ஊழியர் தங்குவிடுதியில் உருவான ‘துணிக்கோலம்’

ஊழியர் தங்குவிடுதியில் உருவான ‘துணிக்கோலம்’

படம்: விஜயா மோகன்

15 Nov 2026 - 8:00 am

1 mins read

வெளிநாட்டு ஊழியர்களுக்குப் புத்துணர்வூட்டும் வகையில், இவ்வாண்டு தீபாவளிப் பண்டிகை பல்வேறு தங்குவிடுதிகளில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அத்தகைய கொண்டாட்டம் ஒன்றுக்காக, ‘சிங்கா ரங்கோலி’ அமைப்பு, வண்ணக்  கோலங்களை உருவாக்குவதில் வெளிநாட்டு ஊழியர்களை ஈடுபடுத்தியது.

சிலேத்தார் நார்த் லிங்க்கில் உள்ள ‘பிபிடி லாட்ஜ் 1ஏ’ தங்குவிடுதியில் நவம்பர் 1ஆம் தேதி இந்நிகழ்ச்சி நடைபெற்றது. 

கிட்டத்தட்ட 20 மீட்டர் நீளமும் 2 மீட்டர் அகலமும் கொண்ட துணியில் ஊழியர் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் வண்ணம் தீட்டினர். 
கிட்டத்தட்ட 20 மீட்டர் நீளமும் 2 மீட்டர் அகலமும் கொண்ட துணியில் ஊழியர் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் வண்ணம் தீட்டினர்.  - படம்: விஜயா மோகன்

ஐந்தாண்டுகளுக்கும் மேலாக வெளிநாட்டு ஊழியர்களுக்காக கோலக்கலைஞர் விஜயா மோகனும் அவரது கணவரும் ஏற்பாடு செய்துவரும் நிகழ்ச்சியில் இது ஆக அண்மையது.

கிட்டத்தட்ட 20 மீட்டர் நீளமும் 2 மீட்டர் அகலமும் கொண்ட துணியில் ஊழியர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் வண்ணம் தீட்டினர். 

வண்ணங்கள் வழியாக ஊழியர்களுக்கு இதமளிப்பதுடன் அவர்களது படைப்புத்திறன்களை வெளிப்படுத்தவும் இந்நிகழ்ச்சி தளம் அமைத்துக் கொடுத்தது.

அந்தத் துணி பின்னர் பகுதிகளாக வெட்டப்பட்டு, அவர்களது அறைகளிலேயே திரைச்சீலைகளாகப் பயன்படுத்தப்பட உள்ளன என்பது இதன் சிறப்பம்சம்.

இந்த நிகழ்ச்சியில் ஆத்யா என்ற சிறுமியின் நடனமும், நாராயணன் என்ற வெளிநாட்டு ஊழியரின் பாடல் அங்கமும் அனைவரையும் மகிழ்வித்தது. 

வண்ண வடிவங்களால் அலங்கரிக்கப்பட்ட  அகலமான துணி.
வண்ண வடிவங்களால் அலங்கரிக்கப்பட்ட அகலமான துணி. - படம்: விஜயா மோகன்

அதனைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட 150 ஊழியர்களுக்குப் பிரியாணியும் இனிப்பும் வழங்கப்பட்டன.

“எப்பொழுது மீண்டும் வருவீர்கள்?” என ஊழியர்கள் அன்போடு கேட்டது தங்களுக்கு மிகுந்த மனநிறைவைத் தந்ததாகத் திருவாட்டி விஜயா கூறினார்.

“நம் நாட்டிற்கு வந்து, தங்களுடைய உழைப்பை வழங்கி, நமக்கு உதவிக்கரம் நீட்டும் ஊழியர்களை உற்சாகப்படுத்த வேண்டியதும் அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டியதும் நமது கடமை,” என்று அவர் கூறினார்

குறிப்புச் சொற்கள்