தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முதியோர் மனம் மகிழ்ந்த விசாக தினக் கொண்டாட்டம்

3 mins read
c4a14ebf-3cae-4a9f-8c51-57ac56d2961e
பார்கின்சன்ஸ் நோயைப் பொருட்படுத்தாமல் விசாக தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்ற செல்லமணி முத்துசாமி, 69. மின்விளக்கைக் கையில் ஏந்தியபடி முதியோர் பாடியது, சமூக ஒற்றுமையையும் பரிவையும் குறித்தது. - படம்: ரவி சிங்காரம்
multi-img1 of 3

துப்புரவுத் துறையில் 15 ஆண்டுகளாக சுயதொழில் புரிந்தவர் செல்லமணி முத்துசாமி, 69. சமையலில் கைதேர்ந்தவரான இவர், தெக் வாயில் இரு உணவுக் கடைகளை நடத்தி வந்தார்.

பார்கின்சன்ஸ் நோயைப் பொருட்படுத்தாமல் விசாக தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்ற செல்லமணி முத்துசாமி, 69.
பார்கின்சன்ஸ் நோயைப் பொருட்படுத்தாமல் விசாக தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்ற செல்லமணி முத்துசாமி, 69. - படம்: ரவி சிங்காரம்

2014ல் இவருக்கு பார்கின்சன்ஸ் நோய் இருப்பது தெரியவந்தது. அடுத்த இடியாக, பேருந்தில் ஏற்பட்ட விபத்தில் தலையில் அடிபட்டதில், பார்கின்சன்ஸ் நோய் மோசமடைந்தது.

ஹாலந்து வில்லேஜில் மற்றோர் உணவுக் கடையைத் திறக்க இருந்த திருவாட்டி செல்லமணியால் தொழிலைத் தொடர முடியவில்லை.

தற்போது கை, கால் நடுக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை மருந்து உட்கொள்கிறார்.

சனிக்கிழமை (மே 17) காலையில் ‘புளோசம் சீட்ஸ்’ துடிப்பாக மூப்படைதல் நிலையத்தில் நடைபெற்ற விசாக தினக் கொண்டாட்டத்தில் உற்சாகத்துடன் பங்கேற்ற மூத்த குடிமக்களில் திருவாட்டி செல்லமணியும் ஒருவர்.

300க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற அந்தக் கொண்டாட்டத்தில் மார்சிலிங் குடிமக்கள் ஆலோசனைக் குழுவின் கெளரவத் தலைவர் சியோங் கிம் டெக் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

முதியோர் கைகளில் விளக்குகள் ஏந்தி அன்பைக் குறிக்கும் பாடல்களைப் பாடிப் பண்டிகை உணர்வில் மிதந்தனர். அவர்களில் 95 வயது மேக்டலின் ரோட்ரிகசும் (நடுவில்) ஒருவர்.
முதியோர் கைகளில் விளக்குகள் ஏந்தி அன்பைக் குறிக்கும் பாடல்களைப் பாடிப் பண்டிகை உணர்வில் மிதந்தனர். அவர்களில் 95 வயது மேக்டலின் ரோட்ரிகசும் (நடுவில்) ஒருவர். - படம்: ரவி சிங்காரம்

வரததாஸ் ரத்தினராமா சங்கம், அ‌ஸ்யஃபாஹ் பள்ளிவாசல், தாருல் மக்மூர் பள்ளிவாசல், புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயம் ஆகிய அமைப்புகள், வழிபாட்டுத் தலங்களிலிருந்து சமயத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

“இது பெளத்த சமயத்தின் அதிமுக்கிய நாள்களில் ஒன்று. மனத்திலிருந்து தீயவற்றை நீக்கி நல்ல எண்ணங்களை வளர்ப்பதே புத்தரின் வாக்கு,” என்றார் பெளத்த சமயப் போதகர் ரெவ்ரண்ட் பெரகாமா பியாராதனா தெரொ.

“புளோசம் சீட்ஸ் உடன் இணைந்து நம் ஆலயம் மூத்தோருக்காக பல சமூக நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. பண்டிகைகளின்போது விருந்து உபசரிப்பு அளித்து, அன்பளிப்புப் பைகளை வழங்கி கொண்டாட்ட உணர்வைப் பகிர்கிறோம்,” என்றார் புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலய நிர்வாகி யமுனா சுப்பிரமணியம்.

புளோசம் சீட்ஸ் பெளத்த அறநிறுவனமும் மக்கள் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சிக்கு சிங்கப்பூர் இளையர் தொண்டூழியர் அணி துணைபுரிந்தது.

முதியோர் நலனை மேம்படுத்த உதவும் அதன் ‘We+65’ திட்டம்வழி இளையர்கள் 2020 முதல் புளோசம் சீட்ஸ் அமைப்புடன் இணைந்து திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளனர்.

தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் ஆரம்பக்கல்வித் துறையில் பட்டயப் படிப்பை முடித்த வைணவி பெருமாள், 19, படிப்பின்போது சமூகச் சேவையை இணைப்பாட நடவடிக்கையாக மேற்கொண்டார். படிப்பை முடித்தவுடன் சமூக சேவைப் பயணத்தைத் தொடர விரும்பி சிங்கப்பூர் இளையர் தொண்டூழியர் அணியில் அவர் சேர்ந்தார்.

சிங்கப்பூர் இளையர் தொண்டூழியர் அணி மூலம் முதியோருக்குச் சேவையாற்றும் வைணவி பெருமாள், 19.
சிங்கப்பூர் இளையர் தொண்டூழியர் அணி மூலம் முதியோருக்குச் சேவையாற்றும் வைணவி பெருமாள், 19. - படம்: ரவி சிங்காரம்

கடந்த மூன்று மாதங்களாக இரு வாரங்களுக்கு ஒருமுறை புளோசம் சீட்ஸ் நிலையத்துக்குச் சென்று சக தொண்டூழியர்களுடன் முதியோருக்கான நடவடிக்கைகளுக்கு அவர் ஏற்பாடு செய்து வந்துள்ளார்.

“இளையருக்கும் முதியோருக்கும் இடையே தலைமுறைகள் கடந்த பிணைப்பை ஏற்படுத்த இந்நிகழ்ச்சிகள் வழிவகுக்கின்றன,” என்றார் வைணவி.

முதியோருக்கு ரொக்க அன்பளிப்புகளும் வழங்கப்பட்டன.

விசாக தினம் சார்ந்த தங்களின் முதல் நடன அங்கத்தை முதியோர் முன்னிலையில் படைத்ததில் கூத்தம்பலம் நடனப்பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

“தீபங்களுடன் பரதநாட்டியம் படைத்து புத்தருக்குச் சமர்ப்பித்தோம்,” என்றார் நடன ஆசிரியை வர்த்தினி சுப்பிரமணியன்.

பிள்ளைகளின் பாரம்பரிய நடனம் சிறப்பாக இருந்ததாக பார்வையாளர் சரஸ்வதி கோபால் நாயுடு, 73 குறிப்பிட்டார்.

முதியோர் முன்னிலையில் நடனம் படைத்த கூத்தம்பலம் நடனப்பள்ளி மாணவர்கள்.
முதியோர் முன்னிலையில் நடனம் படைத்த கூத்தம்பலம் நடனப்பள்ளி மாணவர்கள். - படம்: ரவி சிங்காரம்

நிகழ்ச்சி மிகவும் பிடித்திருந்ததாக திரு சொக்கலிங்கம் துரைதாஸ், 74 கூறினார். முன்பு பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றிய அவர், அதற்கான உரிமத்தைப் புதுப்பிக்க போதிய நிதி இல்லாததால் வேலையின்றி இருப்பதாகக் கூறினார். புளோசம் சீட்ஸ் நிலையத்தின் பயனாளிகளில் அவரும் ஒருவர்.

2016ல் மின்படியில் விழுந்து கால்களில் அடிபட்டதால் திருவாட்டி சரோ சாரா, 79, சக்கர நாற்காலியைப் பயன்படுத்தத் தொடங்கினார். பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றிவந்த அவர் வேலையை நிறுத்தினார். தனியாகக் க‌ஷ்டப்பட்டுக்கொண்டிருந்த வேளையில், புளோசம் சீட்ஸ் அவரை அணுகி நிலையத்தின் நடவடிக்கைகளில் பங்கேற்க அழைத்தது.

முதியோர் கையில் மின்விளக்குகள் ஏந்தி பாடல்கள் பாடினர். தனிமையில் வாழும் முதியோரிடம் பரிவைக் காட்டுவதை இந்நடவடிக்கை குறித்தது. படத்தில் சரோ சாரா, 79 (நடுவில்).
முதியோர் கையில் மின்விளக்குகள் ஏந்தி பாடல்கள் பாடினர். தனிமையில் வாழும் முதியோரிடம் பரிவைக் காட்டுவதை இந்நடவடிக்கை குறித்தது. படத்தில் சரோ சாரா, 79 (நடுவில்). - படம்: ரவி சிங்காரம்

இவ்வாறு பலதரப்பட்ட முதியோருக்கும் நிகழ்ச்சி பயனுள்ளதாக இனிதே அமைந்தது.

குறிப்புச் சொற்கள்