‘ஸ்போர்ட் எஸ்ஜி’ அமைப்பின் ‘டீம் நிலா’ (Team Nila) தொண்டூழிய இயக்கம் தனது 10ஆம் ஆண்டு விழா கொண்டாட்டங்களைச் சனிக்கிழமை (டிசம்பர் 7) கோலாகலமாகத் தொடங்கியது.
கொண்டாட்டங்களின் தொடக்கமாக கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா, 75 ‘டீம் நிலா’ தொண்டூழியர்களுடன் ஒன்றிணைந்து ‘டீம் நிலா ஃபிரெண்ட்ஷிப் பேண்ட்’ உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
சுற்றுச்சூழல் சமூக நிறுவனமான ‘டெர்ரா’ சிங்கப்பூருடன் (Terra Singapore) நடைபெற்ற இந்த நிகழ்வில், ‘டீம் நிலா’ தொண்டூழியர்களின் சட்டைகளைப் பயன்படுத்தி ‘ஃப்ரெண்ட்ஷிப் பேண்ட்’கள் தயாரிக்கப்பட்டன.
கடந்த 10 ஆண்டுகளாகத் தொண்டூழியர்களின் முயற்சிகளைப் பாராட்டும் வண்ணம் இந்தக் கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. அடுத்த நான்கு மாதங்களில் சுமார் 4,000 ‘ஃப்ரெண்ட்ஷிப் பேண்ட்’கள் தயாராகி தொண்டூழியர்களுக்குப் பரிசளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விளையாட்டு ஆர்வத்தின் மூலம் தம் மகனுடன் இணைய விரும்பிய திரு மாறன் சக்கரபாணி, 56, 2015ல் ‘டீம் நிலா’வில் தொண்டூழியராகச் சேர்ந்தார். விளையாட்டுத் துறையில் தொண்டூழியராக இருப்பதால் மற்ற தொண்டூழியர்கள், விளையாட்டாளர்கள் மக்களைச் சந்தித்து அவர்களிடம் கற்றுக்கொண்ட அனுபவம் இன்றியமையாதது என்றார் அவர்.
“தொண்டூழியத்தில் கற்றுக்கொண்ட திறன்கள் என் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் பொருந்தும் என்று நான் ‘டீம் நிலா’ மூலம் உணர்ந்தேன். எந்தவொரு தொண்டூழியச் சேவைக்கும் பேரார்வம் மிக முக்கியம்,” என்றார் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் துணை ஆசிரியராகப் பணிபுரியும் திரு மாறன்.
இந்த முயற்சியை ஆதரிக்க, நீக்கப்பட்ட ‘டீம் நிலா’ சட்டைகளை ‘டெர்ரா’ சிங்கப்பூர் மற்றும் ‘ஸ்போர்ட் எஸ்ஜி’ அலுவலகங்களில் தொண்டூழியர்கள் ஒப்படைக்கலாம். டீம் நிலா ’ஃப்ரெண்ட்ஷிப் பேண்ட்’களைத் தயாரிக்க ஆர்வமுள்ளோர், ‘ஆக்டிவ் எஸ்ஜி’ விளையாட்டு மையங்களில் 2025 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெறவிருக்கும் பயிலரங்குகளில் பங்கேற்கலாம்.
2025 வரை தொடரும் இந்தக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ‘டீம் நிலா’ கேளிக்கை, விருது நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது. ‘டீம் நிலா’ 10ஆம் ஆண்டு நிறைவு விழாவின் கொண்டாட்டங்களைப் பற்றிய மேல்விவரங்களுக்கு https://www.activesgcircle.gov.sg/team-nila என்ற இணையத்தளத்தை நாடலாம்.

