக்‌ஷிகாவை இந்தப் பரிசு ஊக்குவித்துள்ளது மகிழ்ச்சி,” என்றார்.

“பெண்களைச் சிறப்பித்து, பெண்களின் ஆளுமையை வெளிக்கொணர்வதுதான் இவ்விழாவின் நோக்கம். வெறும் பேச்சளவில் இருக்கும் பெண்களின் உரிமையைச் செயலில் கொண்டுவர இவ்விழா நடத்தப்படுகிறது. மாணவர்களுக்கு நம்மிடமுள்ள சிறந்த பண்புநலன்களை போதிப்பதற்கு இந்தப் போட்டிகள் வழிவகுக்கும் என நம்புகிறோம்,” என்றார் தமிழ் மொழி பண்பாட்டுக் கழகத் தலைவர் திரு ஹரிகிருஷ்ணன் முத்துசாமி.

குறிப்புச் சொற்கள்