சிங்கப்பூர் தேசியப் பெண்கள் கோ கோ அணியை உருவாக்கும் நோக்கில், ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) காலை 8 மணியளவில் ஈசூன் விளையாட்டு அரங்கத் திடலில் விளையாட்டாளர்களுக்கான தேர்வு அங்கம் நடைபெற்றது.
18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூர்க் குடிமக்கள், நிரந்தரவாசிகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்ட அந்தத் தேர்வு, நாட்டில் கோ கோ விளையாட்டை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.
2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிங்கப்பூர் கோ கோ சங்கம், 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆண்கள் அணியைத் திரட்டி, மலேசியாவுடன் போட்டிகளில் பங்கேற்று அதன் வளர்ச்சியை ஏற்கெனவே நிரூபித்துள்ளது.
“நாங்கள் சிங்கப்பூரில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக கோ கோ விளையாடி வருகிறோம். நாட்டின் பெண்கள் அணியை வளர்ப்பதில் தற்போது நாங்கள் கவனம் செலுத்திவருகிறோம்,” என்று அந்த முயற்சி குறித்து சிங்கப்பூர் கோ கோ சங்கத் தலைமைப் பயிற்சியாளர் கதிரேசன் கூறினார்.
“விளையாட்டு அனுபவம் உள்ளவர்கள் அல்லது புதிய விளையாட்டைக் கற்றுக்கொள்ளத் தயாராக இருப்பவர்கள் கோ கோ விளையாட முன்வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,” என்றார் அவர்.
பெண்கள் அணியின் தலைமைப் பயிற்சியாளர் 25 வயது ஸ்ருதி. ப, தமது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். “இந்த அணி மிகவும் உறுதுணையாக இருக்கிறது. கடந்த ஆறு மாதங்களில் எனது விளையாட்டில் மிகப் பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளேன்,” என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், “பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர்கள் என யார் வேண்டுமானாலும் வந்து எங்களுடன் இணையலாம். நம் நாட்டைப் பிரதிநிதிக்க இது ஒரு சிறந்த வாய்ப்பு,” என்றார் அவர்.
விளையாட்டுத் தேர்வு அங்கத்தில் கலந்துகொண்ட 18 வயது பழனிநாதன் ரேசிகா, “பலவிதமான விளையாட்டுகளைக் கற்றுக்கொள்வதில் பேரார்வம் கொண்டவள் என்ற முறையில், கற்றுக்கொள்வதற்கும் என்னை மேம்படுத்திக்கொள்வதற்கும், இங்குப் பெண்கள் அணியை உருவாக்குவதில் ஓர் அங்கமாக இருப்பதற்கு நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்,” என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
“ஆரம்பத்தில், இந்த விளையாட்டைப் புரிந்துகொள்வது எனக்குக் கடினமாக இருந்தது. ஆனால், பயிற்சியாளர்கள் மிகவும் பொறுமையாக இருந்து, எப்போதும் என்னை ஊக்கப்படுத்தினார்கள். அவர்களின் தொடர்ச்சியான ஆதரவாலும் வழிகாட்டுதலாலும் இப்போது நான் தன்னம்பிக்கையுடன் பயிற்சிக்குச் செல்கிறேன்,” என்றும் அவர் கூறினார்.
இறுதியாக, வேலைக்குச் செல்லும் பெண்களும் கல்லூரி மாணவிகளும் தங்களின் படிப்பிலும் வேலையிலும் மட்டும் கவனம் செலுத்தாமல், இது போன்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தித் தங்களின் திறமையை வெளிப்படுத்த வேண்டும் எனச் சங்கம் விரும்புகிறது.

