மாணவர்கள் தயக்கமின்றி வினா எழுப்பவும் தங்கள் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளவும் உதவும் வகையில் ஒற்றுமையும் ஆதரவும் நிறைந்த வகுப்பறைச் சூழலை உருவாக்குவதைத் தமது கற்பித்தல் முறையின் முக்கிய அம்சமாகக் கொண்டிருக்கிறார் சாரா கிறிஸ்டியன், 31.
கடந்த ஏழு ஆண்டுகளாக விக்டோரியா தொடக்கக் கல்லூரியில் பொதுத்தாள் (General Paper) பாடத்தைக் கற்பிக்கும் இவர், அனைத்துலக, சமூகப் பிரச்சினைகளைப் பற்றிய ஆழ்ந்த சிந்தனையை மாணவர்களிடையே ஊக்குவிப்பதற்காகவும் கற்பித்தல் அணுகுமுறைக்காகவும் இவ்வாண்டின் ஆங்கிலப் பாடத்துக்கான நல்லாசிரியர் விருதைத் (Inspiring Teacher of English Award) தொடக்கக் கல்லூரிப் பிரிவில் பெற்றுள்ளார்.
ஆங்கில மொழி மீதான ஆர்வத்தைத் தூண்டி, மாணவர்களின் எழுத்துத்திறனையும் சொல்லாற்றலையும் மேம்படுத்தும் ஆசிரியர்களை அங்கீகரிக்கும் நோக்கத்தோடு நல்ல ஆங்கிலம் பேசுவோம் இயக்கமும் (Speak Good English Movement) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழும் இணைந்து, கல்வி அமைச்சின் ஆதரவுடன் இவ்விருதளிப்பு நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்திவருகின்றன.
இந்த விருது விழா 2008ல் தொடங்கியதிலிருந்து இதுவரை 143 ஆசிரியர்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். வெற்றியாளர்களுக்கு ஒரு கிண்ணம், சான்றிதழ், ரொக்கப் பரிசாக $2,000 வழங்கப்படுகிறது.
அக்டோபர் 1ஆம் தேதி தேசிய நூலகக் கட்டடத்தில் நடைபெற்ற 17வது விருதளிப்பு நிகழ்ச்சியில், எட்டு ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர். கற்பித்தல், தலைமைத்துவம் என இரு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கல்வி, மனிதவளத் துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
“ஆங்கில ஆசிரியர் பணி மகத்தானது. மாணவர்களுக்கு ஆங்கில மொழித் திறன்களைப் புகட்டுவதால் உலகளாவிய வாய்ப்புகளை அவர்கள் பயன்படுத்த முடியும்,” என்று அமைச்சர் தமது உரையில் தெரிவித்தார்.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பட்டத்தை முடித்த பிறகு தனது கற்பித்தல் பயணத்தைத் தொடங்கினார் குமாரி சாரா. ஒரு மாணவராக பொதுத்தாளின்மீது தாம் கொண்டிருந்த பேரார்வம், ஆசிரியரான பிறகும் சற்றும் குறையவில்லை என்றார் அவர்.
“நாட்டு நடப்பைத் தெரிந்துகொள்ள நாளும் அதிக நேரம் செலவிடுகிறேன். சிங்கப்பூரிலும் உலகிலும் நடக்கும் நிகழ்ச்சிகளை மாணவர்கள் உலகச் சூழ்நிலைகளுடன் தொடர்புபடுத்தும் வகையில் அவற்றை எனது பாடங்களில் புகுத்தி ஒருங்கிணைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
பொதுத்தாள் என்பது ஒரு பாடம் மட்டுமன்று; மாணவர்கள் உலகைப் பார்க்கும் கண்ணாடி என்கிறார் குமாரி சாரா.
“வகுப்பறை கற்றலைத் தாண்டி அனைத்துலகத் தகவல்களையும் மாணவர்கள் தெரிந்துவைத்திருக்க வேண்டும். எதையும் மேலோட்டமாகப் பார்க்காமல் அதற்கான காரணகாரியத்தை ஆராய்ந்து பார்க்கும் ஆழ்ந்த சிந்தனையாளர்களாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய இலக்கு,” என்றார் அவர்.
படிக்கும் பாடத்தில் தங்கள் பங்கை மாணவர்கள் உணரவேண்டும் என்று குமாரி சாரா நம்புகிறார். ஒரு வகுப்பறைக் கலந்துரையாடலின்போது மாணவர்கள் சிலர் கண்ணீர் சிந்தியதை நினைவுகூர்ந்த அவர், இது போன்ற தருணங்கள் சமூக, அனைத்துலகப் பிரச்சினைகளில் மாணவர்கள் கொண்டிருக்கும் உண்மையான அக்கறையைக் காட்டுவதாகச் சொன்னார்.
“கற்றல் உணர்ச்சிகரமானதாக மாறும்போது, அது பாடம் என்பதற்கு அப்பால் ஆழ்ந்த, துடிப்பான, பொருள்பொதிந்த ஒன்றாக மாறுகிறது,” என்று அவர் கூறினார்.
வகுப்பறையில் அனைத்து மாணவர்களையும் உள்ளடக்கிய சூழலை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தும் குமாரி சாரா, உரையாடலையும் கலந்துரையாடலையும் கற்றலின் முக்கியக் கூறுகளாகப் பயன்படுத்தி வருகிறார். வகுப்பு நேரம் முடிந்த பிறகும் அவரது மாணவர்கள் கூடுதல் நேரம் தங்கியிருந்து சமத்துவமின்மை பற்றிய விவாதத்தை மேலும் ஆழமாக ஆராய்ந்த தருணம் தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
“எந்தக் கேள்விக்கும் நான் ஒருபோதும் ஒரேயொரு சரியான பதிலைக் கொண்டிருப்பதில்லை. மாணவர்களை ஆழமாகச் சிந்திக்கத் தூண்டி, வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கருத்தில்கொண்டு, நாம் விவாதிக்கும் பிரச்சினைகளுக்குப் பெரும்பாலும் பல பார்வைகள் உண்டு என்பதை உணர வைக்க விரும்புகிறேன்,” என்று குமாரி சாரா கூறினார்.
இந்த விருதுக்கு மாணவர்கள் பலர் தன்னைப் பரிந்துரைத்ததைக் கேள்விப்பட்டபோது, வியப்பும் நன்றியுணர்வும் மிகுந்ததாகக் கூறிய சாரா, “இவ்விருது மாணவர்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது,” என்றார்.