கவிஞர் பிரம்மகுமாரின் ‘குறளும் குரலும்’, ‘சிறகை விரித்த சிற்றுளி’ என்ற இரு நூல்கள் ஆகஸ்ட் 29ஆம் தேதி சனிக்கிழமை புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் வெளியீடு கண்டன.
மறைந்த கவிஞர் புதுமைத்தேனீ மா.அன்பழகனின் வரிகளிலான தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார் மாணவர் ஜெயபிரகாசம் ஜோஷித்.
‘குறளும் குரலும்’ நூலுக்கு வாழ்த்துரை எழுதியுள்ள சிறப்பு விருந்தினர் பேராசிரியர் அ.வீரமணி, “அனைத்துக் காலகட்டங்களிலும் நூல் வாசிப்போரின் எண்ணிக்கை குறைவாகவே இருந்துள்ளது; அதற்காக நூல்கள் வெளியிடுவதை நிறுத்தக்கூடாது. ஏனெனில், நூல்கள் சமுதாயத்தின் வரலாற்றைக் காட்டுகின்றன. நூல் என்றும் வீணாகாது; அதனை யாரோ எங்கோ படிக்கிறார். முடிந்தால் நீங்கள் நூலைப் படித்தபின் பிறரிடமோ நூலகத்திடமோ கொடுங்கள்,” என்று கூறினார்.
தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் தலைவரும் தங்கமுனை விருதுபெற்ற எழுத்தாளருமான யூசப் ராவுத்தர் ரஜித், நிகழ்ச்சியின் செயல்பாடுகளைப் பாராட்டினார்.
‘சிறகை விரித்த சிற்றுளி’ நூலைப் பட்டிமன்றப் பேச்சாளர் திருவாட்டி அன்னபூரணி கார்த்திகேயன் அறிமுகப்படுத்தினார்.
“கற்பனைச் சிறகுகளால் காலத்தை வென்று நிற்கும் ஒரு துளி அமுதம்தான் கவிதை. இலக்கண வடிவிற்கு உட்படாமல் சுதந்திரமாக உணர்வுகளை வெளிப்படுத்த வழிவகுக்கும் புதுக்கவிதை வடிவில் கவிஞர் பிரம்மகுமார் ஆழமான கருத்துகளை எளிமையான மொழிநடையில் வழங்கியுள்ளார்,” என்றார் அவர்.
பழைய பாடல்களுக்குப் பிரம்மகுமார் புதிய திருப்பம் தந்த விதமும் அன்னபூரணியைக் கவர்ந்தன. ‘அம்மா இங்கே வா! வா!’ என்ற குழந்தைப் பாடலைப் பின்னணியாக வைத்து அம்மாவை மட்டுமன்றி மொத்த குடும்பத்தையும் பிரம்மகுமார் கவிதையில் இணைத்துள்ளார். ‘ஓடியாடி உழைத்த தாத்தா! நீ ஓய்ந்திருக்கலாமோ தாத்தா!’ எனத் ‘தாத்தாவுக்குத் தோதானது’ கவிதையில் தாத்தாவுக்குப் பேரன் அறிவுறுத்துகிறான்.
குடும்ப உறவுகளைச் சுவையாகச் சித்திரிக்கும் கவிதைகள் முதல் சிங்கப்பூரின் அழகை வர்ணிக்கும் ‘அழகின் வயது அறுபது’, வயதுக்கேற்ப மாறும் மனிதக் கண்ணோட்டத்தைப் பேசும் ‘ஒரே சன்னல்’ வரை, பல்வேறு கருப்பொருள்களைக் கொண்ட கவிதைகளையும் நூல் உள்ளடக்கியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
‘தமிழ் அணங்கு’ என்பது தமிழ்த்தாய் வாழ்த்தைத் தவிர வேறெங்கும் பரவலாகக் காணப்படாத நிலையில், இந்நூலில் கவிதை ஒன்றின் தலைப்பாக அது அமைவதையும் அவர் பாராட்டினார்.
‘குறளும் குரலும்’ சிறுகதைத் தொகுப்பை அறிமுகப்படுத்தினார் ஓய்வுபெற்ற ஆங்கிலப் பேராசிரியர் முனைவர் ராஜி ஸ்ரீநிவாசன்.
தமிழ் நூல் வாசிக்காததற்கான காரணத்தைக் கேட்டபோது, “டிக் புருணா, எனிட் பிலைட்டன் போன்ற சிறுவர் எழுத்தாளர்களின் ஆங்கில நூல்கள் போல தமிழில் எந்த நூல்கள் உள்ளன?” என மாணவர்கள் வினவியதாக அவர் சொன்னார்.
“என்னைப் போன்ற எத்தனையோ பேரின் மனக்குமுறல்களுக்குப் பதிலாக இந்த நூல் அமைகிறது,” என்றார் அவர்.
‘கற்றபின் நிற்க அதற்குத் தக’ எனும் குறள் வரிகளுக்கேற்ப சிறுகதைகள், படிப்பவர் மனத்தில் திருக்குறளைப் பதியச் செய்யக்கூடியவை; ‘கதை கேட்பவனைக் கதை எழுதுபவனாக மாற்றும் உளியாக’ தொகுப்பில் மாணவர்களின் சிறுகதைகளும் இடம்பெறுவதை அவர் பாராட்டினார்.
உலகப் பொதுமறையான திருக்குறள் பற்றிய இத்தொகுப்பில் பன்னாட்டு எழுத்தாளர்கள் இடம்பெற்றுள்ள சிறப்பையும் முனைவர் ராஜி சுட்டிக்காட்டினார்.
‘குறளும் குரலும்’ சிறுகதைத் தொகுப்பில், ஒரு குறளுக்கு ஒரு சிறுகதை என திருக்குறள்களின் பொருள்கள் சுவாரசியமாக விளக்கப்படுகின்றன.
“நூல் வெளியீட்டில் திரு பிரம்மகுமார் எடுத்துக்கொண்ட சவால் மற்ற எழுத்தாளர்களும் இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ள வாய்ப்பாக அமையும்,” என்றார் ஓய்வுபெற்ற தமிழாசிரியரும் நூலில் பிழைதிருத்தியவருமான திருவாட்டி ஹபிபா.
“லிடியன் நாதஸ்வரம் பாடல்கள் மூலமாகத் திருக்குறளை மக்களுக்குக் கொண்டுசெல்லும்போது, நாம் ஏன் சிறுகதை மூலம் திருக்குறள் பற்றி எழுதக்கூடாது? எனத் தோன்றியது. திருக்குறள் பொதுமறையல்லவா? ஒவ்வொரு திருக்குறளின்படியும் நாம் வாழத் தொடங்கினால் நம் வாழ்க்கை வேறு நிலைக்குச் சென்றுவிடும். அடுத்தத் தலைமுறைக்குத் திருக்குறள் கருத்துகளை எடுத்துச் செல்வதே தமிழுக்கு நாம் செய்யும் மிகப் பெரிய தொண்டு,” என்றார் கவிஞர் பிரம்மகுமார்.
“ஓர் ஆலயம் என்பது வழிபாட்டிற்கு மட்டுமன்று. ஒரு சமூகமாக நமக்கு தமிழ்ப் பண்பாட்டை நிலைநாட்டுவதில் அதற்கு ஒரு பகிர்ந்த பொறுப்பு உள்ளது,” எனக் கூறினார் புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலய நிர்வாகத்தின் துணைத் தலைவர் ராமா.
‘குறளோடு விளையாடு’ எனும் அங்கத்தைச் சிறுகதை எழுத்தாளரும் குறும்பட இயக்குநருமான உமா சங்கர் வழிநடத்தினார். ‘குறளும் குரலும்’ தொகுப்பிலிருந்து சில திருக்குறள்களின் பொருளை அவர் சிறுவர்களிடம் நகைச்சுவையாக விளக்கினார். மதிநுட்பக் குறைபாடுள்ளோரிடமிருந்து தாம் கற்ற படிப்பினைகளையும் ‘குறளும் குரலும்’ தொகுப்பில் அவர் சிறுகதையாகப் பகிர்ந்துள்ளார்.
“நான் வாரத்துக்கு ஐந்து திருக்குறள்கள் எழுதுவேன். போட்டிகளில் திருக்குறளை மனப்பாடமாகச் சொல்வேன்,” என்றார் ‘குறளும் குரலும்’ தொகுப்பை வாசித்த தமிழினி, 7.
பாரதியார் பாடலைப் பாடிய பர்வதவர்த்தினி, நிகழ்ச்சி நெறியாளர் மோகன் ஹரிவர்த்தினி போன்ற இளையோர், நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டினர்.
கவிஞர் பிரம்மகுமார் தம் கவிதைகளை செயற்கை நுண்ணறிவுமூலம் பாடல்களாக்கி https://www.youtube.com/@brahmalogam எனும் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.


