தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘என் வாழ்வும் வளமும் தமிழ் தந்தவை’

3 mins read
லோகஷிவாணி ஜெகநாதன்
dd453cd5-218a-4454-8bde-18fcc20f7c19
தமிழ் மீதான முஹம்மது அமீனின் ஆழ்ந்த ஈடுபாடும் இவரது பங்களிப்பும், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் இவ்வாண்டுக்கான கண்ணதாசன் விருதைப் பெற்றுத் தந்தன .  - படம்: முஹம்மது அமீன்
இளையர்கள் தமிழ் மொழியை அதிகம் பயன்படுத்தாத இக்காலகட்டத்தில், அதன் சிறப்பை இன்றைய சூழலுக்கு ஏற்ப, செறிவூட்டல் நிகழ்ச்சிகளின் மூலம் அவர்களுக்கு உணர்த்துதுவது அவசியம் என நம்புகிறார் முஹம்மது அமீன். 
இளையர்கள் தமிழ் மொழியை அதிகம் பயன்படுத்தாத இக்காலகட்டத்தில், அதன் சிறப்பை இன்றைய சூழலுக்கு ஏற்ப, செறிவூட்டல் நிகழ்ச்சிகளின் மூலம் அவர்களுக்கு உணர்த்துதுவது அவசியம் என நம்புகிறார் முஹம்மது அமீன்.  - படம்: முஹம்மது அமீன்

உளவியல் பாடத்தில் பட்டம் பெற்றிருந்தாலும், அத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகளைப் புறந்தள்ளி, தமிழின் மீது உள்ள பற்றால் ஊடகக் துறையில் காலெடுத்து வைத்தார் உள்ளூர் தொலைக்காட்சி நாடக ஆசிரியரும் நடிகரும் இயக்குநருமான முஹம்மது அமீன், 37.

இவரது அம்முடிவிற்கு குடும்பத்தினரும் நண்பர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், தமிழ் மொழியின் மீது வைத்திருந்த நம்பிக்கை இவர் அந்த முடிவிலிருந்து பின்வாங்காமலிருக்கக் கைகொடுத்தது.

தமிழ் மீதான ஆழ்ந்த ஈடுபாடு, தமிழுக்கான இவரது பங்களிப்பு ஆகியவற்றுக்காக சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம், நவம்பர் 18ஆம் தேதி, உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் ஏற்பாடு செய்திருந்த கண்ணதாசன் விழாவில், இவருக்கு கண்ணதாசன் விருது வழங்கிச் சிறப்பித்தது.

தன்னைப் போன்ற இளையர்களை அடையாளம் கண்டு அங்கீகரிப்பது, பெரிய ஊக்கத்தைக் கொடுக்கிறது என்கிறார் அமீன்.

தமிழ் சினிமாவில் அதிக நாட்டம் கொண்ட இவருக்கு, சிறு வயதிலேயே தமிழ் மீதான ஈடுபாட்டையும் நாடகங்களில் நடிக்கும் ஆசையையும் புகுத்தியவர் இவரின் தந்தை.

இந்த ஆசையை நிறைவேற்றும் விதமாக, சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் பட்டக்கல்வி மேற்கொண்டிருந்தபோது, ‘சங்கே முழங்கு’ கலைநிகழ்ச்சியில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டார் அமீன்.

இந்த வாய்ப்பு, இவர் நாடகங்களில் பங்கேற்பதற்கு அடித்தளமாக அமைந்தது. தொடர்ந்து, அவாண்ட் நாடகக் குழு, ரவீந்திரன் நாடகக் குழு போன்றவற்றில் சேர்ந்து தனது நடிப்பு அனுபவத்தை மெருகேற்றிக்கொண்டார்.

பின்னர், நெடுந்தொடர்கள், நிகழ்ச்சிகளுக்குக் கதைகள், திரைக்கதை வசனங்கள், உரையாடல்கள் போன்ற படைப்புகளை எழுதத் தொடங்கினார்.

‘மார்ஸ் போயி சேர்ந்துட்டோம்’ என்ற தொடர் நாடகத்திற்கு வசனங்கள், ‘தீர்ப்புகள்’ என்ற தகவல் கல்வித் தொடரின் ஒரு பகுதிக்கு உரையாடல், ‘நினைவிருக்கும் வரை’ என்ற அன்னையர் தின சிறப்புத் தொலைக்காட்சித் திரைப்படத்திற்கு வசனங்கள் போன்றவை இவரது 25க்கு மேற்பட்ட படைப்புகளில் சில.

தமிழ் மொழி மீதான பற்றுதான் இவரைத் தமிழில் படைக்கத் தூண்டியது. இத்தகைய மொழிப்பற்றை இளையர்களுக்குப் புகுத்தும் நோக்கில் இவர், “என்ரிச்மெண்ட் ஒர்க்ஸ்” என்ற பெயரில் பேச்சாற்றல், நாடகக்கலை தொடர்பான செறிவூட்டல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்நிகழ்ச்சியின் மூலம், தமிழை ஆர்வமூட்டும் வகையில் இளையர்களுக்குக் கற்றுத்தருகிறார்.

இளையர்கள் தமிழ் மொழியை அதிகம் பயன்படுத்தாத இக்காலகட்டத்தில், அதன் சிறப்பை இன்றைய சூழலுக்கு ஏற்ப செறிவூட்டல் நிகழ்ச்சிகளின் மூலம் நடத்துவது அவசியம் என அமீன் நம்புகிறார்.

தமிழுக்கு மேலும் பணியாற்றும் விதத்தில், மேலும் சில சுவாரசியமான நிகழ்ச்சிகளை நடத்த தேசிய நூலகம் மற்றும் கல்வி அமைச்சுடன் இணைந்து செயல்பட விரும்புகிறார் இவர். இதன் மூலம் இளையர்கள் தமிழின் சிறப்பை நன்கு அறிய முடியும் என்கிறார் இவர்.

பாரதியார், கண்ணதாசன், நா. முத்துக்குமார் போன்ற கவிஞர்களின் படைப்புகளை மிகவும் ரசித்து அவற்றின் சுவையை உள்வாங்கும் இவர், “இன்று வரை, தமிழ் என்னைக் கைவிடவில்லை. இன்றும் பல வாய்ப்புகள், வாழ்வாதாரம், சமூகத்தில் ஓர் அடையாளம், மரியாதை எல்லாம் தமிழ் எனக்குத் தந்தவை,” என்று பெருமிதத்துடன் கூறுகிறார் முஹம்மது அமீன்  .

குறிப்புச் சொற்கள்