இசையோடு உறவாடி, குழலோடு விளையாடி, கானமே சுவாசமாய் வாழ்ந்துவரும் இந்திய செவ்விசைப் புல்லாங்குழல் கலைஞரும் இசையமைப்பாளருமான திரு கானவினோதன் ரத்னம், அண்மையில் சிங்கப்பூரின் உயரிய விருதான கலாசார பதக்கம் பெற்று வரலாறு படைத்தார். இப்பதக்கத்தை ஓர் இந்திய செவ்விசைக் கலைஞர் பெறுவது இதுவே முதல்முறை.
முதல் அனுபவம்
“சிறுபிள்ளையாக இருந்தபோது சிறுவர்கள் பலருடன் நான் ‘கண்ணன் நமது வழிகாட்டி’ எனும் அமைப்பிற்குச் சென்றேன். அங்கு ஞாயிறு வகுப்புகள் நடக்கும். புல்லாங்குழல் இசையோடுதான் நிகழ்வு தொடங்கும். அதைக் கேட்டபோது குழல் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது,” என்று நினைவுகூர்ந்தார் திரு கானவினோதன்.
இருப்பினும், ஏழு வயது சிறுவனாகக் குழலை முதன்முதலில் தம் கரங்களில் ஏந்தியபோது, வாசிப்பதற்கு மிகவும் சிரமமாக இருந்ததாகக் குறிப்பிட்டார். அந்த வயதில் காற்றைச் செலுத்தி வாசிக்கும்போது மயக்கமே வந்துவிடும் என்றார்.
விருது சமர்ப்பணம்
ஒன்பது பிள்ளைகள் உள்ள குடும்பத்தில் எட்டாவது பிள்ளை திரு கானவினோதன். அவரின் தந்தை திரு ரத்னம் ஒரு முன்னோடி இசைக்கலைஞர். தம் தந்தையே தமது இசையின் முதல் விமர்சகர் என்று தெரிவித்தார் அவர்.
எளிமையான குடும்பப் பின்னணி. அம்மா அக்காலத்தில் பலகாரங்கள் தயாரித்து விற்று குடும்ப வருமானத்திற்கு வலுசேர்த்தார் என்றார் கானவினோதன்.
“பயிற்சி நடக்கும். இசைக் கருவியை ஒழுங்காக வாசிக்காவிட்டால் வீட்டில் சாப்பாடு கிடைக்காது. அப்படிக் கண்டிப்பு நிறைந்த அப்பாவின் இசையாற்றல், நான் வாசிக்கும் இசையை உளமார பாராட்டும் அம்மாவின் அன்பு ஆகியவை இன்று என்னை ஒரு கலைஞனாக வாழவைக்கின்றன.
இவ்விருது திரு, திருமதி ரத்னம் இருவருக்கும் சமர்ப்பணம்,” என்றார் சங்கீத கலா பூஷன் கானவினோதன்.
வழிகாட்டிய குரு
தாம் குழந்தையாக இருந்தபோது பெயர் வைப்பதற்காக தம்முடைய பெற்றோர் இசை மேதை எம்.ராமலிங்கத்தின் கைகளில் தம்மைக் கொடுத்தார்கள்.
தொடர்புடைய செய்திகள்
“என் அழுகுரல் கானம் போல இருந்ததாகக் கருதி, கானவினோதன் என்ற பெயரை எனக்கு அவர் சூட்டியதாக என் பெற்றோர் கூறியது என்றுமே எனக்கு மறக்க முடியாத ஒன்று.
“இசையைக் கற்றுத்தர அவர் என்னிடம் பணம் வாங்கியதில்லை. பெயரை மட்டுமல்ல, இசையையும் எனக்குக் கொடையாக அருளிய குருவுக்கு என்றும் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன். அவர் எனக்கிட்ட பெயரும் எனக்கு விருதுதான்,” என்று பூரிப்புடன் கூறினார் திரு கானா.
சேவையாற்றுவதே பெரும்பேறு
தமது இசைப்பயணத்தைச் சுமுகமாக மேற்கொள்ள, பலர் உதவியுள்ளதை நினைவுகூர்ந்த திரு கானா, அவ்வகையில் தாமும் சமூகத்திற்குப் பங்களிக்க முடிவது தமக்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமை என்றார்.
பாஸ்கர் ஆர்ட்ஸ் அகாடமியின் இசை இயக்குநரான திரு கானவினோதனைப் பொறுத்தவரை இசைக்கு செல்வம் தடையாக இருக்கக்கூடாது. அதனால், இசைத்திறன் கொண்ட மாணவர்களுக்கு இலவசமாகவும் இவர் இசையைக் கற்பிப்பதுண்டு.
“மக்கள் எனக்கு ஊக்கமளிக்கிறார்கள். அதனால் என் ஆற்றலை வளர்த்துக்கொள்கிறேன். அதை அவர்களுக்குத் திரும்பத் தருகிறேன். மக்கள் எனக்குக் காண்பித்த கனிவுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்,” என்றார் அவர். நூற்றுக்கணக்கான மாணவர்களுக்குப் புல்லாங்குழல் கற்பித்துள்ள இவரது ஆசிரியர் பணியோடு கலைப்பணியும் தொடர்கிறது.
எல்லைகள் கடந்த இசை
சிங்கப்பூரின் இசைச் சூழலை அனைத்துலக அரங்குகளுக்கு எடுத்துச்செல்ல அயராது உழைத்துவருவதில் பேரார்வம் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட திரு கானவினோதன், “இசையுலகில் பகிர்ந்துகொள்ள சிங்கப்பூரிடம் அளவில்லா படைப்புகள் உள்ளன,” என்றார்.
தென்கிழக்காசிய இசைகளையும் பயின்று இந்திய செவ்விசையுடன் அவற்றை இணைத்து பன்முகத்தன்மையுடைய இப்படைப்புகளை உருவாக்குவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார் திரு கானா.
“ஜாவானிய, பாலி உள்ளிட்ட இசைகளுடன் இந்திய செவ்விசையையும் கிராமிய இசையையும் இணைக்கும் இலக்குடன் அனைத்துலக இசையமைப்பாளர்களுடன் சேர்ந்து பணியாற்றி வருகிறேன். இத்தகைய சிறந்த படைப்புகளின் பிறப்பிடமாகத் திகழ, பன்முக கலாசாரங்கள் சங்கமிக்கும் சிங்கப்பூர் மிகவும் பொருத்தமான இடம்.
“அவ்வகையில் இந்த இசைப்படைப்புகள் எல்லைகள் கடந்தும் ஒலிக்கும்; இந்த கானங்கள் காலங்களை வென்றும் நிலைக்கும்,” என்றார் முனைவர் கானவினோதன்.


