நேரமே சிறந்த கொடை

தொண்டூழியத்தையே வாழ்க்கை இலக்காகக் கொண்ட சமூக சேவகி

நேரமே சிறந்த கொடை

3 mins read
8ae69744-bad4-4b5b-91c1-41d26562045e
அனைத்துலகத் தொண்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் 48 வயது ப்ரீத்தா வெங்கடாச்சலம், ஆசியா, ஆப்பிரிக்காவுக்கான சமூகத் திட்டங்களுக்குத் தலைமை தாங்குகிறார். - படம்: ப்ரீத்தா வெங்கடாச்சலம்

சமூகத் தொண்டு என்பது வெறும் காசோலைகளில் கையெழுத்திடுவதோடு முடிந்துவிடுவதில்லை. சமூகத்தின் மேம்பாட்டிற்காக ஒருவரின் பொன்னான நேரத்தை அர்ப்பணிப்பதே உண்மையான சேவை என ஆழமாக நம்புகிறார் திருவாட்டி ப்ரீத்தா வெங்கடாச்சலம்.

2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் கணவர், இரண்டு பிள்ளைகளுடன் சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்த இவர், குறுகிய காலத்திலேயே இங்குச் சமூகத் தொண்டுகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.

சமூகப் பணிக்கு வித்திட்ட சொந்த அனுபவம்

சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட 48 வயது திருவாட்டி ப்ரீத்தா, லாப நோக்கமற்ற சமூக மேம்பாட்டுத் துறையில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருகிறார். அனைத்துலகத் தொண்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இவர், ஆசியா, ஆப்பிரிக்காவுக்கான சமூகத் திட்டங்களுக்குத் தலைமை தாங்குகிறார். தற்போது, நிறுவனத்தின் சிங்கப்பூர் அலுவலகத்தில் இவர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

இவர் 11 வயதாக இருந்தபோது, நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த தந்தையை இழந்தார். சிறுவயதில் நேர்ந்த துயரமும் தாயாரின் மனவலிமையும்தான் சமூகத்தின் பொதுச் சுகாதார மேம்பாட்டுக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை இவருக்குள் ஆழமாக விதைத்தன.

பிற்காலத்தில் இந்தியத் தேயிலை வாரியத்தில் இவர் பணியாற்றியபோது, ஆப்பிரிக்கா, இந்தியாவில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் கடுமையான வறுமையை நேரில் கண்டார். அதே தேயிலை, ஐரோப்பாவில் அதிக விலைக்கு விற்கப்படுவதைப் பார்த்தபோது இவருக்கு உலகளாவிய ஏற்றத்தாழ்வுகள் புரியவந்தன. அவை இவரை முழுமையாகச் சமூகச் சேவையை நோக்கித் திருப்பின.

இந்தியாவின் பழங்குடியின மக்களிடையே தாய், சேய் இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்காகப் ‘பிரமல் அறக்கட்டளை’ அரசாங்க அமைப்புகளோடு இணைந்து முன்னெடுத்த சுகாதாரத் திட்டங்களை இவர் வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளார்.

பொங்கோலில் புதிய தொண்டூழியப் பயணம்

சிங்கப்பூரின் பன்முகக் கலாசாரத்தைப் புரிந்துகொள்ளவும் புதிய நண்பர்களை உருவாக்கவும் ‘ஓ! ஓப்பன் ஹவுஸ்’ என்ற கலை, சமூகத் தொண்டு அமைப்பில் திருவாட்டி ப்ரீத்தா இவ்வாண்டு இணைந்தார்.

‘ஓ! ஓப்பன் ஹவுஸ்’ கலை, சமூகத் தொண்டு அமைப்பில் ‘மார்க்கிங் பொங்கோல்’ திட்டத்தில் திருவாட்டி ப்ரீத்தாவுடன் இணைந்துள்ள மற்றப் பங்கேற்பாளர்கள்.
‘ஓ! ஓப்பன் ஹவுஸ்’ கலை, சமூகத் தொண்டு அமைப்பில் ‘மார்க்கிங் பொங்கோல்’ திட்டத்தில் திருவாட்டி ப்ரீத்தாவுடன் இணைந்துள்ள மற்றப் பங்கேற்பாளர்கள். - படம்: ப்ரீத்தா வெங்கடாச்சலம்

இந்த அமைப்பு, தாய்லாந்துக் கலைஞர் மிட் ஜெய் இன் என்பவருடன் இணைந்து ‘மார்க்கிங் பொங்கோல்’ என்ற பொதுக் கண்காட்சியை வடிவமைத்துள்ளது. இதில் உள்ள 99 காகிதக்கூழ்ச் சிற்பங்களைப் பணத்தைக் கொண்டு வாங்க முடியாது. பொங்கோல் வட்டாரத்தை மையமாகக் கொண்ட சமூகக் காரணிகளுக்குத் தொண்டூழியம் செய்வதாக உறுதியளித்தால் அவற்றைப் பெறலாம்.

வேலைப் பளுவுக்கு இடையிலும் இந்தத் திட்டத்தின்கீழ் இவ்வாண்டு ஏப்ரல் முதல் அடுத்த ஆண்டு (2027) மார்ச் வரை 80 மணிநேரம் தொண்டூழியம் செய்ய இவர் உறுதியளித்துள்ளார். கிளமெண்டி பகுதியில் வசிக்கும் திருவாட்டி ப்ரீத்தா, ஒரு மணிநேரத்திற்கும் மேல் பயணம் செய்து பொங்கோல் வட்டாரத்திற்குச் செல்கிறார்.

இந்த 80 மணிநேரத் தொண்டூழியத்தில் அரிய வகை ‘பி நெகடிவ்’ ரத்த தானம் செய்வதும் அடங்கும். பத்தாண்டுகளுக்கு முன்பு, நெருக்கடியான சூழலில் நண்பர் ஒருவரின் ரத்த தானத்தால் உயிர் பிழைத்ததால், அதன் அவசியத்தை இவர் நன்கு உணர்ந்துள்ளார். மேலும், பொங்கோல் வட்டாரத்தின் பாரம்பரிய வரலாற்றை ஆவணப்படுத்துவதன் தொடர்பிலான கதைகூறும் பணியிலும் இவர் ஈடுபட்டுள்ளார்.

இந்தத் தொண்டூழியத்திற்குப் பரிசாக வழங்கப்படும் காகிதக்கூழ்ச் சிற்பம், இவரது வீட்டின் வரவேற்பறையை அலங்கரிக்கவுள்ளது. அங்கு ஏற்கெனவே ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது என்பதை உணர்த்தும் முகமில்லாத குழந்தையின் சிற்பம் ஒன்று உள்ளது.

‘மார்க்கிங் பொங்கோல்’ திட்டத்தின்கீழ் இவ்வாண்டு ஏப்ரல் முதல் அடுத்த ஆண்டு (2027) மார்ச் வரை 80 மணிநேரம் தொண்டூழியம் செய்யத் திருவாட்டி ப்ரீத்தா உறுதியளித்துள்ளார்.
‘மார்க்கிங் பொங்கோல்’ திட்டத்தின்கீழ் இவ்வாண்டு ஏப்ரல் முதல் அடுத்த ஆண்டு (2027) மார்ச் வரை 80 மணிநேரம் தொண்டூழியம் செய்யத் திருவாட்டி ப்ரீத்தா உறுதியளித்துள்ளார். - படம்: ப்ரீத்தா வெங்கடாச்சலம்

“அடிப்படை வசதிகூட இல்லாத ஆயிரக்கணக்கானோர் இவ்வுலகில் வாழ்கிறார்கள் என்பதை இந்தப் புதிய சிற்பம் என் குடும்பத்தினருக்கு எப்போதும் நினைவூட்டும்.

“விருந்தினர்கள் இதைப் பற்றி விசாரிக்கும்போது, இதன் பண மதிப்பைத் தாண்டி, இதற்காக அர்ப்பணிக்கப்பட்ட நேரமே எங்கள் உரையாடலின் மையமாக இருக்கும்,” என்று திருவாட்டி ப்ரீத்தா குறிப்பிட்டார்.

அடுத்த தலைமுறைக்கு நற்பண்புகளைக் கற்றுக்கொடுத்தல்

இவர், 15 வயது மகள் காவ்யாவையும் 13 வயது மகன் துருவையும் சமூகப் பணிகளில் ஈடுபடுத்தத் தவறுவதில்லை.

ஓவியம் வரைவதில் திறமை வாய்ந்த இவரின் மகள், தொண்டு நிறுவனம் ஒன்றின் மூலம் வசதி குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஓவியம் சொல்லிக்கொடுக்கிறார். விளையாட்டில் ஆர்வம் கொண்ட மகன், சிறாருக்குக் காற்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளைக் கற்றுக்கொடுக்கிறார்.

“பிள்ளைகளுக்கு வெறும் அறிவுரை கூறுவதைவிட, அவர்களுக்குப் பிடித்தமான செயல்களின்மூலம் சமூகப் பொறுப்பை உணர்த்துவதே சிறந்தது,” என்கிறார் திருவாட்டி ப்ரீத்தா.

புதிய நாட்டிற்குக் குடிபெயரும்போது பல சவால்கள் இருக்கும் என்பதை இவர் ஒப்புக்கொள்கிறார்.

“பாதுகாப்பான உங்கள் வீட்டின் கரைகளை விட்டு வெளியேறினால்தான், ஆழமான கடல்களை உங்களால் ஆராய முடியும். சமூகத்தோடு ஒன்றிணைந்து மற்றவர்களுக்கு உதவுவதுதான் நீண்ட, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடித்தளமாக அமையும்,” என்று உறுதியாக நம்புகிறார் திருவாட்டி ப்ரீத்தா.

கண்காட்சி குறித்த கூடுதல் தகவல்

‘மார்க்கிங் பொங்கோல்’ கண்காட்சி தற்போது பொங்கோல் வட்டார நூலகத்தின் மூன்றாம் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. மிட் ஜெய் இன் உருவாக்கியுள்ள இந்தச் சிற்பங்களை நேரில் காண விரும்புவோர், இந்த ஆண்டின் இறுதி வரை அங்குச் சென்று பார்வையிடலாம்.

குறிப்புச் சொற்கள்
சமூக சேவைதொண்டூழியம்தொண்டூழியர்பொங்கோல்நிறுவனம்நன்கொடைநேரம்