தமிழில் படைப்புகளை உருவாக்குபவர்கள் எண்ணிக்கையும் தமிழைப் படிப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே இருப்பதனால், தமிழ்மொழி என்றும் வலுவாகவும் வளமாகவும் இருக்கும். ஆயினும், இந்த வளர்ச்சியையும் தொடர்ச்சியையும் தக்கவைத்துக்கொள்வது மிக மிக முக்கியம்.
சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் இவ்வாண்டு ஏப்ரல் 26ஆம் தேதி ஏற்பாடு செய்த உமறுப்புலவர் நினைவு அரங்கில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றியபோது இக்கருத்தை முன்வைத்தார் நிபுணத்துவப் படைப்பாளரும், ஊடகவியலாளரும், பேச்சாளருமான திரு முருகன் இளவழகன்.
“செயற்கை நுண்ணறிவும், செயலிகளும் தமிழ் வளர்ச்சிக்கும், பேச்சுத் தமிழுக்கும் மிகுந்த துணைபுரிய வல்லவை. இப்பொழுது இளைய தலைமுறைக்கும் தமிழுக்கும் இடையிலான இடைவெளி பெருகி வருகிறது. செயற்கை நுண்ணறிவு, செயலி, தொழில்நுட்பம் ஆகியவை இந்த இடைவெளியைக் குறைக்கும் சாதனங்களாகும். சிங்கப்பூரிலுள்ள தமிழ் அமைப்புகள் இத்துறையில் கவனம் செலுத்துவது அவசியம்,” என்று அவர் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் சமூக, தேசிய அளவில் அருஞ்சேவையாற்றிய மூவர் சிறப்பிக்கப்பட்டனர். சமூக அடித்தளத் தலைவர் ஜலாலுத்தீன் பீர் முஹம்மது, இந்திய மரபுடைமை நிலைய நிர்வாகி பவானி மரியதாஸ் ஆகிய இருவரும் அ.நா.மெய்தீன் விருது வழங்கப்பட்டது. மலாய், இந்திய முஸ்லிம்களின் மரபும், மொழியும் பேணப்பட சீரிய முயற்சிகளை மேற்கொண்ட அப்துல் கஃபூர் பள்ளிவாசலின் தலைவர் பைமான் சுபாங்காட்டிற்கு மதிப்புமிகு உமறுப்புலவர் விருது வழங்கப்பட்டது.
தமிழ் படிக்கும் வாய்ப்பை இழந்தவர்களுக்குச் சங்கம் தமிழ் வகுப்புகளை நடத்துவதைச் சுட்டிக்காட்டிய சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் தலைவர் ராஜா முஹம்மது, இவ்வரிய வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
தமிழ்மொழியும் தமிழ்ப் பண்பாடும் எந்த அளவிற்குப் பிறமொழிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை அறிந்துகொள்ள ஒரு போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

