தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் கடந்த 19ஆம் தேதி அதன் 17ஆவது ‘இலக்கியவனம்’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன் தலைமையில் கேர்ன்ஹில் சமூக மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பத்துப்பாட்டு நூல்களுள் முதலாவதான திருமுருகாற்றுப்படை பற்றியதாக அமைந்தது.
மொத்தம் 317 அடிகள் கொண்ட இந்த நூலை, நடுவர் உள்ளிட்ட ஐந்து பேச்சாளர்கள் விளக்கினர்.
நிகழ்வு இம்முறை சோழன் பேச்சாளர் மன்ற மாதாந்திரக் கூட்டத்தின் ஓர் அங்கமாக நடைபெற்றது.
முனைவர் சரோஜினி திருமுருகாற்றுப்படை பற்றிய அறிமுகத்தோடு சிறப்பாக உரையாற்றி இலக்கியவனத்தைத் தொடங்கி வைத்தார். பேச்சாளர்கள் குந்தவை, கார்த்திக் சிதம்பரம், உமாசங்கர், அனுராதா, கேத்திரபாலன் ஆகியோர் திருமுருகாற்றுப்படையின் பெருமைகளையும் அதன் பாடல்களையும் அந்தப் பாடல்களின் இலக்கிய சுவையையும் மிகத் திறம்பட எளிமையான முறையில் நகைச்சுவையோடு விளக்கினர்.
தொடர்ந்து முனைவர் சரோஜினி திருமுருகாற்றுப்படை பாடல்களை இன்னும் பல செய்யுள்களோடு இணைத்து பார்வையாளர்களுக்குப் புரியும் வகையில் எடுத்துக்காட்டுகள் கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
நிகழ்ச்சிக்கு 40க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை புரிந்தனர்.
திருமுருகாற்றுப்படைக்குப் பொழிப்புரையை முனைவர் சரோஜினி எழுதுவார்களேயானால் அந்தப் புத்தகத்தை தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் வெளியிடும் என்று தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் ஹரிகிருஷ்ணன் முத்துசாமி அறிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அடுத்த இலக்கியவனம் நிகழ்ச்சி ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என ஏற்பாட்டுக்குழுவினர் அறிவித்தனர்.