சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஏற்பாடு செய்திருந்த மலேசிய இலக்கியச் சுற்றுலாவின் ஓர் அங்கமாக ஜோகூர் தமிழ் இலக்கியக் கழகத்துடன் ஒரு சந்திப்பும் கலந்துரையாடலும் நடைபெற்றன.
ஜோகூரில் உள்ள தேசாரு கடற்கரையில் உள்ள லோட்டஸ் மனமகிழ் விடுதியில் அந்தச் சந்திப்பு இடம்பெற்றது. சிங்கப்பூரிலிருந்து ஜூலை 6ஆம் தேதி காலை 27 பேர் கொண்ட குழு, இரு சிற்றூர்திகளில் பயணம் மேற்கொண்டது.
பின்னர் மாலை நான்கு மணி அளவில் அந்த விடுதியின் ஓர் அறையில் சிங்கப்பூர், மலேசிய எழுத்தாளர்களின் கலந்துரையாடலுடன் ஒரு பட்டிமன்றமும் மிகச் சிறப்பாக நடந்தேறியது.
ஜோகூர் மாநில தமிழ் இலக்கியக் கழகத் தலைவர் முனைவர் தமிழ்மணி சி வடிவேலு, தானே எழுதி மெட்டமைத்த தமிழ் வாழ்த்துப் பாடலை மிக இனிமையாகப் பாடியது அனைவரையும் கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து அந்த அமைப்பின் செயலாளர் முனைவர் சு இரவிச்சந்திரன் வரவேற்புரை ஆற்றினார்.
வெள்ளியூரான் கவிஞர் வீ அப்பண்ணா வாழ்த்துக் கவிதை வாசித்த பிறகு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் திரு நா ஆண்டியப்பன் இலக்கியச் சுற்றுலாவின் நோக்கத்தையும், இணைந்து பங்காற்றிய ஜோகூர் மாநிலத் தமிழ் இலக்கியக் கழகத்திற்கு நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.
பின்னர் சிறப்புரை ஆற்றிய திரு சி வடிவேலு, ஜோகூர் மாநிலத் தமிழ் இலக்கியக் கழகத்தின் செயல்பாடுகளைக் குறிப்பிட்டதோடு, சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தோடு இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர், மலேசிய இலக்கிய உறவுகள் பற்றி சிறு கலந்துரையாடல் ஒன்றும் நடந்தேறியது.
சிங்கப்பூரின் சார்பில் திரு பொன் சுந்தரராசு, முனைவர் இரத்தின வேங்கடேசன், ஆசிரியர் அர்ச்சுனன், திரு. பி. மதியழகன் உள்ளிட்டோரும் மலேசியத் தரப்பில் சிலரும் கலந்துரையாடலில் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
அதன் பிறகு பட்டிமன்றம் ஒன்று இடம்பெற்றது. ‘தமிழ்த் திரைப்படங்கள் நமக்குக் காட்டும் வழி - இன்புற்று மகிழவே’ என்று சிங்கப்பூர் அணியும், ‘பின்பற்றி வாழவே’ என்று மலேசிய அணியும் சிறப்பான வாதங்களை முன்வைத்து பட்டிமன்றத்தைக் கலகலப்பாக்கினர்.
சிங்கப்பூர் அணியில் முனைவர் இரத்தின வேங்கடேசன், ஆசிரியர் அர்ச்சுனன், திருவாட்டி மஹாஜபீன் ஆகியோரும் மலேசிய அணியில் ஆசிரியர் திரு புண்ணியநாதன் சுப்பையா, திருவாட்டி இராசாத்தா இராமன், திருவாட்டி அனிதா கிருஷ்ணனும் பேசினர்.
இறுதியில் நடுவர் திரு. நா. ஆண்டியப்பன் எல்லாவற்றிலும் நல்லதும் கெட்டதும் இருப்பதுபோல் திரைப்படங்களிலும் நல்லதும் கெட்டதும் உண்டு என்றும் கெட்டதைப் புறக்கணித்து நல்லதை மட்டுமே எடுத்துக்கொள்வது திரைப்பட ரசிகர்களின் பொறுப்பு என்றும் கூறினார்.
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் துணைத் தலைவர் திரு முத்துமாணிக்கத்தின் இனிதான நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

