நல்வாழ்வும் அமைதியும் வேண்டி திரண்ட பக்தர்கள்

நேசமும் இனங்களுக்கிடையேயான பாசமும் இழையோடிய விசாகத் திருநாள்

2 mins read
1906653d-4f79-481e-94d8-0128311e40f8
தாயார் முத்தம்மாளுடன் திருவாட்டி ஜெயம். - படம்: இளவரசி ஸ்டீஃபன்
multi-img1 of 4

அர்ப்பணிப்புடன் அமைதி நாடிய பக்தர்கள் பேரளவில் திரண்டதால் ரேஸ் கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள சாக்கியமுனி புத்தகயா ஆலயம் பக்தி மணத்தால் கமழ்ந்தது.

புத்தரைத் தரிசிக்கவும் நல்வாழ்வுடன் அமைதியையும் அருளவும் விசாக தினமான திங்கட்கிழமை (மே 12) காலை முதலே பக்தர்கள் ஆலயத்தில் திரளத் தொடங்கினர்.

நடமாட்டம் குன்றிய அன்புக்குரியோரைச் சக்கர நாற்காலியில் அழைத்து வந்த சொந்தங்கள் ஒருபுறம். வேலை செய்ய வந்த இடத்தில் விசாக தினத்துக்கு விடுப்பு கிடைத்தால், இறைவனை வணங்க சமயம் ஒரு தடையல்ல என்று கருதியதால் நண்பர்களாகக் கூடிய வெளிநாட்டு ஊழியர்கள் மறுபுறம்.

தாமரை மலர் காணிக்கை, புனித நீர் வழிபாடு மேலோங்க, பக்தர்களின் வரவால் ஆலயத்தில் தொடர் இறை வேண்டுதல் நடைபெற்ற வண்ணம் இருந்தது.

மூப்படைந்த தாயாரின் உடல்நலம் வேண்டியும் மனத்திற்கு அமைதி தேடியும் ஆலயத்திற்கு வந்ததாகச் சொன்னார் திருவாட்டி ஜெயம், 55.

விசாக தினத்திற்குக் கிடைத்த விடுப்பில் புத்தரைத் தரிசிக்க வந்திருந்தனர் கட்டுமானத் துறையில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களும் நண்பர்களுமான திரு ராஜ்குமார் 40, திரு ரமேஷ் 35, திரு ராஜ்குமார், 37.

“புத்தர் ஞானமடைந்த இந்தியாவிலிருந்து வந்திருப்பது எங்களுக்குப் பெருமை. அவர் உலகெங்கிலும் வழிபடப்படுவதைப் பார்க்கையில் இனிமையாக உள்ளது. சிங்கப்பூரில், இன சமய நல்லிணக்கம் எல்லாயிடமும் உள்ளது அது பெரும் பாக்கியம்.

“பல கோவில்களும் இங்கு அருகருகே உள்ளதால் ஸ்ரீ வீ­ர­மா­கா­ளி­யம்­மன் ஆல­யத்­திற்கு வந்துவிட்டு அப்படியே புத்தரையும் தரிசிக்க வந்தோம்,” என்றனர்.

ஆலயத்திற்கு கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வருகைதரும் திரு வீராசாமி ரவி, 56, ‘‘சிங்கப்பூர் சுதந்திரம் பெற்று அதன் 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், மூத்தோர் நலனுக்காகவும் நாட்டின் செழிப்பிற்காகவும் வழிபட வந்தேன்,” எனச் சொன்னார்.

அமைதியும் நல்லிணக்கமும் நிலவ வேண்டி குவிந்த பக்தர்களால் சாக்கியமுனி புத்தகயா ஆலயம் புனித நாளை வரையறுக்கும் இரக்கம், அன்பு உட்பட ஒற்றுமையின் உணர்வால் திளைத்தது.

குறிப்புச் சொற்கள்