இரண்டாம் முறையாக நடைபெறும் ‘பெண்கள் திருவிழா’

வீட்டிலிருந்து தொழில்புரியும் பெண்களுக்கு தளம் அமைத்துத் தரும் நிகழ்ச்சி

இரண்டாம் முறையாக நடைபெறும் ‘பெண்கள் திருவிழா’

படம்: சைதா பீவி

30 Oct 2026 - 6:30 am

2 mins read

பெரும்பாலும் குடும்பப் பொறுப்புகளைச் சுமக்க வேண்டியிருப்பதால் தங்கள் தனிப்பட்ட மேம்பாட்டுக்கான வாய்ப்பைப் பெண்கள் சிலர் இழக்க நேர்கிறது.

இத்தகைய சூழலில், சவால்களைக் கடந்து, வீட்டிலிருந்தபடி தொழில் நடத்தும் பெண்கள் தங்கள் தொழிலில் மிளிர்வதற்கு ஒரு தளத்தை உருவாக்க ஷிஃப்ரா கிரியேஷன்ஸ் ‘பெண்கள் திருவிழா’ என்ற நிகழ்ச்சியை வரும் சனிக்கிழமை (அக்டோபர் 31) நடத்தவுள்ளது.

இவ்வாண்டு மே மாதம் 9ஆம் தேதி நடைபெற்ற ‘பெண்கள் திருவிழா’ நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 25 பேர் பங்கேற்று வாடிக்கையாளர்களை வரவேற்றனர்.
இவ்வாண்டு மே மாதம் 9ஆம் தேதி நடைபெற்ற ‘பெண்கள் திருவிழா’ நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 25 பேர் பங்கேற்று வாடிக்கையாளர்களை வரவேற்றனர். - படம்: சைதா பீவி

இவ்வாண்டு மே மாதம் 9ஆம் தேதி நடைபெற்ற அதன் முதல் நிகழ்ச்சியை, ஷிஃப்ரா கிரியேஷன்சின் நிறுவனரான சைதா பீவியும் அவரது கணவர் முஹம்மது கௌதும் இணைந்து, வீட்டிலிருந்தபடி தொழில் செய்துவரும் இந்திய முஸ்லிம் பெண்களுக்காக ஏற்பாடு செய்திருந்தனர்.

அதில் உணவு, உடை, அலங்காரப் பொருள்கள் போன்ற பல்வேறு தொழில்களைச் செய்வோர் ‘பாப்-அப்’ கடைகளை அமைக்க வாய்ப்பளிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 25 பேர் அதில் பங்கேற்று வாடிக்கையாளர்களை வரவேற்றனர். வரும் 31ஆம் தேதி நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 45 பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

“அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் இணையம் வழியாக மட்டுமே வணிகம் செய்து வந்தவர்கள். அவர்களில் பெரும்பாலானோர் முதன்முறையாக ‘பாப்-அப்’ கடைகளை அமைத்தனர். முதல் நிகழ்ச்சிக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, வாய்ப்பு கிடைக்காத பல பெண்கள் தாங்களும் இதில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் மீண்டும் ‘பெண்கள் திருவிழா’வை நடத்த முடிவுசெய்தோம்,” என்று கூறினார் சைதா பீவி, 41.

பெண்கள் முன்வந்து இதுபோன்ற தொழில்களைச் சிறப்பாக நடத்த வேண்டுமானால், அதற்கு அவர்களின் குடும்பத்தினரின் ஆதரவு மிகவும் அவசியம் என்ற அவர், தம் குடும்பத்தினரின் ஆதரவின்றி இரு நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்திருக்க முடியாது என்றும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்