வெஸ்ட்லைட் தங்குவிடுதிகளில் வசிக்கும் 158 வெளிநாட்டு ஊழியர்கள், செந்தோசா யூனிவர்சல் ஸ்டூடியோசில் நடைபெற்ற ‘ஹாலோவீன் ஹாரர் நைட்ஸ்’ நிகழ்ச்சிக்கு இன்பச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஒவ்வோர் ஆண்டும் ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களைச் சிங்கப்பூரின் பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்துச் செல்வது வழக்கம் என்று விடுதியின் ஊழியர் நல மேலாளர் திருவாட்டி கேத்தரின் லீ தெரிவித்தார்.
அம்முயற்சியின்கீழ் அக்டோபர் 3ஆம் தேதி பிற ஊழியர்களின் நலனைப் பேணும் தங்குவிடுதி ஊழியர் தலைவர்களை ஹாலோவீன் ஹாரர் நைட்சுக்கு அழைத்துச் சென்றதாக அவர் கூறினார். மொத்தம் 10 விடுதிகளைச் சேர்ந்த ஊழியர்கள் பயணத்தில் கலந்துகொண்டனர்.
“ஊழியர்களின் அயராத உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் இப்பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பல வெளிநாட்டு ஊழியர்களுக்கு இதற்குமுன் சிங்கப்பூரில் ஹாலோவீன் கொண்டாட்டங்களை அனுபவிக்கும் வாய்ப்பு கிட்டியிருக்காது.
“அவர்களை அந்நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றதன் மூலம் உள்ளூர் பொழுதுபோக்கு கலாசாரத்தின் மாறுபட்ட பக்கத்தை வேடிக்கையான வகையில் அவர்கள் அனுபவிக்க வேண்டுமென நாங்கள் விரும்பினோம்,” என்றார் அவர்.
பயணத்தில் பங்கெடுத்த ஊழியர்களில் ஒருவரான மன்னார்குடியைச் சேர்ந்த 30 வயது நாகராஜ் சந்திரசேகருக்கு அந்த அனுபவம் மறக்க முடியாததாக அமைந்தது.
நிகழ்ச்சி குறித்த விளம்பரங்களைச் சமூக ஊடகங்களில் பார்த்து, வாய்ப்பு கிடைத்தால் செல்ல வேண்டும் என்று எண்ணி வந்த அவருக்குத் தங்குவிடுதியே இலவசமாக நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றது நெகிழ்ச்சியளித்தது.
“முதன்முறையாக நான் யூனிவர்சல் ஸ்டுடியோசுக்கும் ஹாலோவீன் ஹாரர் நைட்சுக்கும் சென்றேன். இந்தியாவில் இருக்கும் என் குடும்பத்தினர் நான் அனுப்பிய நிழற்படங்கள், காணொளிகள் போன்றவற்றைக் கண்டு மகிழ்ந்தனர்,” என்றார் அவர்.
பயணத்தில் பங்கேற்ற 26 வயது லோகநாதன் சுப்பிரமணி, நண்பர்களுடன் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மனநிறைவை அளித்ததாகக் கூறினார். அன்றாட வேலைச் சுமையிலிருந்து விடுபட்டு மாறுபட்ட அனுபவத்தைப் பெற்றதாகவும், அங்கு எடுத்த நிழற்படங்களையும் காணொளிகளையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டதாகவும் அவர் விவரித்தார்.
“தினமும் வேலைக்குச் செல்வதும் விடுதிக்குத் திரும்புவதுமாக நாள்கள் கடக்கையில், இத்தகைய நிகழ்ச்சிகள் புத்துணர்ச்சி அளிக்கின்றன. அதுவும் இலவச அனுமதி, சுவையான உணவு, இருவழிப் பேருந்து, தின்பண்டங்களுக்குத் தலா $10 ரொக்கம் வழங்கப்பட்டது எங்கள் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது,” என்று அவர் பகிர்ந்துகொண்டார்.
அவர்களது நண்பர்கள் பலர் பயணத்தின் தொடக்கத்தில் தைரியமாக இருந்தாலும் நிகழ்ச்சியின் முடிவில் திகில் நடிகர்களின் திறனால் மிரண்டனர் என இருவரும் புன்னகைத்தவாறு கூறினர்.
திரைப்படங்களைவிட பயங்கரமான அனுபவமாக நிகழ்ச்சி அமைந்ததென அவர்கள் குறிப்பிட்டனர்.
பயணத்திற்குச் சென்ற அனைத்து ஊழியர்களுக்கும் நிகழ்ச்சி பிடித்தமானதாக அமைந்தாலும் வார இறுதி நாளில் சென்றதால் சில அங்கங்களுக்கு வரிசைகள் சற்று நீளமாக இருந்தது மட்டுமே சிறு குறையாக அமைந்ததென திருவாட்டி கேத்தரின் சுட்டினார்.
“இத்தகைய முயற்சிகள்வழி பரந்த சிங்கப்பூர் சமூகத்துடன் வெளிநாட்டு ஊழியர்களை ஒன்றிணைப்பதும் எங்களது முக்கிய நோக்கமாக திகழ்கிறது.
“மேலும், வெளிநாட்டு ஊழியர்கள் உதவி பெறுநர்களாகத் திகழ்வதைக் கடந்து உதவி வழங்குநர்களாக மாற உதவும் தொண்டூழிய நடவடிக்கைகளும் அவர்களுக்காக தொடர்ந்து ஏற்பாடு செய்யப்படும்,” என்று அவர் உறுதியளித்தார்.
