தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மனமிருந்தால் மார்க்கமுண்டு

3 mins read
76c7ad0c-3789-4ed5-8223-1690f309f64b
திருவாட்டி தமிழ்ச்செல்வி. - படம்: ஏற்பாட்டுக் குழு

தான் இளமைத் துள்ளலுடன் சுறுசுறுப்பாக இயங்குவதை உடல்நலக் குறைபாடு, வயது மூப்பு உள்ளிட்ட எதுவும் தடுக்க முடியாது என ஆழமாக நம்புகிறார் திருவாட்டி தமிழ்ச்செல்வி எம் ராஜு, 65.

புற்றுநோய், மூளைக் கட்டி எனத் தொடர்ந்து இரு பெரும் அறுவை சிகிச்சைகளைச் சந்தித்த பின்னரும் வீட்டில் முடங்கிவிடாமல் அயராது தொண்டூழியத்தில் ஈடுபட்டு வருகிறார் தமிழ்ச்செல்வி. அவரது சேவை மனப்பான்மையும், மனஉறுதியும் அவரை ‘முன்மாதிரித் தாயார் விருதில்’ இறுதிப் போட்டியாளராக்கியுள்ளது.

வங்கியில் துணை மேலாளராகப் பணியாற்றிக்கொண்டே, கணினி அறிவியல், வரைகலை, சமூகப்பணி எனப் பம்பரமாகச் சுழன்றவருக்கு 40ஆவது வயதில் மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

புற்றுநோய்ப் பற்றி அறிந்தபோது அது மூன்றாம் நிலையை எட்டியிருந்ததால் அவருக்கு உடனடி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஓய்வெடுக்க வேண்டிய நிலை, ‘கீமோதெரபி’ சிகிச்சைகள் கொடுத்த வலி என அனைத்தும் அவரை வேதனைக்கு உள்ளாக்கின.

“எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது. நான் யாருக்கு என்ன தீங்கு செய்தேன். இந்தச் சிரமங்களை நான் ஏன் அனுபவிக்க வேண்டும் என்றெல்லாம் எனக்குள் கேள்விகள் எழுந்தன,” என்றார் தமிழ்ச்செல்வி.

பின் அவர், “நான் என்ன அதிசயப் பிறவியா? எல்லாரையும் போல சராசரிப் பெண். சிரமம் வருவது என் தவறல்ல. அதனை நான் எப்படி அணுகுகிறேன் என்பது என் கையில்தான் இருக்கிறது,” என்று தனக்குள் சொல்லிக் கொள்ளத் தொடங்கினார்.

துணிச்சலாகப் புற்றுநோயை எதிர்கொண்டு மீண்டு வந்தவுடன் பணிக்குத் திரும்பினார் இவர். எனினும், சமூகத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும், தனக்காக நேரம் செலவிட வேண்டும் என விரும்பி பணியிலிருந்து ஓய்வு பெற்றவர், முழு நேரமாகச் சமூகப் பணியில் ஈடுபடத் தொடங்கினார்.

தான் அனுபவித்த சிரமங்கள் வாழ்க்கைப் பாடங்கள் பலவற்றைக் கற்றுக்கொடுத்ததாக நம்பும் அவர், அதனைப் பலரிடம் கொண்டுசேர்க்க எண்ணினார். அவர் தொடர்ந்து உளவியல் துறையில் பட்டயக் கல்வி மேற்கொண்டார். புற்றுநோய் உள்ள சிறுவர்களுடன் நேரம் செலவிடத் தொடங்கினார். ஸ்ரீ முனீஸ்வரன் ஆலய சமூகப் பணி அமைப்பு, நாராயணா மிஷன் என இயன்றவரை தொண்டூழியம் செய்யத் தொடங்கினார் தமிழ்ச்செல்வி.

அந்த மகிழ்ச்சியும் நீண்டநாள் நீடிக்கவில்லை தமிழ்ச்செல்விக்கு. ஆறு மாதங்களுக்கு முன் கண்பார்வை பறிபோகும் அபாயமுள்ள மூளைக் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. மனம் தளரவில்லை தமிழ்ச்செல்வி. அறுவை சிகிச்சையைச் சந்தித்து சில வாரங்களிலேயே மீண்டெழுந்து மேலும் புத்துணர்வுடன் சமூகப் பணிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.

தற்போது மூத்தோர் தலைமுறைத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள இவர், தன்னைப் போன்ற மூத்தோர் மகிழ்ச்சியாக இருக்க ஊக்கப்படுத்தி வருகிறார்.

“பெண்கள், குறிப்பாக இந்திய சமூகத்தைச் சேர்ந்தோர் தங்களுக்கென நேரம் ஒதுக்குவதை தவறு என்று கருதுகின்றனர். சுய கவனிப்பு அதிகமானால், மகிழ்ச்சி பிறக்கும். மகிழ்ச்சியாக இருந்தால் பிறரை மகிழ்ச்சிப்படுத்தலாம்,” என்றார் அவர்.

தாய்மையைப் போற்றுவதாகக் கூறிய அவர், குழந்தை வளர்ப்பு எனக் கடமைகள் இருந்தாலும், அதனைச் சரிவரத் திட்டமிட்டுச் செயல்பட்டால், பிள்ளைகளும் நன்றாக வளர்வார்கள், தாயின் வாழ்வும் முழுமையடையும் என்று கூறினார்.

தனது கணவரான பன்னீர்செல்வம், பிள்ளைகள் குமுதா, சங்கீதா, பிரதீப் ஆகியோரின் ஆதரவு இல்லாமல் இது எதுவுமே சாத்தியமாகியிருக்காது என்று பெருமையுடன் சொன்னார் தமிழ்ச்செல்வி. பிள்ளைகளையும் தொண்டூழியத்தில் ஈடுபட ஊக்குவிப்பதாகக் கூறினார் அவர்.

வரைகலைஞரான இவர், ஓய்வு நேரத்தில் மனிதர்களின் முகங்களை வரையும் ‘பென்சில்’ ஓவியம், ‘அக்ரலிக்’ ஓவியங்கள் ஆகியவற்றை வரைகிறார்; நண்பர்களைச் சந்தித்து உரையாடுகிறார்; குடும்பத்துடன் நேரம் செலவிடுகிறார்.

இன்னும் பல சமூகப் பணிகளில் ஈடுபட வேண்டும் என ஆர்வத்துடன் சொல்லும் இவர், “மனமிருந்தால் மார்க்கம் உண்டு’ என்பதையே வாழ்நாள் தாரக மந்திரமாகக் கொண்டு வாழ்வதாகவும் பகிர்ந்துகொண்டார்.

முன்மாதிரித் தாயார் விருது வழங்கும் விழா

ஜாமியா சிங்கப்பூர் அமைப்பின் சார்பில் கடந்த 30 ஆண்டுகளாக ‘முன்மாதிரித் தாயார் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி, 31ஆவது முன்மாதிரித் தாயார் விருது, 6ஆவது முன்மாதிரி இளம் தாயார் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.

தடைகளைத் தகர்த்து மாற்றத்தைக் கொண்டுவர முயலும் தாய்மாருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்தோனீசியக் குடியரசின் தூதர் திரு சூர்யோ பிரதோமோ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

குறிப்புச் சொற்கள்