உள்ளூர் கலைஞரின் கைவண்ணத்தில் மிளிரும் தைப்பூசக் காவடிகள்

3 mins read
4f044d1a-a29d-40e8-ae65-52e480899d63
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் காவடிகளை வடிவமைத்துவரும் காவடிக் கலைஞர் ராஜா கோவிந்தசாமி, 55. - படம்: த. கவி

ஒவ்வொரு தைப்பூசத் திருநாளன்றும் லிட்டில் இந்தியா வட்டாரச் சாலைகள் விழாக்கோலம் பூண்டிருக்கும்.

நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்ட காவடிகளைத் தோள்களில் சுமந்து செல்லும் பக்தர்களின் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக அமையும். கலைநயமிக்க ஒவ்வொரு காவடியின் பின்னும் பேருழைப்பும், கலைத்திறனும், ஆழ்ந்த பக்தியும் நிறைந்துள்ளது.

பக்தர்களால் அன்புடன் ‘டைமண்ட் ராஜா’ என்று அழைக்கப்படும் 55 வயது ராஜா கோவிந்தசாமி, காவடிகளை வடிவமைப்பதை ஒரு தொழில் என்பதைத் தாண்டி ஓர் ஆன்மிகக் கலை வடிவமாகப் பார்க்கிறார்.

1990லிருந்து அவர் இக்கலையில் ஈடுபட்டு வருகிறார். தைப்பூசம் அன்றாட வாழ்வியலோடு பின்னிப்பிணைந்திருந்த அவரது இளம்பருவமும் அவரது குடும்பச் சூழலுமே இதற்கு முக்கியத் தூண்டுகோல்களாக அமைந்தன.

ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள தமது ஐந்தறை வீட்டில் காவடிக்கு வடிவம் கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் திரு ராஜா கோவிந்தசாமி, 55.
ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள தமது ஐந்தறை வீட்டில் காவடிக்கு வடிவம் கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் திரு ராஜா கோவிந்தசாமி, 55. - படம்: த. கவி

தொடக்கக் காலத்தில் காவடி செய்வதை அவர் ஒரு வாழ்வாதாரத் தொழிலாகக் கருதவில்லை. கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஜூரோங் துறைமுகத்திலும், பின்னர் பிஎஸ்ஏ (PSA) நிறுவனத்தில் பயிற்சியாளராகவும், கப்பல் துறையில் குத்தகைதாரராகவும் அவர் பணியாற்றினார்.

மற்ற பணிகளுக்கு இடையில்தான் காவடி செய்யும் பணியையும் திரு ராஜா மேற்கொண்டு வந்தார். ஆனால், காலப்போக்கில் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகளால் பளுதூக்கும் வேலைகளைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டபோது, அவர் தம்மை முழுமையாக இக்கலையில் அர்ப்பணித்துக்கொண்டார்.

கடந்த கால எளிமையான வடிவங்களிலிருந்து, இன்றைய முப்பரிமாண, நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட காவடிகள் வரை, இக்கலை வடிவம் அடைந்துள்ள மாற்றங்களைத் தான் கண்கூடாகப் பார்த்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

காவடியை வடிவமைக்க திரு ராஜா பயன்படுத்தும் கருவிகளும் பொருள்களும்.
காவடியை வடிவமைக்க திரு ராஜா பயன்படுத்தும் கருவிகளும் பொருள்களும். - படம்: த.கவி

உள்ளூரில் ஒரு காவடியை வடிவமைக்க ஏறத்தாழ இரண்டு மாதங்கள் ஆகும். அதுவே, நுணுக்கமான வேலைப்பாடுகளுக்கு இந்தியக் கலைஞர்களுடன் இணைந்து செயல்படும்போது, குறைந்தது ஆறு மாத காலம் தேவைப்படுவதாக திரு ராஜா குறிப்பிட்டார்.

ஒரு பக்தர் தமக்கு விருப்பமான காவடி வடிவத்தின் புகைப்படத்தைக் கொண்டு வரும்போது, அதை அலுமினியம் அல்லது செப்புத் தகட்டில் வரைபடமாக உருவாக்குவதிலிருந்து இவருடைய பணி தொடங்குகிறது. தைப்பூசத்தை அடையாளப்படுத்தும் நுணுக்கமான வேலைப்பாடுகளைப் பொறிக்க, தகட்டின் தடிமன், ஆழத்தை மிகத் துல்லியமாகக் கணக்கிட்டுச் செயல்படுவார்.

தைப்பூசத்தை அடையாளப்படுத்தும் நுணுக்கமான வேலைப்பாடுகள், செப்பு அல்லது அலுமினியத் தகடுகளில் பொறிக்கப்படுகின்றன.
தைப்பூசத்தை அடையாளப்படுத்தும் நுணுக்கமான வேலைப்பாடுகள், செப்பு அல்லது அலுமினியத் தகடுகளில் பொறிக்கப்படுகின்றன. - படம்: த.கவி

முதற்கட்ட வரைபடங்களைப் பார்த்து பக்தர்கள் ஐயம் எழுப்புவதும், வேலை முழுமையாக முடிந்ததும் வடிவம் நேர்த்தியாக அமையும் என்று தாம் அவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதும் வழக்கம் என்றார் திரு ராஜா.

அடுத்ததாக, காவடிக்கான வடிவங்களை முழுமையாக கைகளாலேயே வெட்டிச் செதுக்கும் பணி நடைபெறும். உடல் உழைப்பைக் கோரும் இப்பணியை, துல்லியம் கருதி பல நாள்களாகப் பிரித்துச் செய்கிறார் திரு ராஜா. நவீன இயந்திரங்கள் மூலம் செய்யப்படும் ‘சிஎன்சி’ அல்லது ‘லேசர்’ முறைகளை இவர் பயன்படுத்துவதில்லை.

நவீன இயந்திரங்களின் உதவியின்றி, காவடிக்கான வடிவங்களை முழுமையாகத் தன் கைகளாலேயே வெட்டிச் செதுக்குகிறார் திரு. ராஜா
நவீன இயந்திரங்களின் உதவியின்றி, காவடிக்கான வடிவங்களை முழுமையாகத் தன் கைகளாலேயே வெட்டிச் செதுக்குகிறார் திரு. ராஜா - படம்: த. கவி

“இயந்திரங்கள் வேலையை விரைவாக முடித்தாலும், இறுதிப் பொருள் செயற்கையாகத் தெரிய வாய்ப்புள்ளது. கைகளால் உழைத்து காவடியை வடிவமைப்பதே அதற்கு உயிரோட்டத்தைக் கொடுக்கும்,” என்று திரு ராஜா உறுதியாக நம்புகிறார்.

முழுமையாகக் கைகளாலே காவடியை உருவாக்கும் பணியில் ஈடுபடுகிறார் திரு ராஜா.
முழுமையாகக் கைகளாலே காவடியை உருவாக்கும் பணியில் ஈடுபடுகிறார் திரு ராஜா. - படம்: த. கவி

காவடியின் அழகு மட்டுமல்லாது, அதன் கட்டமைப்பு உறுதித்தன்மையும் மிகவும் முக்கியமானது. ‘இது வலுவாக இருக்குமா? பக்தரால் பல ஆண்டுகளுக்கு இதைச் சுமக்க முடியுமா?’ என்ற கேள்விகளை முன்வைத்தே காவடிகள் உருவாக்கப்படுகின்றன.

சில சமயங்களில், கடைசி நேரத்தில் மாற்றங்கள் செய்யும் தவிர்க்க முடியாத நிலையும் ஏற்படலாம் என்கிறார் திரு ராஜா. ஒருமுறை, 48 நாள் விரதத்தின்போது ஒரு பக்தரின் உடல் எடை வெகுவாகக் குறைந்ததால், அவருக்குச் செய்யப்பட்ட ‘பெல்ட்’ காவடி பொருந்தாமல் போனதை அவர் நினைவுகூர்ந்தார்.

“ஜீன்ஸ் கால்சட்டையை எளிதாகத் திருத்திவிடலாம், ஆனால் பெல்ட் காவடியின் சட்டத்தை அப்படி மாற்ற முடியாது,” என்றார் அவர். இருப்பினும், அந்த பக்தர் தம் நேர்த்திக்கடனைச் செலுத்த ஏதுவாக, திரு ராஜாவும் அவரது குழுவினரும் விரைந்து செயல்பட்டு அதன் கட்டமைப்பை மாற்றியமைத்தனர்.

அலுமினியத் தகட்டில் இடப்பட்டுள்ள துளைகள், காவடியைத் தாங்கும் சட்டத்தில் உள்ள குறியீடுகளுடன் சரியாகப் பொருந்துகின்றனவா என்று சரிபார்க்கிறார் திரு ராஜா.
அலுமினியத் தகட்டில் இடப்பட்டுள்ள துளைகள், காவடியைத் தாங்கும் சட்டத்தில் உள்ள குறியீடுகளுடன் சரியாகப் பொருந்துகின்றனவா என்று சரிபார்க்கிறார் திரு ராஜா. - படம்: த. கவி

இளைய தலைமுறையினருக்கு இக்கலையைக் கற்றுக்கொடுக்க திரு ராஜா விரும்பினாலும், அழுக்கு படியும் உலோகம் சார்ந்த இந்த வேலைக்கான பொறுமை சிலரிடமே உள்ளது எனக் குறிப்பிட்டார்.

ஒரு பக்தர் தமது நேர்த்திக்கடனை வெற்றிகரமாக நிறைவேற்றுவதைப் பார்ப்பதே தமக்குக் கிடைக்கும் சிறந்த வெகுமதியாக இவர் கருதுகிறார்.

“பணம் என்பது இரண்டாம் பட்சம்தான். ஆனால், ஒரு பக்தரும் அவரது குடும்பத்தினரும் மனநிறைவுடன் ‘சிறப்பாகச் செய்திருக்கிறீர்கள்’ எனப் பாராட்டும் தருணத்திற்கு ஈடுஇணையே இல்லை,” என்று பெருமிதத்துடன் கூறினார் திரு ராஜா.

ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள தமது ஐந்தறை வீட்டில் காவடியை வடிவமைத்து உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள திரு ராஜா கோவிந்தசாமி.
ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள தமது ஐந்தறை வீட்டில் காவடியை வடிவமைத்து உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள திரு ராஜா கோவிந்தசாமி. - படம்: த. கவி
குறிப்புச் சொற்கள்