தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரின் புகழ்பெற்ற மாதர் பட்டியலில் எழுத்தாளர் கமலாதேவி

4 mins read
dcdc4326-6d27-4aa0-a27a-abed3ee30a72
சிங்கப்பூரின் கலை, கலாசாரத் துறைகளுக்குச் சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக ‘மகளிர் ஹால் ஆஃப் ஃபேம் சிங்கப்பூர்’ பட்டியலில் எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன், 74, சேர்க்கப்பட்டுள்ளார். - படம்: த.கவி

சமூகப் பணி, பொதுச் சுகாதாரம், விளையாட்டுத்துறை, கலைகள் போன்றவற்றில் முன்னோடிகளாகத் திகழும் பெண்களின் பெயர்கள் அனைத்துலக மகளிர் தினத்தன்று சிங்கப்பூரின் புகழ்பெற்ற மாதர் பட்டியலில் ‘Singapore women’s Hall of Fame) சேர்க்கப்படுகின்றன.

அந்த வரிசையில் சிங்கப்பூரில் எழுத்தாளரான திருவாட்டி கமலாதேவியின் பெயர் இந்த ஆண்டு அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இலக்கியம் என்பது வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் ஒரு கலை என்பதைத் தமது எழுத்தின்வழி கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக உணர்த்தி வருகிறார் 74 வயது எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்.

160க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 18 மேடை நாடகங்கள், 300 வானொலி நாடகங்கள், ஐந்து நூல்கள் உள்ளிட்ட திருவாட்டி கமலாதேவியின் ஏராளமான தமிழ், மலையாளப் படைப்புகள், சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, கனடா போன்ற நாடுகளில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுப் பன்னாட்டு அங்கீகாரம் பெற்றுள்ளன.

எழுத்தின் மீது திருவாட்டி கமலாதேவி கொண்டுள்ள ஆர்வம் அவரது பதின்ம பருவத்திலிருந்தே தொடங்கியது.

தமது பதின்ம வயதில் கவிதை, கட்டுரைப் போட்டிகளில் பல்வேறு விருதுகளை இவர் பெற்றுள்ளார்.
தமது பதின்ம வயதில் கவிதை, கட்டுரைப் போட்டிகளில் பல்வேறு விருதுகளை இவர் பெற்றுள்ளார். - படம்: கமலாதேவி அரவிந்தன்

மலேசியாவின் லாபிஸ் நகரில் 1950ல் பிறந்து வளர்ந்த திருவாட்டி கமலாதேவி, கேரளத்தைச் சேர்ந்த தம் தந்தையிடம் வீட்டிலேயே மலையாளம் கற்றார். இத்துடன், பள்ளியில் ஆங்கிலம், மலாய், தமிழ் ஆகிய மூன்று மொழிகளை அவர் பயின்றார்.

“வீட்டில் முழு நேரமும் மலையாளத்தில்தான் கலந்துரையாடுவோம். இருப்பினும், தமிழ் வகுப்பின்போது படித்த பாரதி கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தன,” என்றார் திருவாட்டி கமலாதேவி.

தமிழ் ஆசிரியர் முத்து வீரசாமி நாயக்கர், தமது தமிழ்த் திறன்களை வளர்ப்பதில் முக்கியப் பங்கு வகித்ததாக திருவாட்டி கமலாதேவி சொன்னார். பள்ளியில் ஒவ்வொரு வாரமும் தமிழ்க் கட்டுரைகள் எழுதுவதற்கும் அவற்றை ‘தமிழ் நேசன்’ என்ற மலேசியத் தமிழ் நாளிதழின் சிறுவர் பக்‌கத்துக்கு அனுப்புவதற்கும் ஆசிரியர் முத்து, திருவாட்டி கமலாதேவியைத் தொடர்ந்து ஊக்குவித்தார்.

“சக மாணவர்கள் ‘இவள் ஓர் எழுத்தாளர்!’ என்று பேச ஆரம்பித்தபோது அந்த பிஞ்சு வயதில் நான் உணர்ந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை,” என்ற கமலாதேவி தமது எழுத்துப் பயணத்தில் கரடுமுரடான பாதைகளைக் கடந்து வந்ததாகக் குறிப்பிட்டார்.

குடும்பத்தினர், குறிப்பாக அவரது தந்தை, தம்மை மலையாளத்தில் கவனம் செலுத்த விரும்பியதால் தமிழில் எழுதுவதைக் கடுமையாக எதிர்த்தாக அவர் சொன்னார்.

“பத்திரிகையில் எனது தமிழ்க் கவிதைகளும் கட்டுரைகளும் எனது புகைப்படத்துடன் வெளிவந்திருப்பது தந்தைக்குத் தெரியவந்த நேரங்களில் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் அடி வாங்குவேன்,” என்றார் திருவாட்டி கமலாதேவி.

இதனால் பலமுறை அழுதிருப்பதாகவும் எழுதுவதை முற்றிலும் விட்டுவிடலாம் என்றுகூட நினைத்திருப்பதாகவும் சொன்னார். இருப்பினும், பள்ளி ஆசிரியரும் பிற பத்திரிகை ஆசிரியர்களும் அளித்த ஆதரவு அவரைத் தொடர்ந்து எழுத ஊக்குவித்ததாக அவர் கூறினார்.

தமது பதின்ம வயதில் கவிதை, கட்டுரை போட்டிகளில் பல்வேறு விருதுகளை இவர் பெற்றுள்ளார்.
தமது பதின்ம வயதில் கவிதை, கட்டுரை போட்டிகளில் பல்வேறு விருதுகளை இவர் பெற்றுள்ளார். - படம்: கமலாதேவி அரவிந்தன்

தமது 15வது வயதில், தமிழ் இலக்கியப் போட்டி ஒன்றில் மாகாணத்திலேயே முதல் பரிசை திருவாட்டி கமலாதேவி வென்றார். “இரண்டாம் பரிசைப் பெற்ற நன்கு அறியப்பட்ட கவிஞர், என் வயதை அறிந்து, கட்டுரையை நான் சுயமாக எழுதவில்லை என அனைவரின் முன்னிலையிலும் சந்தேகித்தார். மேடையில் எனது தமிழ் ஆற்றலை நிரூபிக்க தமிழ் செய்யுள்களையும் கவிதைகளையும் நினைவிலிருந்து வாசித்து அனைத்துச் சந்தேகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தேன்,” என்று திருவாட்டி கமலாதேவி கூறினார்.

“அப்போது, அந்த போட்டிக்குச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த தமிழ் முரசின் நிறுவனர் தமிழவேள் கோ.சாரங்கபாணி, ‘தமிழுக்குக் கிட்டிய தவச்செல்வி கமலாதேவி’ என்று சிறப்பித்துடன் தமது மாலையை எனது கழுத்தில் அணிவித்துப் பாராட்டுகள் தெரிவித்தார்,” என்ற கமலாதேவி, “அந்த விருதுதான் வாழ்க்கையில் நான் பெற்ற மிகப் பெரிய விருது,” என்று அந்த தருணத்தை கண்ணீர் மல்க நினைவுகூர்ந்தார்.

17 வயதில் திருமணமான இவர், தம் கணவருடன் சிங்கப்பூரின் செம்பவாங் வட்டாரத்துக்குக் குடிபெயர்ந்தார். அதன் பிறகு, சிங்கப்பூரையே தாயகமாகக் கொண்டார். இவரது சிறுகதைகள், தொடர்கதைகள் தமிழ் முரசில் பிரசுரமாகின.

திருவாட்டி கமலாதேவி அரவிந்தன் எழுதியுள்ள தமிழ் நூல்கள்.
திருவாட்டி கமலாதேவி அரவிந்தன் எழுதியுள்ள தமிழ் நூல்கள். - படம்: அனிதா தேவி பிள்ளை

தமது அனைத்துக் கதைகளையும் வாழ்க்கையின் உண்மையான சம்பவங்களின் அடிப்படையில் எழுதுவதாகவும் எதையும் முழு கற்பனையைக் கொண்டு எழுதியதில்லை என்றும் திருவாட்டி கமலாதேவி சொன்னார். இதனால், ஒரு நல்ல கதையைத் தேடி, ‘சிவப்பு விளக்குப் பகுதி’ போன்ற வெவ்வேறு இடங்களுக்குக்கூட இவர் சென்றுள்ளார்.

“வாழ்க்கையை வாழ்க்கையாக எழுதத் தெரிந்தவனே எழுத்தாளன் என்பதை எந்த சபையிலும் நான் சொல்வேன். ஒரு படைப்பாளியை இலக்கியம்தான் உண்மையில் செழுமைப்படுத்தும். அவனது வாழ்க்கை அனுபவங்கள் மேலும் அதற்கு உதவும்,” என்றார் திருவாட்டி கமலாதேவி.

அவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்க ஒன்றான ‘செம்பவாங்’ நாவல், 1960களில் அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்க்கையில் நடந்த உண்மையான நிகழ்வுகளைச் சித்திரிக்கிறது. இந்த நாவல் அவரது மகள் டாக்டர் அனிதா தேவி பிள்ளையால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு 2020ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

2021ல் நடைபெற்ற ‘செம்பவாங்’ நாவல் வெளியீட்டு விழாவில் அப்போது போக்குவரத்து அமைச்சராக இருந்த திரு ஓங் யி காங் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
2021ல் நடைபெற்ற ‘செம்பவாங்’ நாவல் வெளியீட்டு விழாவில் அப்போது போக்குவரத்து அமைச்சராக இருந்த திரு ஓங் யி காங் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

“ஓர் எழுத்தாளன் பிறப்பிலேயே உருவாவதில்லை. மாறாக, அவனைச் சுற்றியுள்ளவர்களால் உருவாக்கப்பட்டு வடிவமைக்கப்படுகிறான்,” என்று கூறிய அவர், தம் ஆசிரியர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், வானொலி நிலையத் தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

அடுத்த தலைமுறை தமிழ் எழுத்தாளர்களை உருவாக்க இலக்கியப் போட்டிகளில் நடுவராக இருப்பது, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு எழுத்துப் பயிலரங்குகளை நடத்துவது, மாணவர்களுக்கு வழிகாட்டியாக செயல்படுவது உள்ளிட்ட பல நடவடிக்கைகளில் இவர் ஈடுபட்டு வருகிறார்.

இன்றுவரை தமது எழுத்துப் பயணத்தில் தமக்கு மிகப்பெரிய ஆதரவாளர்களாக இருக்கும் தம் குடும்பத்தினருக்குத் தாம் என்றும் கடமைப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

திருவாட்டி கமலாதேவியும் எழுத்தாளரான அவரின் மகள் டாக்டர் அனிதா தேவியும் தங்களது எழுத்துப் படைப்புகளுக்குப் பல்வேறு விருதுகளையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளனர்.
திருவாட்டி கமலாதேவியும் எழுத்தாளரான அவரின் மகள் டாக்டர் அனிதா தேவியும் தங்களது எழுத்துப் படைப்புகளுக்குப் பல்வேறு விருதுகளையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளனர். - படம்: த.கவி

வாழ்க்கையில் எத்தனையோ சோதனைகளையும் வேதனைகளையும் கடந்து வந்தாலும் 74வது வயதிலும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.

“இதற்குக் காரணம் இலக்கிய தாகம் என்பதைவிட என்னுடைய தேடல்தான்,” என்றார் திருவாட்டி கமலாதேவி.

குறிப்புச் சொற்கள்