வெயிலோ மழையோ, களத்தில் நிற்கும் 80 வயது தொண்டர்க்கு மசெக கௌரவம்

வெயிலோ மழையோ, களத்தில் நிற்கும் 80 வயது தொண்டர்க்கு மசெக கௌரவம்

படம்: பே. கார்த்திகேயன்

25 Oct 2026 - 8:29 pm

2 mins read
ஏறத்தாழ 35 ஆண்டுகள் களப்பணி; தன்னலமற்று சேவையாற்றிய 80 வயது திரு பாலகிருஷ்ணன் வீராசாமிக்கு, மக்கள் செயல் கட்சியின் மாநாட்டு மேடையில் ‘அர்ப்பணிப்புமிக்க சேவைக்கான விருதை’ வழங்கிப் பாராட்டினார் கட்சியின் தலைவர் திரு டெஸ்மண்ட் லீ.
ஏறத்தாழ 35 ஆண்டுகள் களப்பணி; தன்னலமற்று சேவையாற்றிய 80 வயது திரு பாலகிருஷ்ணன் வீராசாமிக்கு, மக்கள் செயல் கட்சியின் மாநாட்டு மேடையில் ‘அர்ப்பணிப்புமிக்க சேவைக்கான விருதை’ வழங்கிப் பாராட்டினார் கட்சியின் தலைவர் திரு டெஸ்மண்ட் லீ. - படம்: பே. கார்த்திகேயன்

மெக்பர்சன் வட்டாரத்தில் 35 ஆண்டுகளாக மக்களுக்கு இடைவிடாது சேவையாற்றி வரும் திரு பாலகிருஷ்ணன் வீராசாமிக்கு மக்கள் செயல் கட்சியின் (மசெக) ‘அர்ப்பணிப்புமிக்க சேவைக்கான விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25) நடைபெற்ற மசெக மாநாட்டில் கட்சித் தலைவர் டெஸ்மண்ட் லீ திரு பாலாவுக்கு விருது வழங்கினார்.

வெயிலோ மழையோ, பொழுது விடிந்ததும் மெக்பர்சன் வீடமைப்புப் பேட்டையின் நடைபாதைகளில் துடிப்பான சிரிப்புடன் வலம் வருபவர் திரு பாலா, 80.

எண்பது வயதிலும் சுருக்கம் விழாத உற்சாகத்துடன் மக்களை அணுகும் இவர், நாடாளுமன்ற உறுப்பினர் கலந்துகொள்ளும் மக்கள் சந்திப்பானாலும் சரி, சமூக மன்றத்தின் திருவிழா ஏற்பாடுகளானாலும் சரி, மெக்பர்சன் பிரிவின் முன்னணிக் களப்பணியாளராக நின்று வழிநடத்தி வருகிறார்.

ஏறத்தாழ 35 ஆண்டுகளுக்குமுன் எளிய சமூகப் பணிகளில் இணையத் தொடங்கிய இவர், இன்று மெக்பர்சனின் ஒவ்வொரு புளோக், ஒவ்வொரு வீதியையும் துல்லியமாக அறிந்த மூத்த வழிகாட்டியாக உருவெடுத்துள்ளார்.

தலைவர்களின் தொகுதி உலாவில் இணைந்து குடியிருப்பாளர்களைச் சந்திப்பதில் தொடங்கி, மாலை நேரங்களில் சமூகத் திட்டங்களை ஒருங்கிணைப்பது வரை இவர் பங்கேற்ற நிகழ்வுகள் பற்பல.

விருது குறித்து மனந்திறந்த திரு பாலா, “இந்த விருது எனக்கானது மட்டுமன்று; என்னோடு பல ஆண்டுகளாக மெக்பர்சனில் மக்களுக்காகப் பாடுபட்ட ஒவ்வொரு தன்னார்வலருக்கும் உரியது.

“சேவை செய்வது என்பது பதவிக்காகவோ புகழுக்காகவோ அல்ல. நம்மைச் சுற்றி வாழும் ஒருவருக்கு நம் கைவசமுள்ள சிறிய உதவியைச் செய்துவிட்டு, அவர்கள் முகத்தில் தெரியும் நிம்மதியான புன்னகையைப் பார்ப்பதில் கிடைக்கும் திருப்திக்கு ஈடு இணையேதுமில்லை.

“எனது கால்கள் ஓடும் வரை, உடல் ஒத்துழைக்கும் வரை மக்களோடு மக்களாக நிற்பதே என் விருப்பம்,” என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
விருதுமக்கள் செயல் கட்சிதமிழர்சிங்கப்பூர்