‘வாமனத் தீவு’ நூல் ஒரு சமூகத்தின் அடையாளப் பயணத்தையும் வெளிப்படுத்துகிறது

‘வாமனத் தீவு’ நூல் ஒரு சமூகத்தின் அடையாளப் பயணத்தையும் வெளிப்படுத்துகிறது

2 mins read
9079c6dc-e7c2-4d25-8346-49d428dd1239
(இடமிருந்து) கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, நா. ஆண்டியப்பன், எம். சரவணன், சகாதேவன், பெ. இராஜேந்திரன், மன்னர் மன்னன். - படம்: விஜயராணி

சிங்கப்பூரின் அரசியல், சமூக, பண்பாட்டு மாற்றங்களை இலக்கிய வடிவில் பதிவுசெய்யும் தனிச்சிறப்பைக் கொண்ட ‘வாமனத் தீவு’ நூல், ஒரு சமூகத்தின் அடையாளப் பயணத்தையும் வெளிப்படுத்துகிறது என்று டாக்டர் எம். சரவணன் கூறியிருக்கிறார்.

மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மலேசியக் கண்ணதாசன் அறவாரியத் தலைவருமான அவர், கோலாலம்பூரில் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி திங்கட்கிழமை நேதாஜி மண்டபத்தில் நடைபெற்ற நா.ஆண்டியப்பன் எழுதியுள்ள அந்த நூலின் அறிமுக விழாவில் தலைமையேற்றுப் பேசியபோது அவ்வாறு குறிப்பிட்டார்.

திருமாலின் வாமன அவதாரம் எப்படி விஸ்வரூபம் எடுத்து நின்றதோ அதுபோல, சிறிய தீவாக இருக்கும் சிங்கப்பூர், உலக அரங்கில் எவ்வாறு முக்கியத்துவம் பெற்ற நாடாக வளர்ந்துள்ளது என்பதை வாமனத் தீவு என்ற தலைப்பே நமக்குப் புலப்படுத்துகிறது என்று திரு சரவணன் கூறினார். 

மலேசியப் பத்திரிகை வரலாற்றில் முத்திரை பதித்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் ஆதி. குமணன். மற்றொருவர் நண்பர் ஆண்டியப்பன் என்றும் அவர் தெரிவித்தார். 

மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் மேனாள் தலைவரும் தற்போதைய அயலகத் தொடர்புக் குழுத் தலைவருமான திரு பெ. இராஜேந்திரன் வரவேற்புரை ஆற்ற, மற்றொரு மேனாள் தலைவர் திரு மன்னர் மன்னன் நூலை அறிமுகம் செய்தார். இன்னொரு மேனாள் தலைவர் திரு ஞான சைமன் நிகழ்ச்சியை நெறியாள்கை செய்தார்.

வாழ்த்துரை ஆற்றிய சிங்கப்பூர் கவிமாலை நிறுவனரும் ‘மக்கள் மனம்’ ஆசிரியருமான கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, திரு சரவணனுக்கும் நண்பர் ஆண்டியப்பனுக்கும் உள்ள நட்பு கோப்பெருஞ்சோழனுக்கும் பிசிராந்தையாருக்கும் இடையில் இருந்த நட்பைப் போன்றது என்று குறிப்பிட்டார்.

ஏற்புரை ஆற்றிய நூலாசிரியர் ஆண்டியப்பன், சிங்கப்பூர் மலேசியாவில் இணைந்தது, பின்னர் பிரிந்தது பற்றிய தகவல்கள் சிங்கப்பூர் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்றும் மலேசியாவிலுள்ள ஆவணங்களை ஆய்வு செய்து, அங்குள்ள எழுத்தாளர்கள் மலேசியக் கண்ணோட்டத்தில் அந்த விவகாரம் குறித்து நூல் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகக் கூறினார்.

தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி பா. சகாதேவன் முதல் நூலைப் பெற்றுக்கொண்டார். 

தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த கவிஞர் நெல்லை ஜெயந்தா, நிகழ்ச்சியில் கவிஞர் வாலியைப் பற்றி இலக்கிய உரையாற்றினார்.

குறிப்புச் சொற்கள்