நாற்பது ஆண்டுக்கும் மேலாக சிங்கப்பூர் போலிஸ் படையில் சேவையாற்றி ஓய்வுபெற்ற விசாரணை அதிகாரியான சூப்பரிண்டென்டன்ட் பொ. ஆவடியார், அதிகாரிகளின் அசையாத நம்பிக்கைக்கும் நீதிக்காக அயராது போராடும் மனப்பான்மைக்கும் இலக்கணமாகத் திகழ்ந்தவர்.
72 வயது திரு ஆவடியாரின் பங்களிப்பை அங்கீகரித்து சிங்கப்பூர்க் காவல்துறை, தனது ‘போலிஸ் லைஃப்’ மின்னிதழில் கடந்த மாதம் இவர் குறித்த பதிவை வெளியிட்டது.
ஏறக்குறைய 54 ஆண்டுகளுக்கு முன்னர் 1970ல் காவல்துறை அதிகாரியாக (கான்ஸ்டபிள்) படையில் சேர்ந்த திரு ஆவடியார், படிப்படியாக உயர்ந்து ஜூரோங் போலிஸ் பிரிவின் தலைவரானார்.
தமது பதவிக்காலத்தில் திரு ஆவடியார், சின்னஞ்சிறு நுட்பங்களைக் கவனித்துச் செயல்படுபவர் என்றும் மன உறுதி மிக்கவர் என்றும் பெயர்பெற்றவர்.
தற்போது தேக்கா சந்தை உள்ள இடத்தில் முன்பு இருந்த கன்டாங் கெர்பாவ் போலிஸ் நிலையத்தில் பணியைத் தொடங்கிய திரு ஆவடியார், பின்னர் அங்கு உதவி விசாரணை அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.
“விசாரணை அதிகாரிக்கான உறுதியைச் சுற்றியிருந்தோரிடம் கற்றுக்கொண்டு எனக்குள்ளும் அந்தக் குணத்தை வளர்த்துக்கொண்டேன்,” என்று அவர் கூறினார்.
தங்ளின் காவல்துறைப் பிரிவிலும் மத்திய புலனாய்வுப் பிரிவின் திட்டமிட்ட குற்றச்செயல் கிளையிலும் மூத்த விசாரணை அதிகாரியாக திரு ஆவடியார் பணியாற்றினார்.
தங்ளின் காவல்துறைப் பிரவில் 1986ல் பணியாற்றியபோது நடந்த ஓர் சம்பவம் அவர் மனதில் ஆழப் பதிந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மூளை அறுவை சிகிச்சை செய்துகொண்ட 22 வயது பெண், அதன் பிறகு உயிர்நீத்த சம்பவத்தின் பின்னணியில் ஏதோ மர்மம் இருந்ததை உணர்ந்தார் திரு ஆவடியார். ஆறு மாத விசாரணைக்குப் பிறகு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர், பெண்ணின் மரணத்திற்குக் காரணமானவர் என்பதை அவர் கண்டறிந்தார்.
பிரேதப் பரிசோதனைக்கான நவீன கருவிகள் இல்லாத காலகட்டத்தில் செயல்பட்ட திரு ஆவடியார் முறையாக ஆதாரங்களைச் சேகரித்தார். புதிய மருத்துவக் கலைச்சொற்களைக் கற்றதுடன் உள்ளூர், அனைத்துலக மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெற்று அவர் விசாரணையை உறுதியோடு தொடர்ந்தார்.
அறுவை சிகிச்சை நிபுணர் அகற்றிய சதை, புற்றுநோய்க் கட்டி அல்ல என்ற உண்மை, திரு ஆவடியாரின் முயற்சியால் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து, அந்த அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவத் துறையிலிருந்து நீக்கப்பட்டார்.
விசாரணைகள் மேற்கொண்டு சிக்கலான முடிச்சுகளைத் திறம்பட அவிழ்த்ததோடு மட்டுமின்றி திரு ஆவடியார், இளம் அதிகாரிகளுக்கு வழிகாட்டி அவர்களது திறன்களை மெருகேற்றியவர்.
காவல்துறை அதிகாரியாக, தீமிதி, தைப்பூசம், குடமுழுக்கு உள்ளிட்ட முக்கிய சமய விழாக்களில் சக காவல்துறை அதிகாரிகள், சமூக ஆர்வலர்களுடன் இணைந்து பாதுகாப்பை உறுதிசெய்வதில் முக்கியப் பங்காற்றியுள்ளார் திரு ஆவுடையார்.
அதேபோல் இந்திய சமூகம் உட்பட்ட பல இன சமுதாயத்தில் குண்டர் கும்பல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தோருக்கு நல்வழி காட்டி உள்ளார்.
பணியிலிருந்து ஓய்வுபெற்ற திரு ஆவடியார், தம் வேலை அனுபவங்களைப் பிறரிடம் கூறிப் பாடங்களைப் புகட்டுவார். பல ஆண்டு காலச் சேவையை நினைத்துப் பார்க்கும்போது பரவசமடைந்த திரு ஆவடியார், “குறிப்பாக, வெளிப்புறத்தில் பணியாற்றுவது எனக்குப் பிடிக்கும், வேலை செய்த நாள்களின் நினைவுகள் இனிமையானவை,” என்றார்.