சிங்கப்பூர் இலக்கியப் பரிசுக்காக 71 எழுத்துப் படைப்புகளுடன் 69 எழுத்தாளர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
எழுத்தாளர்களில் பத்துப் பேர், தமிழ்மொழிப் படைப்புகளுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர்ப் புத்தக மன்றம் புதன்கிழமை (ஜூலை 17) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
வரைகதை மற்றும் வரைகலை நாவல், மொழிபெயர்ப்பு, சிறந்த அறிமுகம் ஆகிய மூன்று புதிய பிரிவுகளுடன் மற்ற பிரிவுகளிலும் முதல் விருதுக்கு எழுத்தாளர்கள் போட்டியிடுவார்கள்.
வெற்றியாளருக்கு S$3,000 ரொக்கப் பரிசும் கோப்பையும் வழங்கப்படும்.
சிங்கப்பூர் இலக்கியப் பரிசு, இந்த ஆண்டு 247 சமர்ப்பிப்புகளைப் பெற்றது. இந்த எண்ணிக்கை, 2022ல் பெற்ற 182 சமர்ப்பிப்புகளைவிட 30 விழுக்காடு அதிகம் என்றது சிங்கப்பூர் புத்தக மன்றம்.
கவிதை (சீனம், ஆங்கிலம், மலாய், தமிழ்), புனைவு (சீனம், ஆங்கிலம், மலாய், தமிழ்), படைப்பாக்க அம்சம் (சீனம், ஆங்கிலம், தமிழ்), வரைகலை நாவல் (ஆங்கிலம்), மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்), சிறந்த அறிமுகம் (சீனம், ஆங்கிலம், தமிழ்) ஆகிய பிரிவுகளில் 71 படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
புதிய வரைகதை மற்றும் வரைகலை நாவல் பிரிவின்கீழ் 29 சமர்ப்பிப்புகளும், மொழிபெயர்ப்புப் பிரிவின்கீழ் 13 சமர்ப்பிப்புகளும் குவிந்தன.
சிறந்த அறிமுகத்திற்காக (சீனம், ஆங்கிலம், தமிழ்) 22 படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
எழுத்தாளர்களில் எட்டுப் பேர், இரண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் புனைவு, கவிதை மற்றும் படைப்பாக்க அம்சம் ஆகிய பிரிவுகளில் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்ப் படைப்புப் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட 10 எழுத்தாளர்கள், மூன்று தமிழ்மொழிப் பிரிவுகளில் (புனைவு, கவிதை, படைப்பாக்க அம்ச அபுனைவு) தெரிவுசெய்யப்பட்டதாகவும் சிங்கப்பூர்ப் புத்தக மன்றம் குறிப்பிட்டது.
இன்பா, மஹேஷ் குமார், மதிக்குமார் தாயுமானவன், வரதராஜன் ஹேமலதா, அழகுநிலா, முத்தழகு மெய்யப்பன், மணிமாலா மதியழகன், கி. கனகலதா, பொன் சுந்தரராசு, யூசுப் ராவுத்தர் ரஜித் ஆகியோர் அந்தப் பத்து எழுத்தாளர்கள்.
தமிழ்ப் பிரிவுகளுக்கான ஒன்பது சிங்கப்பூர் மற்றும் வெளிநாட்டு நடுவர்களில் கல்வியாளர்கள், பதிப்பாளர்கள் மற்றும் விருது பெற்ற எழுத்தாளர்கள் உள்ளனர்.
கவிதைப் பிரிவுக்கு எம் எஸ் ஸ்ரீலக்ஷ்மி, புனைவுப் பிரிவுக்கு எழுத்தாளரும் கதைசொல்லியுமான ரமா சுரேஷ், படைப்பாக்க அம்சப் பிரிவுக்கு கட்டுரையாளர் நீலகண்டன் சிவானந்தம் ஆகியோர் தலைமை நீதிபதிகளாக உள்ளனர்.
விக்டோரியா அரங்கில் செப்டம்பர் 10ஆம் தேதியன்று வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர். அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ள விருது நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்துகொள்ளலாம்.