தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘சிங்கப்பூர் சமூக வகஃப்’ சமூக அருட்பண்பின் புதிய அத்தியாயம்

2 mins read
a194336e-e6a7-456e-81df-b91fbeb672dd
‘சிங்கப்பூர் சமூக வகஃப்’ நிதியின் முன்னோடி பங்களிப்பாளரான இந்திய முஸ்லிம் பேரவைக்கு  அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி சான்றிதழ் வழங்கினார். பேரவைத் தலைவர் அ.முஹம்மது பிலால் அதைப் பெற்றுக்கொண்டார். - படம்: முயிஸ்

சிங்கப்பூர் முஸ்லிம் சமூகத்தின் அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்திசெய்ய நீண்டகால நிலையான நிதியுதவியை உருவாக்கும் புதிய முயற்சியே ‘சிங்கப்பூர் சமூக வகஃப்’ எனும் முஸ்லிம் சமூக அறக்கட்டளை நிதி என முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை (ஆகஸ்ட் 3) ‘சிங்கப்பூர் சமூக வகஃப்’ எனும் புதிய முஸ்லிம் சமூக அறக்கட்டளை நிதியை அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைத்த சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சரும் சுகாதார இரண்டாம் அமைச்சருமான மசகோஸ், “இப்புதிய அறக்கட்டளை நிதி அடுத்த தலைமுறைக்கான நமது பங்களிப்பாகும்,” எனக் குறிப்பிட்டார்.

மேலும் பேசிய அவர், “சமூகத்திற்கான கூடுதல் நிலைத்தன்மை வாய்ந்த நிதியாதரவை நல்கும் இம்முயற்சி, புத்தாக்கமிக்க ஒரு தீர்வு. நம் சமூகத்தில் பெருகிவரும் உதாரத்துவம் மிகுந்த  மனப்பாங்கை சிங்கப்பூர் சமூக வகஃப் பயன்படுத்த முடியும்,” என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த அறக்கட்டளை நிதி, சிங்கப்பூர் மலாய் சமூகத்தின் இரண்டாவது ஆற்றல் அமைப்பு என குறிப்பிட்ட அமைச்சர், இந்த முயற்சி சமூகத்திற்காக சமூகம் வழங்கிடும் நிதி எனவும் சொன்னார். 

சிங்கப்பூரின் ‘வகஃப்’ மரபைப் பேணும் நோக்குடன் நிறுவப்பட்டுள்ள இந்தச் சமூக அறக்கட்டளை நிதி, பள்ளிவாசல், மதரஸாக்கள், சமய ஆசிரியரின் மேம்பாடு, முஸ்லிம் சமூகத்தினரின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் சமூக, சமயம் சார்ந்த திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் என்று சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“தற்போது நடப்பிலுள்ள சமூக நிதி, இயங்கிவரும் நமது அமைப்புக்களுக்கான உடனடித்  தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட பயனாளிகளுக்கு அது சேவையாற்றுகிறது.

“எனினும், சிங்கப்பூர் சமூக வகஃப் தற்போது நடைமுறையில் உள்ள பள்ளிவாசல் கட்டட நிதி, மெண்டாக்கி நிதி உள்ளிட்ட சமூக  நிதிக்கும் இன்னும் வெகுவான பயனாளிகளுக்கு உதவும் வகையிலும் செயலாற்றும்,” எனவும் முயிஸ் குறிப்பிட்டது.

இதற்கிடையே, சிங்கப்பூர் சமூக வகஃப் நிதிக்கு பங்களிப்பை வழங்கியது இந்திய முஸ்லிம் பேரவை.

நிகழச்சியில் பங்கேற்ற இந்திய முஸ்லிம் பேரவைத் தலைவர் அ.முஹம்மது பிலால், “சமூக சமய நிலைத்தன்மை மிகவும் முக்கியமானது. அவ்வகையில் சமூக அமைப்பான இந்திய முஸ்லிம் பேரவை, இப்புதிய திட்டத்தை ஆதரிக்கிறது,” என்று தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

சமூக அறக்கட்டளை நிதிக்குப் பங்களிப்புகளை வழங்கிய முன்னோடி நன்கொடையாளராக பேரவை திகழ்வது மகிழ்ச்சி என்று சொல்லிய அவர், “எதிர்காலத்தில் இந்த நிதியமைப்பிற்கு வலுசேர்க்கும் வகையில் அநேக அமைப்புகள் மற்றும் தனிநபர்களிடமும் இந்த முயற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரவை அதன் பங்கை ஆற்றும்,” எனக் கூறினார். 

சிங்கப்பூர் சமூக வகஃப் நிதிக்கு கொடையளிக்க விரும்புவோர், அதுகுறித்த கூடுதல் விவரம் அறிய give.wakaf.sg/wms எனும் இணையப்பக்கத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்