சிறிய வானொலியில் பாட்டுச் சத்தம். எளிமையான தோற்றத்தில் அமைந்த ஒரு சிறிய கடை. கடைக்காரரின் கைகளுக்கு எட்டும் தூரத்தில் பொருள்கள்.
குச்சிமிட்டாய் முதல் மளிகைப் பொருள்கள் வரை கிடைக்கக்கூடிய இந்தக் கடையை, சிங்கப்பூரின் பரபரப்பான குடியிருப்பு வட்டாரங்களில் ஆங்காங்கே பார்க்க முடியும்.
‘மாமா கடை’ என்று பலராலும் செல்லமாக அழைக்கப்படும் இந்தக் கடைகள், அந்தந்த வட்டாரக் குடியிருப்பாளர்களுக்கு நன்கு பரிட்சயமானவை. பலசரக்கு கடைகளாகத் தலைமுறை தலைமுறையாகச் செயல்பட்டு வரும் இந்த மாமா கடைகள், சிங்கப்பூர் வரலாற்றின் ஒரு பகுதியாகவும் விளங்குகின்றன.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் 1970களில் மாமா கடைகளைக் குடியிருப்பு வட்டாரங்களில் அறிமுகப்படுத்தியது. 1980கள், 1990களில் மாமா கடைகளின் எண்ணிக்கை உச்சத்தில் இருந்தது. 560ஆக இருந்த அந்த எண்ணிக்கை, தற்போது கிட்டத்தட்ட 240க்குக் குறைந்துவிட்டது.
இணைய வர்த்தகர்களின் அதிகரிப்பு, புதிதாகக் கட்டப்படும் வீவக கட்டடங்களின் அடித்தளங்களில் இடப்பற்றாக்குறை என மாமா கடைகள் எதிர்நோக்கும் சவால்கள் பல.
எதிர்காலம் உண்டு
மாமா கடைகளின் எதிர்காலம் என்ன என்று சிலர் வினவும் காலகட்டத்தில், இத்தொழிலில் 43 வயது ஆனந்த் கிருஷ்ணன் புதிதாக இறங்கியுள்ளார்.
சிங்கப்பூரில் கடந்த 19 ஆண்டுகளாக இருக்கும் ஆனந்த், மார்சிலிங் வட்டாரத்தில் ‘அண்ணாச்சி டிரேடிங் மினிமார்ட்’ என்ற கடையை நடத்தி வருகிறார்.
இணைய வர்த்தகங்கள் இயங்கும் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் மாமா கடைகள் பல, இழுத்து மூடப்பட்டாலும் மாமா கடை நடத்தும் தொழில் தமக்கு நம்பிக்கை அளிப்பதாக திரு ஆனந்த் கிருஷ்ணன் கூறினார். முன்னதாக, பொறியியல் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றிய இவர், மாமா கடைகளில் விற்கப்படும் பொருள்களுக்கான தேவை தொடர்கிறது என்றார்.
தொடர்புடைய செய்திகள்
“மாமா கடைகளில் விற்கப்படும் மளிகைப் பொருள்களை மக்கள் இன்னமும் நாட, அவற்றின் நம்பகத்தன்மையே காரணம். அதோடு வீட்டில் இருந்தபடி இணைய வர்த்தகங்களின் மூலம் பொருள் வாங்குவதைவிட மாமா கடைக்கு நடந்து சென்று பொருள்களைக் கையில் எடுத்துப் பார்த்து வாங்குவது மேலும் சிறந்த ஓர் அனுபவம்,” என்றார் ஆனந்த்.
தமிழகத்தில் ‘அண்ணாச்சி’ என்றழைக்கப்படும் வம்சாவளியைச் சேர்ந்த திரு ஆனந்த், இளம் வயதிலிருந்தே தந்தை நடத்தி வந்த அண்ணாச்சி கடையில் உதவி வந்தார்.
“அடுத்து நான் தராசில் எடை போட்டு விற்கும் முறையையும் பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறேன். கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் இதைப் பார்க்கும்போது அவர்களுக்குப் பழைய மாமா கடை நினைவுகள் தோன்றும்,” என்று ஆனந்த் சொன்னார்.
தமது கடைக்கு வழக்கமாக வரும் வாடிக்கையாளர்கள் பலரும் முதியவர்கள் என்று கூறிய ஆனந்த், “இளம் தலைமுறையினருக்கு மாமா கடைகளின் சிறப்பு நன்குப் புரிவதில்லை. அனைத்தையும் இணையத்திலேயே வாங்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள்,” என்று தெரிவித்தார்.
காலத்துக்கேற்ற மாற்றம்
இதுவரை பலசரக்குக் கடையாக இருந்த ‘ஏஆர்வி ஸ்டோர்ஸ்’ மாமா கடை, விரைவில் நவீன மளிகைக் கடையாக மாறவுள்ளது.
அதிகமான வாடிக்கையாளர்களை ஈர்க்கவே இந்த முயற்சி என்று கடையை நடத்திவரும் ரம்யா வடிவேலு, 32, கூறினார். இவரின் தந்தை திரு வடிவேலு, 1956ஆம் ஆண்டில் கடையைத் தொடங்கியதை அடுத்து தற்போது ரம்யா தம் கணவருடன் நடத்தி வருகிறார்.
“ஒரு காலத்தில் இந்த வியாபாரத்தை என் அப்பா நடத்தி வந்தபோது எங்கள் கடை மிகவும் பிரபலமாக இருந்தது. சாங்கி வட்டாரத்திலேயே பல மலாய் வாடிக்கையாளர்கள் வந்தனர். ஆனால் இப்போதெல்லாம் ஒரு நாளில் $10 லாபத்தைக்கூட பார்க்க முடியவில்லை,” என்றார் ரம்யா.
மசாலாவைச் சாக்குப் பைகளில் விற்பது, கடையின் உட்புறத் தோற்றத்தை மாற்றாமல் வைத்திருப்பது என்றிருந்தாலும் இக்காலத்துக்கேற்ப தமது கடை இல்லை என்று ரம்யா கருதுகிறார்.
“கடையின் பழைய தோற்றத்தால் வாடிக்கையாளர்கள் சிலர் கடைக்குள் வருவதுகூட இல்லை. அவர்களின் ரசனைக்கேற்றவாறு கடையை மாற்றியமைத்தால் வியாபாரம் சூடுபிடிக்கலாம்,” என நம்பிக்கை தெரிவித்தார் ரம்யா.
மாமா கடைகளில் விற்கப்படும் பொருள்கள் பெரும்பாலும் தேக்காவிலும் என்டியூசி போன்ற பேரங்காடிகளிலும் கிடைப்பதால் வாடிக்கையாளர்கள் மாமா கடைகளை நாடுவதில்லை என்றார் ரம்யா.
“வாடிக்கையாளர்கள் சிலர் மற்ற இடங்களில் விற்கப்படும் அதே பொருள்களின் விலையை எங்கள் கடையுடன் ஒப்பிடுகிறார்கள். சில வாடிக்கையாளர்கள் பேரம் பேசி குறைந்த விலையில் பொருள் வாங்க நினைக்கிறார்கள். இது எங்களுக்கு எப்படி கட்டுப்படியாகும்?” என்று ரம்யா வினவினார்.
அவசரத் தேவைக்கு நாங்கள்
லிட்டில் இந்தியாவில் 25 ஆண்டுகளாகத் தம் கணவர் நடத்தி வரும் மாமா கடையில் உதவி வரும் சமீமா பேகம், 47, மாமா கடைகள் சிங்கப்பூருக்கு மிக அவசியம் என்றார்.
“தரம் வாய்ந்த பொருள்களை மாமா கடைகளிலும் வாங்கலாம். மக்கள் என்னதான் என்டியூசி, ஷெங் சியாங் போன்ற கடைகளுக்குச் சென்றாலும் அவசரத் தேவைக்கு மாமா கடைகள் கைகொடுக்கின்றன,” என்றார் ‘சோனியா சண்ட்ரைஸ்’ கடையை நடத்தி வரும் சமீமா.
“பற்பொடி, பாக்கு போன்ற பொருள்களை வாங்க, தேக்கா வரை வருவதற்குப் பதிலாக மக்கள் அவர்களின் வீட்டருகில் இருக்கும் மாமா கடைகளிலேயே வாங்கிக் கொள்ளலாம். அத்தகைய பொருள்கள் மற்ற கடைகளில் கிடைக்காது,” என்றார் சமீமா.
தமிழகத்தின் தஞ்சாவூரிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த சமீமாவின் கணவர், அவரின் தந்தையைப் போலவே இத்தொழிலில் ஈடுபடத் தொடங்கினார். இரண்டாவது தலைமுறையாகத் தொடரும் இந்த மாமா கடைக்கு, வருகைதரும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் வெளிநாட்டு ஊழியர்கள்.
“பொதுவாக வாடிக்கையாளர்கள் அவசரத்தில் வாங்க விரும்பும் பொருள்கள் அனைத்தும் மாமா கடைகளில் உள்ளன. அதனால், அவர்கள் பெரிய கடைத்தொகுதிகளுக்குச் சென்று அதிக விலையில் பொருள் வாங்கத் தேவையில்லை,” என்று சமீமா கூறினார்.
மறையும் வாய்ப்புள்ளது
தந்தை தொடங்கிய மாமா கடையை, இரண்டாம் தலைமுறை உரிமையாளராக நடத்தி வருகிறார் முகம்மது இஷாக், 62.
டோர்செட் சாலையில் அமைந்துள்ள ‘எஸ். எஸ். மைதீன்’ எனும் இவரது கடையைப் பார்க்கும் ஒருவருக்கு, பழங்காலத்து மாமா கடைதான் நினைவுக்கு வரும்.
சுவரில் ஒரு கடை புதைந்திருப்பது போன்ற தோற்றம், பழைய பெயர்ப்பலகை ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு மாமா கடைகளில் மட்டும் கிடைக்கக்கூடிய பொருள்கள் இங்கு இன்னும் விற்கப்படுகின்றன.
பிளேடு, பழைய மிட்டாய் வகைகள், உலர்ந்த பழங்கள் உட்பட இதர பொருள்கள் ஆகியவை இங்கு உள்ளன.
“கடந்த 66 ஆண்டுகளாக என் குடும்பம் இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறது. முன்பு மாமா கடைகளுக்கு இருந்த தேவை இப்போது குறைந்துள்ளது. காலப்போக்கில் என் கடையை மூடும் நிலை வரலாம் என்று நான் நினைக்கிறேன்,” என்றார் இஷாக்.
“என் கடை பழைய மாமா கடைபோல இருக்க வேண்டுமென்றுதான் நான் விரும்புகிறேன். அதை நான் மாற்றினால் மாமா கடை என்ற சொற்களுக்கே பொருள் இல்லாமல் போய்விடும்,” என்றார்.
“முன்பு இந்த வட்டாரத்தில் நிறைய பள்ளிகள் இருந்தன. மாணவர்கள் மலிவான விலையில் பொருள் வாங்க என் கடையை அதிகம் நாடினர். ஆனால், தற்போது இங்கு ஒரே ஒரு பள்ளிதான் இருக்கிறது,” என்று வருத்தத்துடன் கூறினார் இஷாக்.
கொவிட்-19 காலத்தில் தமது கடை இயங்கிக்கொண்டிருந்ததால் அவசர தேவைக்கு வாடிக்கையாளர்கள் பலரும் தமது கடையை அதிகம் நாடியதாகச் சொன்ன திரு இஷாக், அதன் பிறகு வியாபாரம் பேரளவில் சரிந்ததாகக் குறிப்பிட்டார்.
மக்கள் கருத்து
“நான் அடிக்கடி சென்று வந்த மாமா கடை இப்போது அங்கில்லை. அந்த மாமா கடை உரிமையாளர் மிகவும் அன்பானவர். வியாபாரம் சரியத் தொடங்கியபோது மாமா கடையை மூட முடிவெடுத்தனர். இன்று அந்த இடம் வெற்றிடமாக உள்ளது. மார்சிலிங் செல்லும் போதெல்லாம் நான் அவ்விடத்தைப் பார்த்து ஏங்குவேன்,” என்று வருத்தத்துடன் சொன்னார் திருவாட்டி மலர், 65.
இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த புதிதில், மாமா கடைதான் தமக்குக் ஆறுதலாக இருந்தது என்று திருவாட்டி சகுந்தலா, 75, கூறினார்.
“ஆங்கிலம் பேசத் தெரியாத எனக்கு, மாமா கடைகள் நடத்தி வருபவர்களிடம் தமிழில் பேசிப் பொருள்களை வாங்கியபோது குடும்ப உறுப்பினருடன் பேசிய உணர்வு கிடைத்தது. ஆனால், நான் வழக்கமாகச் சென்று வந்த மாமா கடை இப்போது இல்லை,” என்றார் அவர்.
“என் பெற்றோர் என்னைச் சிறுவயதில் மாமா கடைகளுக்கு அழைத்துச் சென்றதை நான் மறக்க மாட்டேன். அங்குதான் சிறுவர்களுக்குப் பிடித்தமான அனைத்து வகை மிட்டாய்களும் மலிவான விலையில் கிடைக்கும்,” என்று நினைவுகூர்ந்தார் ஹரி, 28.
காலத்தின் கட்டாயம்
தந்தை தொடங்கிவைத்த தொழிலை முன்னெடுத்துச் செல்ல விரும்பும் ரம்யா, இணைய வர்த்தகத்தில் ஈடுபடுதல், பொருள்களுக்குத் தள்ளுபடி வழங்குதல், வீட்டு விநியோகச் சேவை தொடங்குதல் போன்ற உத்திகள் மூலம் இத்தொழிலைச் சீராக நடத்தத் திட்டமிட்டுள்ளார்.
முடிந்தளவில் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் நவீன காலத்துக்கு ஏற்ப தமது தொழிலை எடுத்துச் செல்லவும் தயாராக இருக்கும் இஷாக், ஆனந்த் ஆகிய இருவரும் ‘பேநவ்’ போன்ற இணையக் கட்டணமுறைகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
மேலும், ‘ஷோப்பி’ இணைய வர்த்தகத் தளத்திலிருந்து பொருள் வாங்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் கடைகளிலிருந்து அவற்றைப் பெற்றுக்கொள்ளும் வசதியையும் இருவரும் தங்களின் கடைகளில் ஏற்படுத்தியுள்ளனர்.
எதிர்காலம் உண்டா?
பொதுவாக, மாமா கடைகளுக்கான மாத வாடகை, கிட்டத்தட்ட $2,000 வரை உள்ளது. இத்துடன் தினசரி ஈட்டக்கூடிய லாபமும் அதிகமில்லை. நாட்டின் பொருளாதாரத்திற்கு இத்தகைய கடைகள் பேரளவில் பங்களிப்பதில்லை என்று சிலர் கருதினாலும் பழையனவற்றுக்காக ஏங்கும் சிங்கப்பூரர்கள் இன்னமும் உள்ளனர்.
சிங்கப்பூரின் ஒவ்வொரு குடியிருப்புப் பேட்டையிலும் அடங்கியுள்ள நினைவலைகளைப் பாதுகாத்து, அவற்றை மக்களுக்குக் கொண்டுசெல்லும் வகையில் மரபுடைமைப் பாதைகளை தேசிய மரபுடைமைக் கழகம் அறிமுகப்படுத்தியது.
அவ்வாறு பெக் கியோ மரபுடைமைப் பாதைக்கு திரு இஷாக்கின் கடை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இஷாக்கின் கடையின் மூலம் மக்களால் வரலாற்றை அறிந்துகொள்ள முடிகிறது.
“மரபுடைமைப் பாதையில் கலந்துகொள்ளும் சிங்கப்பூரர்களும் சுற்றுப்பயணிகளும் கடைக்கு வருவது என்னை நெகிழ வைக்கிறது. சிங்கப்பூர் வரலாற்றில் ஒரு மாமா கடையும் இடம்பிடித்துள்ளது என நினைக்கும்போது அதில் பெருமிதம்தான்,” என்று திரு இஷாக் புன்னகையுடன் கூறினார்.

