நல்லிணக்கமும் அமைதியும் மிளிர்ந்த இந்த ஆண்டுக்கான விசாகத் தினக் கொண்டாட்டங்களுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் சிங்கப்பூரின் ஆகப்பெரிய புத்தர் கற்சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
விசாக தினமான திங்கட்கிழமை (மே 12) காலை ஸ்ரீலங்கராமையா பௌத்த ஆலயத்தில் 16 அடி உயரப் புத்தர் கற்சிலையைத் திறந்துவைத்தார் ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் வாசு தாஸ்.
நின்ற வகையில் காட்சியளிக்கும் இந்த கற்சிலை, நல்லாசியைக் குறிக்கும் கனிவுமிகுந்த ‘அசிசா’ முத்திரையுடன் அச்சமின்மை மற்றும் மறுஉறுதிப்பாட்டைச் சித்திரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வுசெய்யப்பட்ட திரு வாசு, சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கும் முதல் பொது விழா இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தமிழ் முரசிடம் பேசிய திரு வாசு, சிங்கப்பூரில் சமய நல்லிணக்கத்துடன் அமைதியைப் பேணுவதில் விசாகத் தினக் கொண்டாட்டங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். “பௌத்த சமயத்தைச் சார்ந்தவர் மட்டுமல்லாது பிற சமயங்களைச் சார்ந்தவரும் இந்தப் பண்டிகைக் காலத்தில் ஒன்றுகூடி ஒற்றுமையுடன் வழிபடுவது மனத்திற்கு இன்பத்தை நல்குகின்றது,” என்றார் அவர்.
விலகிய வெயில், பொழிந்த அருள்மழை
காலையிலிருந்து கடுமையான வெப்பம் காய்ந்த சூழலில் புத்தரின் பிரம்மாண்ட சிலை திறந்துவைக்கப்பட்ட சில நொடிகளில் மேகம் திரண்டு மழை பெய்யத் தொடங்கியது.
சமயம் கடந்தும் ஒரே மக்களாய் ஒற்றுமையுடன் திரள்வதே சிங்கப்பூரின் தனித்துவம் என்று குறிப்பிட்ட திரு வாசு, சிலை திறந்து வைக்கப்பட்டவுடன் எதிர்பாராதவிதமாகப் பொழிந்த மழை குறித்தும் கருத்துரைத்தார்.
“வெப்பம் நிறைந்த காலநிலை மாறி சற்றும் எதிர்பாரா விதமாக பெய்த மழை இறைவனின் இரக்கம் மிகுந்த அருள்மழை,” என்று மகிழ்ச்சி தெரிவித்தார் திரு வாசு.
விசாகத் தினத்தன்று திறந்துவைக்கப்பட்ட கற்சிலை, வடமத்திய இலங்கையில் உள்ள அவுக்கண புத்தர் சிலையைப் பிரதிபலிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
“இப்படிப்பட்ட உயரமான சிலையை செதுக்க குறைந்தது ஆறு மாதங்களுக்கு மேலாகும். ஆனால், அற்புதமாக 25 நாள்களிலேயே இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்றார் ஆலயத்தின் பௌத்த பிக்கு முனைவர் கே.குணரத்ன தெரோ.
இலங்கையைச் சேர்ந்த சிலை வடிவமைப்புக் குழு ஒருங்கிணைப்பாளரான திரு ருவான் சந்தனா, ‘‘ஏறத்தாழ 10 முதல் 12 பேர் கொண்ட குழுவினர் சிலையை வடிவமைக்க இரவு பகல் பாராமல் உழைத்தோம்.
‘‘வெள்ளை நிறத்திலான ஒரே கல்லில் மிகக் கவனத்துடன் செதுக்கப்பட்டுள்ள இச்சிலையின் எடை 15 டன். இச்சிலை சுமார் 10 நாள்களுக்கும் மேலாகக் கப்பலில் பயணித்து சிங்கப்பூர் வந்தடைந்தது,” என்றார்.
இதற்கிடையே, புத்தர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ஆலயத்திற்கு வந்திருந்த திருவாட்டி ஞானாம்பாள் பாலகிருஷ்ணன், 70, ‘‘புத்தரை அமர்ந்த நிலையில்தான் பார்த்திருக்கிறேன். நின்ற நிலையில் காட்சியளிக்கும் புத்தரின் தோரணை உள்ளத்தில் புதிய உற்சாகத்தையும் துணிவையும் விதைக்கிறது,’’ என்றார்.

