உள்ளூர் தொலைக்காட்சி நாடக ஆசிரியரும், நடிகரும், இயக்கு நருமான முஹம்மது அமீனுக்கு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் இவ்வாண்டிற்கான கண்ணதாசன் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது.
இந்த விழா 25ஆவது ஆண்டாக, உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் கடந்த சனிக்கிழமையன்று (நவம்பர் 18) நடந்தேறியது. நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 150 பேர் கலந்துகொண்டனர்.
மூன்று ஆண்டுப் பரிந்துரைக்குப் பின் விருது பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைவதாக, விருது ஏற்புரையின்போது கூறினார் 37 வயதான திரு அமீன்.
“எல்லாவித பாராட்டுகளும் சிறப்புக்குரியன என்றாலும் சக கலைஞர்களிடமிருந்து பெறப்படும் இந்தப் பாராட்டு கூடுதல் சிறப்புக்குரியது. என்னைப் போன்ற வளரும் எழுத்தாளர்களை அடையாளம் கண்டு, அங்கீகாரம் வழங்கி கௌரவிப்பது பேரூக்கத்தை அளிக்கிறது,” என்றார் திரு அமீன்.
தமக்குத் தமிழார்வத்தை ஊட்டிய தாத்தாவுடன் பெற்றோர், மனைவி ஆகியோருக்குத் திரு அமீன் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
‘உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு’ என்ற பாடல் வரிகளை வெறும் வரிகளாக மட்டும் நினைக்காமல் வாழ்க்கைத் தத்துவமாகக் கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.
இவ்விழாவை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட கண்ணதாசன் பாட்டுத் திறன் போட்டி இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது. சனிக்கிழமை விழாவின்போது நடைபெற்ற பாட்டுப் போட்டியின் இறுதிச் சுற்றுகளில் சிறார்கள், கண்ணதாசன் பாடல்களைப் பாடி பார்வையாளர்கள் பலரையும் மலரும் நினைவுகளில் ஆழ்த்தினர்.
14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சம்ரிதி சஞ்சீபன், தயாள குணதாசன் அனந்தசயன், மானஸா தீபன் ஆகியோர் முறையே முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகளைப் பெற்றனர். 14 வயதுக்கும் மேலோருக்கான பிரிவில் சுப்ரியா ராஜன், ஸ்ரீ வர்ஷினி, சௌமியா பாண்டுரங்கன் ஆகியோர் முறையே முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகளைப் பெற்றனர்.
தொடர்புடைய செய்திகள்
அத்துடன், எழுத்தாளர் கழகத்தின் முன்னாள் தலைவர் அமரர் சுப. அருணாசலம் நினைவாக நடத்தப்பட்ட பாடல் எழுதும் போட்டியின் முடிவு கண்ணதாசன் விழாவில் அறிவிக்கப்பட்டது.
ஜோஸ்கோ பயண ஏற்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் புரவலருமான நாகை தங்கராசு நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பு உரையை கவிஞர் கண்ணதாசனின் மகன் டாக்டர் கண்ணதாசன் இராமசாமி ஆற்றினார். அவர், தம் தந்தையைப் பற்றிய சுவையான அனுபவக் கதை[Ϟ]களைப் பகிர்ந்ததுடன், தாம் சுவைத்து மகிழ்ந்த பாடல், கவிதை வரிகளையும் குறிப்பிட்டார். தம் தந்தையாரின் கவித்துவம் இன்றளவும் போற்றப்பட்டு வருவதைக் கண்டு மனம் நெகிழ்வதாக அவர் சொன்னார்.


