கேலாங் ஈஸ்ட் ஶ்ரீ சிவன் கோயிலின் குடமுழுக்கு விழா ஜூன் 8ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
“காட்சிக்கூடம் முதல் அன்னதானம் வரை அனைத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வயதானவர்களுக்கும் சிறப்பு ஏற்பாடு செய்திருக்கிறோம்”, என்றார் நிர்வாகக் குழு உறுப்பினர் சுரேஷ் முருகையன்.
15,000 பார்வையாளர்களுக்கான கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் மொத்தம் 7,000 இருக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
அத்துடன், பார்வையாளர்கள் இருந்த இடத்திலேயே குடமுழுக்கு விழாவைப் பார்வையிட கூடாரத்தில் எல்இடி திரைகள் பொருத்தப்படவுள்ளன.
அதன்வழி பொதுமக்கள் குடமுழுக்கு விழாவைக் கண்கூடாகப் பார்க்கலாம்.
குடமுழுக்கு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல அம்சங்களில் ஒன்று யாகசாலை.
“மழைக்காலத்தினால் கூடாரத்தையும் யாகசாலையையும் கட்டுவது சவாலாக இருந்தது. சேரும் சகதியுமாக இருந்ததால் திடல் ஒத்துழைக்கவில்லை,” என்றார் திரு சுரேஷ்.
தொடர்புடைய செய்திகள்
இறுதிக்கட்ட பணிகள் நடைபெறும் வேளையில், தற்போது யாகசாலை ஶ்ரீ சிவன் கோயிலுக்கு முன்பு பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கிறது.
வரலாற்றுச் சிறப்புவாய்ந்த பொற்கூரை
சிதம்பரத்தின் தில்லை நடராஜர் கோயிலில் உள்ள பொற்கூரையைக் கண்முன் கொண்டு வந்துள்ளது ஶ்ரீ சிவன் கோயில் குடமுழுக்கு ஏற்பாட்டுக் குழு.
10ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டின் மன்னரான பராந்தக சோழன் பொருத்திய அப்பொற்கூரையின் சிறிய நகல் வடிவம் யாகசாலையின் சிறப்பம்சங்களில் ஒன்று.
5,000க்கும் மேற்பட்ட தங்க ஓடுகளால் அப்பொற்கூரை வடிவமைக்கப்பட்டுள்ளது.
“தில்லையில் இருப்பதுபோன்ற ஓர் உணர்வை மக்களுக்கு வழங்க இந்த 13 அடி உயரம் கொண்ட பொற்கூரையை அமைத்தோம்,” என்றார் கோயில் தொண்டரான திரு டி.சிவபிரகாசம், 44.
முப்பரிமாண நாயன்மார் திருவுருவங்கள்
முப்பரிமாண அச்சகத்தைப் பயன்படுத்தி நாரிழையக் கொண்டு சைவ சமய புனிதர்களான 63 நாயன்மார்களின் திருவுருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அவை யாகசாலையைச் சுற்றி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
“திருமுறை உருவானதற்குக் காரணமான நாயன்மார்கள் பற்றி மக்களிடம் எடுத்துக்கூற இந்த ஏற்பாட்டை செய்தோம்,” என்றார் திரு சிவபிரகாசம்.
“வெளிநாட்டிலிருந்து வாங்காமல் ஃபைபர் சிலைகளைச் சுயமாகச் செய்தால் வடிவத்தில் எவ்வித சிக்கலும் ஏற்படாது என்பதால் முப்பரிமாண அச்சகத்தைத் தேர்ந்தெடுத்தோம்,” என்றார் ஶ்ரீ சிவன் கோயிலின் நிர்வாகக் குழுவின் துணைச் செயலாளர் எஸ்.கணேஷ், 57.
வடிவமைக்கப்பட்ட நாயன்மார் திருவுருவங்களை அலங்கரிப்பது தொண்டூழியர்களுக்கு ஒரு புதுமையான அனுபவமாக அமைந்தது.
அவற்றுக்கான சிகை அலங்காரம், ஆடைகள், நகை என ஒவ்வொரு நாயன்மாரின் குணாதிசயங்களுக்கு ஏற்ப 15 பேர் கொண்ட தொண்டூழியக் குழு அலங்கரித்தது.
நாயன்மார் ஒவ்வொருவரின் தோற்றத்தை வர்ணிக்கும் நூலை மேற்கோளாகக் கொண்டு பொம்மைகள் அலங்கரிக்கப்பட்டன.
“இது எங்களுக்கு முதல் அனுபவம். ஒரு குடும்பமாக சேர்ந்து ஒற்றுமையாக இப்பணியைச் செய்துவருகிறோம். வேட்டி, சேலை கட்டுவது, சிகை அலங்காரம் அனைத்தும் கற்றுக்கொடுத்தபடியே மனசார செய்தோம்”, என்றார் 40 ஆண்டுகளாக தொண்டூழியம் செய்துவரும் திருவாட்டி மெய்யப்பன் ராஜஅழகி, 68.
“நாயன்மார்கள் பற்றிய ஒரு புத்தகத்திலிருந்து குறிப்பு எடுத்து எங்களது சுயப் படைப்பாற்றலைக் கொண்டு பொம்மைகளை அலங்கரித்தோம்,” என்றார் 20 ஆண்டுகளாக தொண்டூழியப் பணியில் ஈடுபட்டு வரும் திருவாட்டி இந்திராணி தில்லைராஜா, 70.
“இளம் தலைமுறையினரின் ஈடுபாடு மிகவும் குறைவு. இளையர்கள் ஆர்வத்துடன் முன்வந்து எங்களுடன் சேர்ந்து தொண்டூழியம் செய்தால் கற்றுக்கொள்வதற்கு நிறைய உள்ளது,” என்றார் திருவாட்டி ராஜஅழகி.

