கடலின் ஆழத்தில் இருந்து விண்வெளியின் மேற்பரப்பு வரை ஆதிக்கம் செலுத்தும் நெகிழியை (பிளாஸ்டிக்) முற்றிலும் ஒழிக்க இயலுமா என்பது இன்று அனைவரின் மனத்திலும் எழும் பெரிய கேள்வி.
எனினும், பூமியை அழிவில் இருந்து காக்க தனிமனிதர்கள், அமைப்புகள், நாடுகள் என ஒவ்வொரு தரப்பும் தன்னாலான முயற்சிகளை எடுத்துவருவதை மறுப்பதற்கில்லை.
அப்படிப்பட்ட முயற்சியை சிங்கப்பூரும் கடந்த ஆண்டு கையிலெடுத்தது. சிங்கப்பூரில் பேரங்காடிகளில் நெகிழிப் பைகளைப் பயன்படுத்தக் கட்டணம் விதிக்கப்படுகிறது.
முன்னேற்பாடு நல்லதுதான்
பிளாஸ்டிக் பைகளைத் தவிர்க்கும் பொருட்டு அதன் இலவசப் பயன்பாட்டை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்த அரசாங்கத்தின் அறிவிப்பு நல்ல முன்னேற்பாடு என்கிறார் திரு திருக்குமரன்.
“மாசுக்கட்டுப்பாட்டுக்கு இது உதவுகிறது. நாங்கள் பெரும்பாலும் வீட்டிலிருந்தே மாற்றுப் பைகளை எடுத்து வந்துவிடுவோம். ஒருவேளை பைகளை ஏதேனும் அவசரத்தில் மறந்துவிட்டோம் என்றால், தேவைப்படும் நெகிழிப் பைகளின் எண்ணிக்கையைக் குறைத்துவிடுவோம்,” என்றார் அவர்.
பிள்ளைகளுக்குச் சிறுவயதில் இருந்தே ‘சணல் பை’களைப் பயன்படுத்தச் சொல்லித்தருகிறோம் என்றும் அவர் சொன்னார்.
கட்டண விதிப்பு தவறன்று
கோல்ட் ஸ்டோரேஜ் பேரங்காடியில் பணிபுரியும் திருவாட்டி அழகம்மாள், நெகிழிப் பைகளுக்குக் கட்டணம் வசூலிப்பது தமக்குத் தவறாகத் தெரியவில்லை என்கிறார்.
“நம் சுற்றுச்சூழலுக்கு அது நல்லதல்ல. நான் கடைக்குச் செல்லும்போது கட்டாயம் மாற்றுப் பைகளை எடுத்துக்கொண்டுதான் செல்வேன்,” என்ற திருவாட்டி அழகம்மாள், நெகிழிப் பயன்பாட்டைக் குறைப்பது அவசியம் என்றும் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
சுற்றுச்சூழலைப் பராமரிக்கும் நோக்குடன் அரசாங்கம் எடுத்திருக்கும் இம்முயற்சி பலன்தரக்கூடியது என்று நம்பிக்கை தெரிவித்தார் திருவாட்டி தீபாலி.
“ஒருமுறை குடும்பமாக ‘டிஸ்கவரி சேனல்’ எனும் ஒளிவழியில் நெகிழிப் பயன்பாடு சுற்றுப்புறத்திற்கு விளைவிக்கும் தீமைகள், அவை பூமியில் இருந்து மக்கிப்போக எடுக்கும் காலம் ஆகியவற்றை அறிந்தபோதுதான் நெகிழியின் தாக்கம் எங்களுக்குப் புரிந்தது,” என்று விவரித்தார் இல்லத்தரசி தீபாலி.
அன்றுமுதல் நெகிழிப்பைகளை நெருங்குவதில்லை என்றார் இவர்.
“குறைந்த எடைகொண்ட பொருள்களை வாங்கச் செல்வதற்குக் காகிதப் பைகளைப் பயன்படுத்துவேன். எடுத்துச் செல்லவும் அவை எளிதாக இருக்கும். நானும் எங்கள் குடும்பத்தில் உள்ளோரும் பெரும்பாலான நேரங்களில் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத மாற்றுப்பைகளை வைத்திருப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளோம்,” என்றும் திருவாட்டி தீபாலி கூறினார்.
எப்போதும் பொருந்தாது
நெகிழிப் பைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று நினைப்பதில்லை. ஆனால் இறைச்சி, காய்கறிகள், மலர்கள் என வாங்கும்போது காகிதப் பைகளைப் பயன்படுத்த முடிவதில்லை என்றார் இல்லத்தரசி திருவாட்டி மார்கரெட்.
“கடைகளில் பலவிதமான பொருள்களை வாங்கும்போது அவை எல்லாவற்றுக்கும் காகிதப் பைகள் அல்லது துணிப் பைகளைப் பயன்படுத்த முடியாது. எனவே, பொருள்களுக்கு ஏற்ப எவ்வகைப் பைகளைப் பயன்படுத்த முடியும் என்பது குறித்து இன்னும் அதிக தகவல்களைப் பயனீட்டாளர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்,” என அவர் விருப்பம் தெரிவித்தார்.
ஒருவராலும் மாற்றம் வரலாம்
அரசாங்கத்தின் மேற்கூறிய நடவடிக்கைக்கு முழு ஆதரவளிக்கும் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவி பருணி, “பெரும்பாலோர் ‘நான் ஒருவர் மட்டும் நெகிழிப்பையைப் பயன்படுத்தாமல் போனால் என்ன ஆகப்போகிறது?’ என்று நினைக்கலாம்.
“ஆனால், இப்படியாக நெகிழி ஒழிப்பு நடவடிக்கையில் ஒருமனதாக நாம் மாற்றுப் பைகளுக்கு மாறினால் உறுதியாகப் பேரளவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றம் ஏற்படும்,” என்று நம்பிக்கை தெரிவித்தார் இந்த இளையர்.
கட்டணம் செலுத்தத் தொடங்கியிருக்கும் வாடிக்கையாளர்கள் மனநிலை ஒருபுறம் இருக்க கட்டணம் வசூலிக்கத் தொடங்கியிருக்கும் வணிகர்களும் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.
கூட்டுமுயற்சி ஏற்றம் தரும்
“கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் இப்போதும் இலவசப் பைகளைக் கேட்கிறார்கள். மேலும், லிட்டில் இந்தியாவிற்கு வரும் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் பல்வேறு பொருள்களை வாங்க வெவ்வேறு இடங்களுக்குச் செல்வதுண்டு.
“எனவே, அவர்கள் அதிகளவில் பைகளை எடுத்துவர சாத்தியமில்லை,” என்று தாங்கள் எதிர்கொள்ள நேரிடும் அன்றாட சிரமங்களை விவரித்தார் ஹனிஃபா நிறுவனத்தின் பொது மேலாளர் ஜோஸ் வர்கீஸ்.
“நெகிழிப் பயன்பாட்டைத் தவிர்க்கும் நோக்கில் கடந்தாண்டு அறிமுகப்படுத்திய நடவடிக்கைக்கு ஆதரவாக நாங்கள் மாற்றுப் பைகளைத் தருகிறோம். எனினும், கூடுதல் பைகளைக் கேட்கும் வாடிக்கையாளர்களிடம் அந்தப் பைகளுக்கு 20 காசு கட்டணம் விதிக்கிறோம்.
“எனினும், இது ஒரு சிலர் மட்டும் எடுக்க வேண்டிய முயற்சியன்று. இந்த வட்டாரத்தில் உள்ள அனைத்து வணிகர்களும் இணைந்து இவ்வாறு செய்யும்போது உறுதியாக நெகிழிப்பைப் பயன்பாட்டைக் கணிசமாகக் குறைக்கலாம்,” என்றார் திரு ஜோஸ்.
நெகிழிப்பை கேட்பவரும் உண்டு
“கடைக்கு வரும் வாடிக்கையாளர்களில் பலரும் நெகிழிப் பையைக் கொண்டு வருவதில்லை. நெகிழிப் பைகளைத் தவிர்க்க வேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்தினாலும் வாடிக்கையாளர்களில் பலர் பெரும்பாலான நேரங்களில் அதனைப் பின்பற்றுவதில்லை,” என்று வருத்தம் தெரிவித்தார் கார்த்திகா என்டர்பிரைசஸ் பேரங்காடி விற்பனைப் பிரிவில் பணிபுரியும் திரு சேகர் அருண்குமார்.
“வாடிக்கையாளர்களுக்கு நாங்களே முன்வந்து இந்த மாற்றுப் பையை இலவசமாகத்தான் தருகிறோம். ஆனால், பலர் அதை வேண்டாம் என மறுத்து, நெகிழிப் பைகளையே கேட்டு வாங்குகின்றனர்.
“மேலும், மாற்றுப் பைகளை வாங்கிச் செல்லும் வாடிக்கையாளர்களும் நினைவுடன் மறுமுறை கடைக்கு வரும்போது நாங்கள் வழங்கும் இந்தப் பையை எடுத்து வந்தால் மறுபயனீடாகவும் இருக்கும்.
“நெகிழிப்பை தாருங்கள் எனக் கேட்கும் அவர்கள், துணிப்பை உள்ளதா எனக் கேட்டால் நன்றாக இருக்கும்,” என்றும் சொன்னார் திரு அருண்குமார்.
விழிப்புணர்வு கூடியுள்ளது
இதற்கிடையே, மேற்கூறிய நடவடிக்கையைத் தொடர்ந்து வணிகர்கள், வாடிக்கையாளர்கள் என இருதரப்பினரிடமும் நெகிழிப்பைப் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும் எனும் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது என்று சொன்னார் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்தின் (லிஷா) தலைவர் ரகுநாத் சிவா.
“நெகிழி இல்லா லிட்டில் இந்தியா எனும் இயக்கம் கடந்த ஆண்டு லிட்டில் இந்தியா வட்டாரத்தில் தொடங்கப்பட்டது. இவ்வட்டாரத்தில் நெகிழிப் பயன்பாட்டைக் குறைத்திடும் இலக்குடன் இதுவரை எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள், விழிப்புணர்வை விதைக்கும் மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கின்றன,” என்றார் திரு ரகுநாத்.
“இளையர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் சொந்த பைகளைக் கடைகளுக்கு எடுத்து வரத் தொடங்கியிருக்கின்றனர். குறிப்பாக, இவ்வட்டாரத்தில் உள்ள உணவுக் கடைகள் உள்ளிட்டவை நெகிழிப் பைகளுக்கு மாற்றாக இதர பைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன.
“பசுமையை, சுற்றுச்சூழலைப் பேணும் நோக்கில் நெகிழிக்குப் பதிலான மாற்றுப் பைகள் பலவும் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. எனவே, வளமான சுற்றுச்சூழலுக்குச் சாதகமான எதிர்காலத்தை நோக்கி, சரியான பாதையில் செல்வதை நம் சமூக முயற்சிகள் வெளிப்படுத்துகின்றன,” என்றார் அவர்.
பத்துக்காசும் பிளாஸ்டிக் பையும்
கடந்த ஆண்டு நெகிழிப் பைகளுக்குக் கட்டணம் வசூலிப்பதாக வெளியான அறிவிப்பைத் தொடர்ந்து, மண்ணுக்கும் மனிதருக்கும் நெகிழி தீங்கு விளைவிப்பதாகத் தாங்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளதாகப் பத்தில் எழுவர் தெரிவித்தனர்.
நெகிழிப்பைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிந்திருந்தாலும் அதற்கு இணையாக அல்லது மாற்றாக வேறு ஏதும் கிடைப்பதில்லை என்பதும் பத்தில் அறுவரின் கவலையாக இருந்தது.
அதேவேளை, தனியொருவர் மாறிவிட்டால் பேரளவில் மாற்றம் ஏற்பட்டுவிடப் போவதில்லை என்பது பத்தில் இருவரின் எண்ணமாக உள்ளது.
வணிகர்களைப் பொறுத்தவரை, “மக்கள் மனதில் மாற்றம் இருக்கிறது. ஆனால், செயலில் அதிகம் தெரியவில்லை,” என்கின்றனர்.
“ஒருசிலர் பைகளுக்கு எதற்காக காசு தரவேண்டும் என்றெண்ணி மாற்றுப் பைகளை எடுத்து வருவதுபோல, கூடுதல் நெகிழிப் பைகளைக் கேட்போரும் உண்டு,” என்று கடைக்காரர்களில் சிலர் தெரிவித்தனர்.
ஐந்து காசு, பத்துக் காசு கட்டணம் விதிப்பது தற்போது ஓர் எளிய நடவடிக்கையாகத் தோன்றலாம். ஆனால், அதனால் ஏற்பட்டு வரும் மாற்றம், நம் எதிர்காலத் தலைமுறைகளுக்குப் பாதுகாப்பான, பசுமையான வசிப்பிடத்தை உறுதிசெய்யும் மாபெரும் முன்னேற்றம் என்பதே கருத்துரைத்த அனைவரது ஒருமித்த குரலாக ஒலித்தது.