சென்னையின் தரமணிப் பகுதியில் அமைந்துள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் தமிழ் அச்சுப் பண்பாட்டின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
1994ஆம் ஆண்டு தொடங்கி, மிகப் பெரும் தமிழ் ஆவணக் களஞ்சியமாக விளங்கும் அந்த நூலகம் பற்றிய பல்வேறு அரிய தகவல்களை, நூலகத்தின் இயக்குநரும் நிறுவன அறங்காவலருமான டாக்டர் சுந்தர் கணேசன், நூலக அறங்காவலரும் சிந்துவெளி ஆய்வாளரும் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அலுவலருமான திரு ஆர். பாலகிருஷ்ணன் இருவரும் தமிழ் முரசின் சிறப்பு வலையொளி நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டனர்.
“கோட்டையூரைச் சேர்ந்த திரு ரோஜா முத்தையா 1992ல் காலமானபின் அவரது தனிப்பட்ட சேகரிப்பில் இருந்த ஒரு லட்சம் நூல்கள், ஆவணங்களை விற்பதாக விளம்பரம் செய்யப்பட்டது. அப்போது அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஆய்வு வல்லுநராகப் பணியாற்றிய எழுத்தாளர் அம்பை, அங்கு மொழியியல் பேராசிரியராக இருந்த திரு. ஏ.கே. ராமானுஜனிடம் இந்தத் தகவலைக் கொண்டுசேர்த்தார். உலகளாவிய நிலையில் பணம் திரட்டி, அந்தச் சேகரிப்பை விலைக்கு வாங்கினார்கள்,” என்றார் முனைவர் சுந்தர்.
மொழி அறக்கட்டளையும் கைகொடுக்க, கோட்டையூரிலிருந்து சென்னைக்கு அந்த நூல்கள் கொண்டுவரப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
நுண்படத் (மைக்ரோஃபிலிம்) தொழில்நுட்பத்தின் மூலம் ஆவணங்களைப் பாதுகாக்கும் பணி தொடங்கியது. 10 ஆண்டுகள் கழித்து, சிகாகோ பல்கலைக்கழகம், மொழி அறக்கட்டளை இரண்டுமே விலகிக்கொண்டன. அதையடுத்து, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறக்கட்டளை என்ற பெயரில் நிறுவனமயமாக்கப்பட்டது என்று முனைவர் சுந்தர் கூறினார்.
நூல்கள், இதழ்கள், நூல்சாரா ஆவணங்களான சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள், அழைப்பிதழ்கள் போன்றவையும் இந்நூலகத்தில் பாதுகாக்கப்படுகின்றன.
2000ஆம் ஆண்டில் டிஜிட்டல் தொழில்நுட்பம் அறிமுகமானபின் நுண்படங்களும் அதேமுறையில் மின்னிலக்கமயமாக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் தமிழ் நூலகங்கள், ஆவணக் காப்பகங்கள் இருந்தாலும் இதுதான் உலகின் ஆகப் பெரிய நூலகம் என்றார் முனைவர் சுந்தர்.
“1812ஆம் ஆண்டு திருக்குறளின் 5 பிரதிகள் மட்டும் அச்சிடப்பட்டன. அவற்றில் ஒன்று இந்த நூலகத்தில் உள்ளது,” என்றார் திரு பாலகிருஷ்ணன்.
தொடர்புடைய செய்திகள்
ஓலைச்சுவடியில் புள்ளி வைக்காமல் எழுதப்பட்டதை அப்படியே அச்சடித்துள்ளார்கள். இதைத் தமிழர் அனைவரிடமும் கொண்டுசேர்க்க, 2016ல் அந்த மூலப் பிரதியை அச்சடித்தோம். சங்கப்பாடல்களின் முதல் பிரதிகளும் இருக்கின்றன என்றார் அவர்.
ஒலிவட்டுகளை நவீனமுறையில் மின்னிலக்கமயமாக்குவதற்கு ‘பெர்க்லி லேப்’ தயாரித்த ஐந்து இயந்திரங்களில் ஒன்று இங்கு உள்ளது என்று முனைவர் சுந்தர் குறிப்பிட்டார்.
“100 சதுர அடியில் பாதுகாப்பு அறை இருக்கிறது. அரிய நூல்கள் நுண்படங்களாக அதில் வைக்கப்பட்டுள்ளன. தமிழர்க்கான பொக்கிஷ அறை அது,” என்றார் அவர்.
செவ்வியல் இலக்கியங்கள் 42ன் முதல் பிரதி மட்டுமன்றி, அத்தனைப் பதிப்புகளின் பிரதிகளும் உள்ளன. காலவோட்டத்தில் சில பதிப்புகளில் இடைச்செருகலோ இடைநீக்கமோ இருந்தாலும் பின்னொரு நாளில் நம்பகத்தன்மைக்காக ஒப்பிட்டுப் பார்க்க ஏதுவாக அனைத்துப் பதிப்புகளும் சேகரிக்கப்பட்டுள்ளன என்றார்.
மேலும், தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதிய மு. அருணாச்சலம், தஞ்சைப் பிரகாஷ், வரலாற்றாளர் சம்பகலட்சுமி, ஐராவதம் மகாதேவன், தெ.பொ.மீனாட்சி சுந்தரம்ஏ.கே.ராமானுஜன், மில்ட்டன் சிங்கர், டென்னிஸ் ஹட்சன் போன்றோரின் சேகரிப்புகளை நன்கொடையாக வழங்கியதாகத் தெரிவித்தார்.
பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால், பதிப்பாளர்கள் பலரும் அனுப்பிவைக்கின்றனர் என்று கூறிய முனைவர் சுந்தர், அண்மையில் ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அன்பளிப்பாக வழங்கிய ஓலைச்சுவடியைத் தங்களிடம் கொடுத்துப் பாதுகாக்கச் சொல்லியதைச் சுட்டினார்.
ஒடிசாவில் ஆட்சிப்பணிப் பொறுப்புகளிலிருந்து ஈராண்டுகள் விடுமுறை எடுத்துக்கொண்டு இந்த நூலகத்தில் பயின்றதை நினைவுகூர்ந்தார் திரு பாலகிருஷ்ணன்.
மேல்-மேற்கு, கீழ்-கிழக்கு ஆங்கிலக் கட்டுரையையும் பின்னர் அதை மொழிபெயர்த்து சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் என்று வெளியிட்டதையும் குறிப்பிட்டார்.
வழக்கமான வருகையாளர்கள் என்பதைவிட தமிழ் அல்லது வரலாற்று ஆய்வில் தீவிரமாக ஈடுபடுவோர் அனைவருக்கும் உணர்வுபூர்வமான ஈடுபாட்டைத் தரும் முக்கியத் தலம் இது என்றார் அவர்.
யார் வேண்டுமானாலும் வந்து இந்நூலகத்தைப் பயன்படுத்தலாம் என்றார் முனைவர் சுந்தர். “முதல்முறை வருவோர் விவரங்களைப் பதிவுசெய்து கொள்ளவேண்டும். பள்ளி மாணவர்களுக்கு இதைப் பயன்படுத்தும் முறைகளைச் சொல்லித் தருகிறோம்,” என்று கூறினார்.
மேலும், “கல்விமான்களும் பொதுமக்களும் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் மாதாந்தரக் கூட்டங்கள் நடத்துகிறோம். அதில் யாரும் கலந்துகொள்ளலாம்.
“அரிய, பலரும் பயன்படுத்தாத பிரிவுகளைச் சேர்ந்த ஆவணங்களைக் காட்சிப்படுத்துகிறோம். அது மக்களிடையே அந்தக் குறிப்பிட்ட அம்சம் பற்றிய அறிவு வளர்ச்சிக்கு உதவுகிறது. வருங்காலத்தில் இந்தக் கண்காட்சிகளை மெய்நிகர் முறையிலும் அமைக்க முயல்கிறோம்,” என்றார் அவர்.
சங்கச் சுரங்கம் பற்றிய உரைகள் நடத்தப்படுவதாகத் திரு பாலகிருஷ்ணன் கூறினார்.
பெண் எழுத்து, சிந்துவெளி, தமிழ்நாட்டில் காந்தி இப்படிப் பல தகவல் சார்ந்த கண்காட்சிகள் அமைக்கப்படுவதாக முனைவர் சுந்தர் தெரிவித்தார்.
நூலகத்தின் இணையத்தளத்தில் உலகத்தரம் வாய்ந்த பட்டியல்/அட்டவணை (catalogue), மின்னூல்களுக்கு ‘மார்க்21 கேட்டலாக்’ இருப்பதாக அவர் கூறினார்.
சிங்கப்பூரில் கிடைக்காத, ஆனால் சிங்கப்பூர், மலேசியா சார்ந்த ஆவணங்களும் உள்ளதாகவும், சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்துடன் மின்னிலக்கமயமாக்கல் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தமிழ் அறிவு வளாகம்
“சிங்கப்பூரில் நடந்த கூட்டத்தில் தமிழ் அறிவு வளாகம் திட்டத்தின் ஓர் அங்கமாக, புலம்பெயர்ந்தோரை அடையாளப்படுத்தக்கூடிய திட்டம் ஒன்றைத் திரு அருண் மகிழ்நன் பரிந்துரைத்தார். உடனடியாகச் செய்வதாக வாக்களித்துள்ளோம்,” என்றார் முனைவர் சுந்தர்.
சிந்துவெளி ஆய்வகம், அதில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான ஐராவதம் மகாதேவன் இருக்கை தொடங்கப்பட்டது குறித்தும் அவர் குறிப்பிட்டார்.
சிந்துவெளிக் குறிப்புகளை உலகக் கல்விமான்கள் ஒப்புக்கொள்ளும் வகையில் யாராவது வாசித்துக்காட்டினால் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசைத் தமிழக அரசு அறிவித்திருப்பதைச் சுட்டினார்.
“எழுத்துருக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இப்படிப் பல அம்சங்களுக்கான ஒரே பொதுவான அடையாளம் தேவைப்படுகிறது.
தமிழ் அறிவு வளாகம் பற்றி விளக்கிய திரு பாலகிருஷ்ணன், “இந்த நூலகத்துக்கு ஒரு வரலாறு, வளர்ச்சி உள்ளது. நூலகம், ஆவணக் காப்பகம், அருங்காட்சியகம் மூன்றும் சேர்ந்ததாக இருக்கிறது. வீச்சும் விரைவும் தாக்கமும் விரிவடைந்துகொண்டே உள்ளது,” என்றார்.
“இது ஒரு வளாகம். அறிவை முன்னிறுத்துகிறது. அதனால் அறிவு வளாகம். இதன் அடிப்படையாக இருப்பது தமிழ். அதனால் தமிழ் அறிவு வளாகம். அறிவு பொதுவானது என்றாலும் தமிழ் அறிவுக்குத் தனித்துவம் இருக்கிறது. அதற்கான உரையாடல் களமாக இது விளங்கும்,” என்று திரு பாலகிருஷ்ணன் கூறினார்.
வரலாற்றில் ஒரு சதுர அடி
வரலாற்றில் ஒரு சதுர அடி எனும் முன்னெடுப்பு பற்றியும் அவர் குறிப்பிட்டார்.
“இது ஊர்கூடி இழுக்கவேண்டிய தேர். உலகத் தமிழர்கள் அனைவருக்கும் இதில் உரிமை இருக்கும். அதனால் இதில் பங்களிக்கவிருக்கும் அனைவரின் பெயர்களும் ஊர், நாடு குறித்த வரைபட விவரங்களுடன் சுவர்களில் பொறிக்கப்படும்,” என்று திரு பாலகிருஷ்ணன் கூறினார்.
தமிழர்களுக்குத் தங்கள் பெயரை விட்டுச்செல்லும், புகழை நிறுவிச்செல்லும் ஆர்வம் வழிவழியாக உண்டு என்றார் அவர்.
அந்த மரபைத் தொடரும் விதமாக, செயற்கரிய செய்தார் பெயரை நிலைக்கச் செய்யும் முயற்சியாக உலகத் தமிழர் அனைவர்க்குமான வாய்ப்பு இது என்று கூறினார்.
வளைகாப்பு, பிறந்தநாள், திருமணநாள் எனத் தனிப்பட்ட முறையில் தங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நாள்களை முன்னிட்டுப் பலரும் நன்கொடை வழங்கிவருவதை இருவரும் குறிப்பிட்டனர்.
தமிழை உயிர்ப்போடு வைத்திருக்கும் தமிழர்களின் ஆர்வத்தை இது பறைசாற்றுவதாக அவர்கள் கூறினர்.

