நவீன சிங்கப்பூரின் தந்தை திரு லீ குவான் யூவின் நூற்றாண்டு விழா இவ்வாண்டு களம் காணும் வேளையில் தமது கலைப் படைப்புவழி புகழ் அஞ்சலியாக திரு லீக்கு மரியாதை செலுத்தி உள்ளார் கட்டடவியல் கலைஞர் தமிழரசன் சண்முகானந்தம், 27.
திரு லீயின் 100வது பிறந்தநாளின் நினைவாக இவர் தம் கைப்பட எழுதிய எழுத்துகளைக் கொண்டு உருவாக்கிய ஆகப்பெரிய உருவப்படம், சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
“மறைந்த தலைவருக்குச் சிறப்புமிக்க மரியாதை செலுத்தக் கடப்பாடு கொண்டுள்ள எண்ணத்தின் விளைவாகவே 100,000 எழுத்துருக்களில் இந்த லீ குவான் யூ உருவப்படத்தைத் தீட்டினேன்.
“திரு லீ சிங்கப்பூரைக் கட்டமைத்தவர். அதனால் அவரது உருவப்படம் முழுவதையும் சிங்கப்பூரின் பெயரைக் கொண்டே கட்டமைக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்,” என ஓவியம் உருவான பின்னணியைக் குறிப்பிட்டார் தமிழரசன்.
சிதறாத கவனம், தொய்வில்லா உழைப்பு, சாதனை படைக்கும் துடிப்பு என ஏறத்தாழ 52 மணி நேர உழைப்பில் உருவானதே திரு லீயின் உருவப்படம் என்று விவரித்தார் அவர்.
திரு லீ குவான் யூ உருவப்படத்துக்குச் சாதாரண கறுப்பு மை கொண்ட பேனாவைத் தூரிகைக் கோலாகப் பயன்படுத்தியதாக தமிழரசன் கூறினார்.
உலகத் தலைவர்கள் வரிசையில் திரு லீ குவான் யூவின் உருவப்படமே தமது முதலாவது படைப்பு என்றார் இவர்.
தமது அன்றாட அலுவல்களை முடித்த பிறகு ஒவ்வொரு நாளும் குறைந்தது பத்து மணி நேரம் செலவழித்து அதிகாலை இரண்டு, மூன்று மணி வரையிலும் படைப்பின்மீது தம் முழுக் கவனத்தையும் செலுத்தியதாக இவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
தவறிழைத்துவிடக்கூடாது, துல்லியமாக இருப்பது அவசியம் என்றவாறு இந்த நுண்கலைப் படைப்பை முடிக்கும் இலக்குடன் செயல்பட்டார் தமிழரசன்.
“பத்து மணிநேர உழைப்புக்குப் பிறகு ஒரு சிறிய பகுதிதான் முடிந்திருக்கும். ஆனாலும், இறுதியில் படம் எப்படி இருக்கும் என்பதை மனக்கண்ணில் கண்டு அதை ரசித்தவாறே ‘சிங்கப்பூர்’ என்ற சொல்லை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி இந்த உருவப்படத்தை வரைந்தேன்,” என்று இவர்விளக்கினார்.
தமிழ்நாட்டின் வேதாரண்யத்தில் படிப்பை முடித்த காலத்தில் தாம் முதன்முறையாக 1,330 திருக்குறள்களையும் எழுதியவாறு திருவள்ளுவர் ஓவியத்தை உருவாக்கியதாக நினைவுகூர்ந்தார் இவர்.
சிறுவயதில் ஓவியம் தீட்டுவதில் தொடங்கிய ஆர்வம், பிறகு மரத்தால் ஆன கைவினைக் கலைப்பொருள்களை உருவாக்குதல், கூரான பென்சில் முனை கொண்டு சித்திரங்கள் வரைதல், ‘பாப் அப்’ அட்டைகள் தயாரித்தல், நீண்ட காகிதச் சுருள்களால் வண்ணமயமான படைப்புகளை உருவாக்குதல் (paper quilling) எனப் பல்வேறு கலைப்படைப்புகளை உருவாக்கும் பயணத்தில் தம்மைக் கொண்டுசென்றதாக தமிழரசன் கூறினார்.
தாம் வரைந்த சிங்கப்பூரின் வானுயர்ந்த கட்டடங்களின் ஓவியம் தமது அலுவலகச் சுவரை நிரந்தரமாக அலங்கரிப்பதாகவும் பெருமிதத்துடன் இவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, தமிழரசனின் அலுவலக நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான மாக்ஸ் ஷி, “எழுத்துகளைக் கொண்டு உருவாகியுள்ள லீ குவான் யூ உருவப்படம் வெளிநாட்டு ஊழியரான தமிழரசனின் புத்தாக்கத் திறனைக் காட்டுகிறது. இத்தகைய திறனாளர்களை ஆதரிப்பது முக்கியம்,” என்று குறிப்பிட்டார்.