லிட்டில் இந்தியாவின் மாலை நேரத் தேக்கா சந்தை எப்போதுமே பரபரப்பானது. ஆயினும், தேக்கா நிலையத்தின் ஓர் உணவு மேசையைs சுற்றி நரைத்த முடிகளையும் மீறி, கண்கள் மின்ன ஒரு முதியவர் குழு அமர்ந்திருக்கிறது.
அவர்களுக்குத் தமிழே இதயத் துடிப்பு. தேக்காவே இச்சங்கத்தின் அடிநாதம்; நட்பே மருந்து. அவர்களின் பேச்சில் அறிவின் முதிர்ச்சியும், சமூகத்தின் மீதான அக்கறையும் தெறிக்கிறது.
வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு, அவர்கள் ஏதோ தேநீர் அருந்தும் மூத்தோர்போலத் தோன்றலாம். ஆனால், தங்களை ‘வயோதிக வாலிபர் சங்கம்’ என்று பெருமையுடன் அழைத்துக்கொள்ளும் இந்தச் சங்கத்தினருக்கு அந்த மேசை ஒரு ‘கால இயந்திரம்’.
சந்தையில் கேட்கும் பல்வேறு சத்தத்திற்கு இடையிலும் வயோதிக வாலிபர் சங்கத்தினர் அமர்ந்திருக்கும் இடத்தில் தமிழ் இலக்கிய மணம் கமழ்கிறது; அரசியல் முதல் அறிவியல் பற்றிய விவாதங்கள் காற்றில் மிதக்கின்றன.
இந்தச் சந்திப்பிற்கு அச்சாணியாக இருப்பவர் கவிக்கொண்டல் க.து.மு. இக்பால். இவருடன் அமர்ந்து உரையாடுவதையே ஒரு பேறாகக் கருதுகிறார்கள் சங்கத்தின் ஒய்வறியா இளையர்கள். பலர் 70 வயதைக் கடந்தாலும், அவர்களின் பேச்சிலும் சிந்தனையிலும் 18 வயதினர்க்கே உரிய துடிப்பும், சமூகம், தமிழ் மீதான ஆர்வமும் இழையோடுகிறது.
தேக்காவின் தமிழ் முகவரி
கவிதையும் உணர்வும் பின்னிப் பிணைந்துள்ள இக்குழுவின் பெருமைமிகு உறுப்பினராக தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு உற்சாகமாக தமது அனுபவத்தைத் தமிழ் முரசிடம் பதிவுசெய்தார் திரு பிச்சினிக்காடு இளங்கோ, 73.
கவிமாலை அமைப்பின் நிறுவனர், எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்ட இவரின் மற்றொரு முகம் முற்றிலும் புதியது.
“நீங்கள் நீண்டகாலம் வாழ விரும்பினால், பழைய மதுவையும் பழைய நண்பர்களையும் அருகில் வைத்துக்கொள்ளுங்கள்,” என்ற பித்தாகரஸின் பொன்மொழியில், “நாங்கள் மதுவை மாற்றிவிட்டுத் ‘தேநீர்’ சேர்த்துக்கொண்டோம்,’’ என்று புன்னகைத்தார் மூத்த கவிஞர்.
தொடர்புடைய செய்திகள்
“தேக்காவில் நாங்கள் கூடினால் எங்கள் ஒவ்வொருவரின் இதயத்திலும் கேட்காமலேயே கவிதை ஊற்றெடுக்கும்,’’ என்று மேலும் கூறினார் அவர்.
பல ஆண்டுகளாக வயோதிக வாலிபர் சங்கம் தவறாமல் ஒன்றுகூடும் தலைமையகமாக, அறிவுப் பகிர்வுத்தளமாகவே திகழ்ந்து வருகிறது தேக்கா.
“கவிஞர் இக்பால் ஐயாவுடன் திரளான கவிஞர்கள் இருந்தனர். இப்போது பலர் மறைந்துவிட்டனர். ஆனாலும், ஐயா இன்றளவும் மாலை 6 மணிக்கெல்லாம் இங்கே வந்துவிடுவார்.
‘‘பழைய கவிதைகள், இலக்கிய விழாக்கள், சமகாலச் செய்திகளை அவரோடு பகிர்ந்துகொள்வது எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது,” என இந்தச் சங்கமத்தின் பின்னணியை விவரித்தார் திரு வீ. தமிழ்மறையான், 71.
தனிமையை வெல்லும் ‘இளஞ்’சிங்கங்கள்
இக்குழுவின் நட்பை இரட்டிப்பாக்கி தமிழ் மருந்தால் தனிமையை வெல்லும் இதர ‘இளஞ்’சிங்கங்களும் தங்கள் உணர்வுகளை பகிர்ந்தனர்
80 வயதைக் கடந்தாலும், சங்கத்தின் மையப்புள்ளியாகத் திகழும் கவிஞர் க.து.மு.இக்பால், முதுமையின் தனிமையைத் தமிழ் இலக்கியத்தின் துணைகொண்டு எவ்வாறு சங்கத்தினர் கடக்கிறார்கள் என்பதை உணர்வுபூர்வமாக விவரித்தார்.
அவர் பேசுகையில், “அந்திக்காலம்வரை தேடி அலைந்து, அன்போடு ஒரு பிடி அரிசி கிடைத்தால் அதை வைத்து உணவு சமைத்து உண்ணும் ஓர் ஏழையின் நிலையை ஒரு வெண்பா விளக்குகிறது. கவிஞர் கண்ணதாசன் காலத்தில் சொல்லப்பட்ட அத்தகைய ஆழமான இலக்கியக் கருத்துகளை இன்றும் நாங்கள் இங்கே அசைபோடுகிறோம்,” எனப் பழைய நினைவுகளை மீட்டெடுத்தார்.
குறிப்பாக, ஒரு கருத்தைப் பிடிக்கவில்லை என்றால் அதை ‘கொண்டு வந்து போட்டு கொளுத்து’ எனத் துணிச்சலாகச் சொல்லும் பழைய இலக்கிய மரபுகளை நினைவுகூர்ந்து மகிழ்ந்தார் அவர்.
முதுமையில் பலரையும் வாட்டும் தனிமை குறித்து அவர் கூறுகையில், “இங்கே வந்தவுடன் தனிமை எங்களைவிட்டு விடுதலை பெறுகிறது. நண்பர்களைச் சந்திக்கிறோம், பல்வேறு விதமான தலைப்புகளைப் பற்றி விவாதிக்கிறோம். இது மனத்திற்கு மிகுந்த நிம்மதியைத் தருகிறது,” என்றார்.
தமிழ் இலக்கியத்தின் நயங்களையும், கவிதையின் ஈற்றடிகளையும் விவாதிப்பதில் அவர் காட்டும் ஆர்வம் இளைய தலைமுறைக்கும் வியப்பை அளிக்கிறது என்று ஒருசேர சங்கத்தினர் பாராட்டினர்.
தேக்காவில் இளைப்பாறும் ‘தமிழ்’ பறவைகள்
இன்றைய இயந்திரத்தனமான வாழ்வியலில், பணிச்சுமையும் மன அழுத்தமும் வயதைக் கடந்து அனைவரையும் ஆட்கொள்கின்றன. அத்தகைய இறுக்கமான சூழலில் சிக்கித் தவிப்பவர்களுக்கு, ‘வயோதிக வாலிபர் சங்கம்’ மிகச்சிறந்த இளைப்பாறுதல் என்றார் திரு பாலமுருகன், 50.
“கவிஞன் என்பவன் உலகக் குடிமகன்; உலகளாவிய சிக்கல்களுக்குத் தனது எழுத்தின் மூலம் அவன் தீர்வு காண வேண்டும் என்று பிச்சினிக்காடு ஐயா கூறுவதுண்டு.
‘‘அந்த வகையில், தேக்கா மேசையில் நாங்கள் விவாதிக்காத தலைப்புகளே இல்லை. எதைப் பற்றி அலசவும் முழுமையான சுதந்திரம் உண்டு,’’ என்றார் அவர்.
தொடர்ந்து பேசிய அவர், “பணிச்சூழலால் ஏற்படும் அழுத்தங்களை எல்லாம் இந்த மேசையிலேயே இறக்கி வைத்துவிட்டு, இங்கிருந்து கிளம்பும்போது காற்றில் பறக்கும் பறவையைப் போல லேசாக உணர்கிறேன்,’’ என்றார்.
இதே கருத்தை வலியுறுத்தினார் கவிஞர் தங்க வேல்முருகன், 55. “கவிதை பேசி குதூகலிக்கவும், உரையாடல் என்பதைக் கடந்து சமூகம் பற்றிய அக்கறைகளை முன்வைக்கவும் தேக்கா நிலையம் தங்களுகு பிடித்த இடம்,’’ என்றார் அவர்.
‘‘நாளெல்லாம் வேலைசெய்து விட்டு, பிறகு இங்கு வந்து கூடி, நண்பர்களோடு பேசிவிட்டுச் சென்றால்தான் இரவு நல்ல தூக்கமும் வருகிறது, அடுத்த நாள் வேலைக்குச் செல்ல நல்ல ஊக்கமும் கிடைக்கிறது,’’ என்றார் அவர்.
பொறியாளர் பாலகிருஷ்ணன், 50, கூறுகையில், “ஏதோ ஒரு இலக்கு அல்லது முடிவை நோக்கிப் பயணம் செய்யும் குழுவாக எங்களை நாங்கள் கருதவில்லை. மாறாக இது ஒரு தொடர் நிகழ்வு. இங்கு இருப்பவர்களில் யார் விடைபெற்றாலும் இந்தத் தமிழ்ப் பகிர்வு தேக்காவில் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்,” என்றார்.
இதற்கிடையே, அறிமுகம் வேண்டாம் என்ற கோரிக்கையுடன் கருத்தரைத்தார் அங்குள்ள கடையொன்றின் உதவியாளர்,
‘‘தமிழால் இணைந்து, நட்பால் பிணைந்து தேக்காவில் திளைக்கும் இந்த முன்னோடிகள் சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தின் அடையாளங்கள். 81 வயதிலும் 18 வயதின் சுறுசுறுப்போடு இவர்கள் வலம் வருவது, முதுமை என்பது முற்றுப்புள்ளியன்று என்பதைப் புரியவைக்கிறது,’’ என்றார் அவர்.

