‘வேறுவேறு பாஷைகள் கற்பாய் நீ வீட்டுவார்த்தை கற்கிலாய் போ போ போ’ என்ற பாடல் மூலம் தமிழின் முக்கியத்துவத்தை உணர்த்தினார் மகாகவி சுப்ரமணிய பாரதியார்.
தமிழர்களுக்குத் தமிழ்மீது பற்று இருந்தால்தான் தமிழ்மொழி வாழும், வளரும் என்ற பாரதியாரின் குரல் இன்றுவரை ஒலிக்கிறது.
அவ்வகையில் சமூக ஊடகத்தில் விதைக்கப்பட்ட ஒரு தொண்டூழிய முயற்சி சனிக்கிழமை (ஏப்ரல் 12) தேசிய நூலக வாரியத்தின் ஆதரவுடன் ஹார்பர்ஃபிரண்ட் நூலகத்தில் நடைபெற்றது.
“என் பிள்ளைகளுக்கு தமிழ் வகுப்புகளைத் தேடிக்கொண்டிருந்தபோது, பெரும்பாலான வகுப்புகள் ஆங்கிலத்தை கலந்து பேசுவது, தமிழ்மொழியை ஒரு வேற்றுமொழியாக கற்றுக்கொடுப்பதுபோல் தோன்றியதால் அது அதிருப்தி தந்தது. இதுகுறித்து இன்ஸ்டகிராமில் பதிவிட்டிருந்தேன்,” என்றார் ‘விதைகள்’ பள்ளியை நிறுவிய ஜெயசுதா சமுத்திரன்.
“என்னைப் போன்ற பல பெற்றோருக்கும் இதே எண்ணம் இருந்தது. மழலையர்களுக்கான வாசகர் வட்டத்தை உருவாக்க வேண்டும் எனப் பலரும் என்னிடம் பரிந்துரைத்தனர்,” என்றார் ஜெயசுதா.
‘விதைகள்’ எனும் இப்புதிய முயற்சி, குழந்தைகள் தமிழ்மொழியை விளையாட்டுச் சூழலில் வண்ணம் தீட்டுதல், நூல் வாசித்தல் போன்ற பற்பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு கற்க வகைசெய்கிறது.
ஆரம்பக்கல்வியில் தமிழ் வகுப்புகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
மேலும், ஒரு பிள்ளையின் முதல் ஆறாண்டுகள்தான் எந்தவொரு மொழியையும் விதைப்பதற்கான ஆக வளமான ஆண்டுகளாகக் கருதப்படுவதால் ‘விதைகள்’ பள்ளி ஆறு வயது வரையிலான குழந்தைகளுக்கு ஏற்புடையது.
தொடர்புடைய செய்திகள்
மாதம் இருமுறை இரண்டு மணிநேரம் இரண்டு பகுதிகளாக பள்ளி நடத்தப்படும்.
ஒரு கருப்பொருளை மையமாக வைத்து, தேசிய நூலக வாரியத்திடமிருந்து இரவல் வாங்கப்பட்ட நூலை தெரிவுசெய்து ஒவ்வொரு ‘விதைகள்’ பாடமும் அமையும்.
இது, நூலகங்களில் தமிழ் நூல்களை இரவல் வாங்கும் போக்கை ஊக்குவிக்கும் என்று நம்புவதாக ஜெயசுதா கூறினார்.
இம்மாதம் ‘விண்வெளி’ என்ற கருப்பொருளுடன் முதல் வகுப்புக்கு ‘விண்வெளி சென்ற யானை’ என்ற நூல் தெரிவு செய்யப்பட்டது.
ஏறத்தாழ ஒரு மாதத்தில் ‘விதைகள்’ பள்ளியின் முதல் வகுப்புக்கான ஏற்பாடுகளில் ஒரு கூட்டு முயற்சியாக மும்முரமாக இறங்கினர் தொண்டூழிய ஆசிரியர்கள்.
“ஆசிரியராக என் பங்கையாற்ற வேண்டும் என்ற என் ஆதரவையும் விருப்பத்தையும் தெரிவித்தேன். மெய்நிகர் வாயிலாக சந்தித்து, கலந்தாலோசித்து பல யோசனைகளை முன்வைத்தோம்,” என்றார் ‘விதைகள்’ பள்ளியின் தொண்டூழியரும் பாலர்பள்ளி ஆசிரியருமான குழலி, 24.
குழந்தைகள் ‘விதைகள்’ பள்ளிக்கு தொடர்ந்து வருவதை ஊக்குவிக்கும் வண்ணம் பயிற்சித்தாள்களையும் கோப்புகளையும் தொண்டூழியர்கள் தயார் செய்தனர்.
அவர்களது வளர்ச்சியைக் கண்காணிக்கவும் அவை உதவும்.
“வீட்டில் ஒரு தமிழ் நூலகம் உள்ளது. ஆனால் அவளால் குறுகிய நேரம் மட்டுமே கவனம் செலுத்த முடியும் என்பதால் அது அவ்வளவு பயனுள்ளதாக இல்லை. அதனால் ‘விதைகள்’ பற்றி கேள்விப்பட்டவுடனே பதிவுசெய்துவிட்டேன்,” என்றார் நான்கு வயது ரியாதிராவின் தாயார் திருவாட்டி சிவசங்கரி செல்வன்.
“என் மகள் மிகவும் விருப்பப்பட்டு பங்கெடுத்தாள். ஆசிரியர்களும் மிகுந்த ஈடுபாட்டுடன் பாடத்தை வழிநடத்தினர். அடுத்தடுத்த வகுப்புகளுக்கும் வரவேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். இதன்மூலம் அவள் இன்னும் சரளமாக தமிழில் பேசுவாள் என்ற நம்பிக்கை உள்ளது,” என்றார் அவர்.
தம் ஆறு வயது மகன் துருவ் பிரேம் கோபாலுக்கு தமிழ்மொழியை எளிய முறையில் ஒரு விளையாட்டுச் சூழலில் கற்றுத்தரும் இடத்தைத் தேடிக்கொண்டிருந்தார் திருவாட்டி ஸ்வேதா முரளி.
‘என் மகனுக்கு இன்னும் தமிழில் சரளமாகப் பேச வரவில்லை. சக நண்பர்களைப்போல பேச முடியவில்லை என்ற தாழ்வு மணப்பான்மை ஏற்பட்டது. தாய்மொழியை வளர்க்க ‘விதைகள்’ பள்ளி போன்ற முயற்சிகள் அவசியம்,” என்றார் அவர்.
“வீட்டிலும் கற்றல் தொடர வேண்டும். ஒரு மணிநேர வகுப்பில் கற்றதைப் பெற்றோர் வீட்டில் பயன்படுத்தினால், அது பிள்ளைகளின் மனத்தில் ஆழமாகப் பதியும்,” என்று பெற்றோரின் பங்கை நினைவுபடுத்தினார் ஜெயசுதா.
‘விதைகள்’ பள்ளிமூலம் குழந்தைகளுக்கிடையே ஒரு நட்பு வட்டம் உருவாகும். தமிழ்மொழி பயன்பாடு அதிகரிக்கும் என்ற நம்பிக்கையுடன் வரும் வாரங்களில் தொடர்ந்து வகுப்புகளை நடத்தவிருக்கின்றனர் பள்ளி ஏற்பாட்டாளர்கள்.

