இந்திய மரபுடைமை நிலையத் தலைவரும் சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத்தின் பதிவாளருமான ரா.ராஜாராமுக்கு தமிழக அரசு ‘கணியன் பூங்குன்றனார்’ விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது.
உயர்கல்விக் கொள்கையில் முன்னோடி வகித்தது, பின்தங்கிய இந்திய மாணவர்களுக்கான பலவகை முயற்சிகளில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு கல்விசார் பணிகளுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
வெளிநாடுகளில் வசிக்கும் புலம்பெயர் தமிழர்களின் அடுத்த தலைமுறைகளுக்கு மொழி, கலைகள் தொடங்கி பல்வேறு முன்னெடுப்புகளைப் பறைசாற்றிய அயலகத் தமிழர் தின விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இவ்விருதை வழங்கிச் சிறப்பித்தார்.
சென்னையில் நடைபெற்ற இவ்விழாவில் விருதுடன், தங்கப் பதக்கம், பாராட்டுப் பத்திரம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
“அனைத்துலக அளவில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் 85 மில்லியன் தமிழர்கள் வாழ்கின்றனர். அங்கு அவர்களின் வேர்களுடன், அங்குள்ள பாரம்பரியங்களுக்கு ஏற்ப திறமைகளும் புதுவடிவம் ஏற்கின்றன. அவற்றை ஆராயவும் பாராட்டவும் தளம் அமைந்துள்ளது சிறப்பு,” என்றார் திரு ராஜாராம்.
“உலகெங்கும் உள்ள தமிழர்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் எனக்கு ‘கணியன் பூங்குன்றனார்’ விருது வழங்கப்பட்டது பெருமையளிக்கிறது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
‘எத்திசையும் தமிழணங்கே’ எனும் கருப்பொருளில் நடந்த இவ்விழாவில், நாடுகள் கடந்து வாழும் தமிழர்களின் வழித்தோன்றல்களுக்கு 100 ஆசிரியர்கள், கலைஞர்கள் மூலம் கலாசாரக் கூறுகளைக் கற்பிக்க புதிய திட்டம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

