சிந்தனையாளர்கள் பலரின் படைப்பாற்றலுக்கு வித்திட்டு வரும் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்தைக் கொண்டாடும் வகையில் ‘60 ஆண்டுகாலச் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம்’ என்ற தலைப்பில் முழு நாள் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றுள்ளது.
கடந்த 60 ஆண்டு காலத்தில் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்தின் சிறப்பையும் வளர்ச்சியையும் மையப்படுத்தி இந்தக் கருத்தரங்கு செப்டம்பர் 7ஆம் தேதி தேசிய நூலகத்தில் நடைபெற்றது.
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் தேசிய நூலக வாரியத்தின் ஆதரவோடு ஏற்பாடு செய்த இந்தக் கருத்தரங்கின் இறுதியில், 60 சிறுகதைகள் அடங்கிய ‘SG60 சிங்கையின் மணிவிழாச் சிறுகதைகள்’, 60 கட்டுரைகள் அடங்கிய ‘SG60 சிங்கையின் மணிவிழாக் கட்டுரைகள்’ என இரு நூல்கள் வெளியிடப்பட்டன.
முன்னாள் நாடாளுமன்ற நியமன உறுப்பினர் இரா. தினகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நூல்களை வெளியிட்டார்.
“நாட்டின் சமுதாய ஆவணமாகக் காப்பாற்றப்படும் இலக்கியம், ஒரு தனிமனிதனையும் சமூகத்தையும் இணைக்கும் கருவியாக விளங்குகிறது,” என்றார் நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் சு.முத்துமாணிக்கம்.
நாம் கடந்து வந்த பாதையை மதிப்பிடுவதும் கடக்க வேண்டிய தொலைவைக் கணித்து திட்டமிடுவதுமே இந்தக் கருத்தரங்கின் நோக்கம் என்றும் அவர் விளக்கினார்.
பேராசிரியர் சுப. திண்ணப்பனின் தலைமையில் காலை 9 மணியிலிருந்து இரவு 7 மணிவரை நடைபெற்ற இக்கருத்தரங்கில், ஐந்து அமர்வுகளும் ஒரு கலந்துரையாடலும் இடம்பெற்றன.
முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன், திரு. ஷாநவாஸ், முனைவர் சித்ரா சங்கரன், திரு. சபா முத்து நடராசன், முனைவர் அ. வீரமணி ஆகியோர் அமர்வுகளுக்குத் தலைமை ஏற்றனர்.
தொடர்புடைய செய்திகள்
‘சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் – சவால்களைக் கடந்து 60 ஆண்டுகள்’ எனும் தலைப்பில் கவிதை பற்றிக் குமாரி கனகலதாவும் உரைநடை குறித்துத் திரு. சிவானந்தம் நீலகண்டனும் உரையாற்றினர்.
கடந்த 30 ஆண்டுகளில் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்திற்கு மின்தமிழ் தந்துள்ள ஊக்கம் குறித்துத் திரு.மகேஷ்குமார், குமாரி விஷ்ணு வர்தினி இருவரும் விரிவாகப் பேசினர்.
‘கடந்த 60 ஆண்டுகளில் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்திற்கு ஊடகங்கள் ஆற்றியுள்ள பங்கு’ என்ற தலைப்பில் அச்சு ஊடகம் குறித்துத் திரு. இர்ஷாத் முஹம்மது, வானொலி குறித்து முனைவர் மீனாட்சி சபாபதி, தொலைக்காட்சி குறித்துக் குமாரி பிரியா சூர்யமூர்த்தி ஆகியோர் உரையாற்றினர்.
அரசு நிறுவனங்கள், தமிழ் அமைப்புகள் ஆகியவற்றின் செயல்பாட்டால் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் அடைந்துள்ள வளர்ச்சியைப் பற்றித் திரு. எஸ்.என்.வி. நாராயணன், திரு. சித்துராஜ் பொன்ராஜ் இருவரும், தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஆய்வுகள் ஆற்றியுள்ள பங்கு குறித்து முனைவர் ஆ.ரா. சிவகுமாரனும் முனைவர் சீதாலட்சுமியும் ஆய்வுக்கட்டுரை படைத்தனர்.
இவ்வைந்து அமர்வுகளின் இறுதியிலும், பங்கேற்பாளர்களுக்கான கேள்வி-பதில் அங்கம் நடைபெற்றது.
இறுதியாக, திரு. முகம்மது அலி தலைமையில், ‘சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்தின் வருங்காலம் நம்பிக்கையூட்டுகிறதா? கவலையளிக்கிறதா?’ என்னும் தலைப்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, திரு. சித்துராஜ் பொன்ராஜ், திரு. சரவணப் பெருமாள், திரு. காமேஸ்வரன் மீனாட்சிசுந்தரம், செல்வி கிருஷ்மிதா ஷிவ் ராம், செல்வி சுருதிகா குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
சமூகத் தலைவர்கள், ஆதரவாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் எனப் பலர் உற்சாகத்தோடு கருத்தரங்கில் கலந்துகொண்டாலும், அரங்கில் திரண்ட இளையர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.
“இன்று வெளியிடப்பட்டுள்ள கட்டுரை, சிறுகதைத் தொகுப்புகளும் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்திற்கு ஆவணங்களாகத் திகழும்,” என்று உறுதிகூறினார் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் முன்னாள் தலைவர் நா. ஆண்டியப்பன்.