சிங்கப்பூரில் 2023ஆம் ஆண்டு மணமுடித்த தம்பதியரின் எண்ணிக்கை, 2022ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3.7 விழுக்காடு சரிந்துள்ளதாக சிங்கப்பூர் புள்ளிவிவரத்துறை அறிக்கை தெரிவித்துள்ளது. அதேவேளை மணவிலக்கில் முடிந்த திருமணங்களின் எண்ணிக்கையும் சற்றே அதிகரித்துள்ளதாக அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இந்நிலை வருவதற்கான காரணங்கள் யாவை, இளம் தம்பதியர் எவ்வாறு தங்களுக்குள் புரிந்துணர்வை வளர்த்துக்கொள்ளலாம் என்பது குறித்து தமிழ் முரசு அறிந்துவந்தது.
திருமணங்கள் குறுகியகாலத்திலேயே ஒரு முடிவுக்கு வர, பரபரப்பான வாழ்க்கைச்சூழலும் குடும்ப வன்முறையும் முக்கியக் காரணங்களாக உள்ளன என்று கூறினார் மூத்த வழக்கறிஞர் திரு ராஜன் செட்டியார்.
இளம் தம்பதிகள் திறன்பேசியிலும் சமூக ஊடகங்களிலும் செலவிடும் நேரத்தைக்கூட திருமண வாழ்க்கையை வலுவாக்க ஒதுக்குவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
“சில இளையர்கள் நிதானத்தை எளிதில் இழந்துவிடுகிறார்கள். திருமண வாழ்க்கை சுமுகமாக இல்லாவிட்டால் ‘விவாகரத்து செய்துவிடலாம்’ என்று கூறிவிடுகின்றனர்,” எனக் குறிப்பிட்டார்.
இந்திய சமூகத்தினரைப் பொறுத்தவரை சில திருமண உறவுகளில் விரிசல் ஏற்பட, குடும்பத்தினரும் உறவினர்களும் காரணங்களாக இருப்பதாகத் தமது அனுபவத்திலிருந்து பகிர்ந்துகொண்டார் திரு ராஜன்.
திருமணத்திற்கு முந்தைய ‘டேட்டிங்’ நிலை வேறு, திருமண வாழ்க்கை என்பது வேறு என்று கூறிய திரு ராஜன், திருமண வாழ்க்கைக்கு ஆயத்தமாவது தொடர்பில் மேலும் அதிக ஆலோசனைத் திட்டங்கள் வழங்கப்படலாம் என்றார்.
திருமணம் என்பது...
“திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படும்போது பெரும்பாலானோர் ஆலோசனைக்காகச் சட்டச் சேவையை நாடுகின்றனர். குடும்பச் சேவை நிலையங்கள், தனியார் ஆலோசனை நிலையங்கள் ஆகியவற்றிடம் ஆதரவு தேவைப்படும் பட்சத்தில் இளையர்கள் ஆலோசனை பெறலாம். மணவாழ்வில் பிரச்சினை என்றால் முதல் படி விவாகரத்து அல்ல, ஆலோசனை பெறுவதே,” என்றார் திரு ராஜன்.
பிள்ளைகளைக் கவனிப்பது, வேலைக்குச் செல்வது என்று மட்டுமல்லாமல் தம்பதியர் தங்களுக்கென நேரம் ஒதுக்குவது மிகவும் அவசியம் என விவரித்தார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
திருமணமாகிக் குழந்தைகள் இருந்தால் மணவாழ்வில் பிரச்சினைகளைச் சந்திப்பவர்கள் சமரசத் தீர்வு பேச்சுவார்த்தைக்குச் செல்வது அவசியம் என்று குறிப்பிட்ட திரு ராஜன், தம் அனுபவத்தில் பத்தில் ஒன்பது பேர் இத்தகைய பேச்சுவார்த்தையின் மூலம் சுமுகமான தீர்வு பெற்றுள்ளனர் என்பதையும் காணமுடிவதாகச் சுட்டினார்.
“திருமணமான முதல் சில ஆண்டுகளிலேயே அந்த பந்தம் வேண்டாம் எனத் தோன்றத் துவங்கும்போது கவலையளிக்கும் சூழல்கள் உருவாகின்றன,” என்றார் திரு ராஜன்.
“மணவிலக்கு பெறும் இளையர்களைப் பொறுத்தமட்டில் தங்களின் குடும்ப விவகாரத்தை மூன்றாவது நபரிடம் சொல்லத் தயங்கும் மனநிலை இருப்பதை உணர முடிகிறது,” என்று சொன்ன வழக்கறிஞர், அவர்கள் சமரச பேச்சுவார்த்தைக்குச் செல்லத் தயங்கும் காரணங்களையும் விவரித்தார்.
“இளம் தம்பதியினரில் ஒரு தரப்பினர், ஆலோசனைச் சந்திப்புகள் உடனடி தீர்வாக நினைப்பதில்லை. காத்திருக்கவும் பொறுமை இல்லை. குறிப்பிட்ட சமரசப் பேச்சுவார்த்தைகள், மாதக்கணக்காகவோ ஆண்டுகணக்காகவோ கூட நீடிக்கலாம். எனவே, இத்தகைய ஆதரவைப் பெறுவதில் அதிகத் தயக்கம் காட்டுகின்றனர். ஆலோசனை பெறுவோர் அதற்குரிய நேரத்தைப் பயனுள்ளதாகக் கருதி ஒதுக்க முன்வர வேண்டும்.
“திருமணம் என்பது ஓர் உணர்வுபூர்வ முதலீடு. திருமண வாழ்க்கையை எளிதில் விட்டுக்கொடுத்துவிடக்கூடாது என்ற சிந்தனை அவசியம்,” என்று வலியுறுத்தினார் குடும்பநல வழக்கறிஞர் திரு ராஜன்.
குடும்ப ஆதரவு முக்கியம்
இளம் தம்பதியர் மணமுறிவை நாடாமல் பாதுகாத்திட குடும்ப ஆதரவு மிகவும் முக்கியம் என்பதைக் குறிபிட்டார் திரு ராஜன்.
“விவாகரத்துச் சூழலில் புகார் கூறும் தம்பதியினரின் உறவினர்கள் பெரும்பாலும் நடுநிலையுடன் இல்லாமல் அவரவர் தங்கள் பிள்ளைகளின் பக்கம் பேசுவதைக் காணமுடிகிறது. இது கவலைக்குரிய ஒன்று,” என்றும் சுட்டினார்.
“திருமண உறவில் இணைந்தபின் முதல் மூன்று ஆண்டுகள் மிகவும் கடினமானது என்பது பரவலாக நிலவும் கருத்து. அதையடுத்து, ஏழு முதல் பத்து ஆண்டுகளும் அதிக கவனத்தில் கொள்ள வேண்டி ஒரு காலகட்டம். அந்தக் காலகட்டத்தில் தம்பதியருக்குப் பொறுமை இல்லையென்றால் சவால் அதிகரித்துவிடும்,” என்றார் திரு ராஜன்.
திருமணத்திற்கு முன் ‘டேட்டிங்’ என்ற நிலையில் பொழிந்த அன்பு, திருமணத்திற்குப் பிறகு மறைந்துவிட்டதே என்பதைத் தம்பதிகள் சிந்தித்துப் பார்க்கவேண்டும் எனக் கோரினார்.
விவாகரத்து கோரும் தம்பதிகளுக்குப் பிள்ளைகள் இருந்தால் குடும்ப உறவு மேலும் பின்னடைவைச் சந்திக்கும் என எச்சரித்த திரு ராஜன், “குறிப்பிட்ட ஒருவர் மட்டும் உரிமை கொண்டாட, பிள்ளைகள் சொத்துகள் கிடையாது. பெற்றோரில் யாரேனும் ஒருவரின் அன்பைப் பிள்ளை இழக்க நேர்ந்தால் அவர்கள் சந்திக்கக்கூடிய பாதிப்பு என்ன என்பது குறித்து மணமுறிவை நோக்கிச் செல்லும் தம்பதியர் யோசிக்க வேண்டும் என்றும் திரு ராஜன் கேட்டுக்கொண்டார்.
தூக்கிப்போட்டுவிட முடியாது
காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்கள் பிரச்சினை ஏற்படும்போது காதலித்த நாள்களை நினைவுகூர்ந்து பார்க்க வேண்டும் என்றார் திரு ராஜன்.
“ஒருவர் தமது திருமணத்தை எளிதில் தூக்கிப்போட்டுவிட முடியாது. காதல் திருமணம் செய்தவர்கள் காதலித்த நாள்களை நினைத்துப் பார்க்க வேண்டும். மனம் தளர வேண்டாம் என்பதுதான் இளம் தம்பதிகளுக்கு நான் கூற விரும்புவது. நீங்கள் கடந்துவந்த அழகான நாள்களையும் சூழல்களையும் எண்ணிப்பார்த்தவாறே மணவாழ்க்கையில் தொடர்ந்து பயணம் செய்யுங்கள்,” என்று அறிவுறுத்தினார்.
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மணவிலக்கு பெறுவது தீர்வல்ல என்று குறிப்பிட்ட அவர், மணமுறிவுக்குப் பிந்தைய வாழ்க்கை எளிமையானதாக இருக்காது என்றும் சொன்னார்.
“மணவாழ்க்கையில் பிரச்சினைகள் கிளம்பினால் அவற்றில் கவனம் செலுத்தாமல் அமைதியாக இருக்காதீர்கள். திருமண வாழ்வு தடுமாறினால் உதவி நாடுங்கள். கணவன் மனைவி இடையே நிலவும் நல்லுறவு முதலில் அவரவர் மனப்போக்கில்தான் தொடங்குகிறது. எனவே, திருமணத்தை நிலைக்கச் செய்வதற்கான முயற்சியில் இறங்குங்கள்,” என அறைகூவல் விடுத்தார் திரு ராஜன்.
நீயா நானா அல்ல; நீயும் நானும்
மணவாழ்க்கை சில ஆண்டுகளிலேயே கசந்துவிடும் என்ற சிலரது எண்ணம், திரு அ.கி.வரதராஜன், திருமதி கிரிஜா வரதராஜன் தம்பதியரைச் சந்தித்தால் மாறலாம்.
அரை நூற்றாண்டு மணவாழ்வு சாத்தியமே என்பதைத் தங்களின் இல்லற வாழ்க்கை மூலம் உணர்த்தி வருகின்றனர் இந்தத் தம்பதியர்.
இவர்கள் 52 ஆண்டுகளாக மணவாழ்வில் இணைந்துள்ளனர். தங்களின் வலுவான திருமண வாழ்வுக்கு ரகசியத்தைக் கேட்டபோது, “கொஞ்சம் முயற்சி, கொஞ்சம் விட்டுக்கொடுத்தல், கொஞ்சம் புரிந்துணர்வு,” என்று பதிலளித்தார்கள்.
“திருமணமானது முதலே, மனைவியைக் காயப்படுத்த மாட்டேன், வன்முறையைக் கையாளமாட்டேன், புண்படுத்தும் சொற்களை நாடமாட்டேன் எனச் சில கொள்கைகளை வைத்திருந்தேன். பெரியோர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது எங்களது திருமணம். 1972ம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி இப்படி ஒரு பெண் இருக்கிறார் என்பதை அறிந்துகொண்டேன். அதே ஆண்டு ஜூன் 29ஆம் தேதி எங்களுக்குத் திருமணம் நடந்து முடிந்தது.
“பெண் பார்க்கச் செல்லும்போதே, சம்மதம் கூறிவிட்டுதான் அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று உறுதி கொண்டேன். எங்களது காதல் திருமணம் அல்ல. திருமணத்திற்கு பிறகு காதலித்தோம்,” என்று புன்னகையுடன் கூறினார் 79 வயது திரு வரதராஜன்.
சுயநலச் சிந்தனை வேண்டாம்
‘நான்’ என்ற நிலை மாறி ‘நாம்’ என்ற நிலையில் இருந்தவாறு திருமணமான தம்பதியர் தங்களின் இல்லற வாழ்க்கையில் ஈடுபட வேண்டும்.
“கணவன் மனைவி இருவரும் நாள் கணக்கில் பேசாமல் இருந்தால் பிரச்சினையைத் தொடர விடுவதாக ஆகிவிடும். இருவரிடத்திலும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை அவசியம். நீயா நானா என்ற போட்டி அல்ல, இது. நீயும் நானும். இதையே நான் பின்பற்றுகிறேன்,” என்று குறிப்பிட்டார் திரு வரதராஜன்.
“உனக்கு நான், எனக்கு நீ என்ற சிந்தனை தம்பதிகளிடையே இருக்க வேண்டும். சண்டை மூண்டாலும் தீர்க்க முடியாத பிரச்சினை என்று எதுவுமே இவ்வுலகில் இல்லை. எனவே, எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் இருவரும் ஒன்றிணைந்து அதை அணுக வேண்டும்,” என்றார் அவர்.
பிள்ளைகளுக்கு முன்னுதாரணம்
திருமண உறவு குறித்து பேசிய திருமதி கிரிஜா வரதராஜன், “அந்தக் காலகட்டத்தில் திருமண வாழ்க்கை பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகம் எனக்கு இல்லை. நண்பர்கள் எல்லாரும் திருமணம் செய்து கொண்டார்கள். நாமும் திருமணம் செய்துகொள்வோம் என்றுதான் இருந்தேன்,” என்றார்.
வலுவான திருமண உறவு, அன்பான குடும்பச் சூழல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அடுத்த தலைமுறைக்கு உணர்த்த வேண்டும் என்பதே திருமதி கிரிஜாவின் ஆசையாக இருந்தது.
“பிள்ளைகளுக்குச் சொல்லிப் புரிய வைப்பதைவிட நாமே அவர்களுக்கு வாழும் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். நாம் சொல்வதைக் கேட்டு பிள்ளைகள் வளர்வதில்லை. செய்வதைப் பார்த்துதான் வளர்கிறார்கள் என்பதைக் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்,” என்று குடும்ப உறவுகளின் மாண்பை விவரித்தார் திருமதி கிரிஜா, 72.
இளையர்கள் சிறுபிள்ளைகளாக இருந்தபோது அவர்களது பெற்றோர் அவர்களுக்கு கொடுத்த அன்பை, அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு திருப்பித்தர வேண்டும் எனவும் அவர் கூறினார்.
தங்களது உறவில் பொன்விழா கண்ட இந்த தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். எவ்வளவு வேலை இருந்தாலும் இரவு உணவு சாப்பிடும் நேரத்தில் அனைவருமே குடும்பமாக ஒன்றுகூடி உணவருந்தி நேரம் செலவழிப்பதை ஒரு சட்டமாகவே கடைபிடிப்பதாகத் தம்பதியர் கூறினர்.
இது குறித்து பேசிய திருமதி கிரிஜா, “அன்னையின் அன்பு தன்னிகரற்றது. தந்தை தரும் அரவணைப்பும் தனித்துவமானது. வேலைக்குச் சென்றாலும் தங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தைத் தம்பதியர் கருத்தில் கொண்டு, தங்களின் பிள்ளைகளுக்கு தங்களது நேரத்தையும் பாசத்தையும் வழங்க வேண்டும். இதற்காக கொஞ்ச காலம் வேலை அல்லது தொழிலில் இருந்து ஓய்வெடுப்பதுகூட தவறில்லை,” எனத் தாம் கருதுவதாகக் கூறினார்.
“குறைகளிலேயே கவனம் செலுத்துவது யாருக்கும் உதவாது. நிறைகளை எண்ணிப்பார்த்தவாறு உங்களின் திருமண வாழ்க்கையை அணுகுங்கள்,” என்று அறிவுறுத்தினார் திரு வரதராஜன்.

