பண்டைய தமிழ் இலக்கிய பாக்களான திருப்பாவையையும் திருவெம்பாவையையும் இறை அடியவர்கள் உகந்து மகிழும் இனிமை சொட்டும் மாதமாகத் திகழ்கிறது மார்கழி. ஒவ்வோர் ஆண்டும் சிங்கப்பூரில் பாவை பாட்டுகளைச் சார்ந்து நடத்தப்படும் நடவடிக்கைகளில் இளையர்கள் பங்கேற்று வருகின்றனர்.
வைணவ சமயத்தின் முதன்மை புனிதர்களான பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் என்ற சிறப்பைக் கொண்டுள்ள ஆண்டாள் அருளியது, திருப்பாவை. 30 பாடல்களைக் கொண்டுள்ள திருப்பாவையை திருமால் அடியார்கள் இன்றளவும் ஓதுவர். அதேபோல, சைவ சமயத்தோருக்கு 25 திருவெம்பாவை பாடல்களை மாணிக்கவாசகர் இயற்றியுள்ளார்.
நல்ல வாழ்க்கைத் துணைக்காக நோன்பு நோற்று பெண்களால் பாடப்பட்ட இந்தப் பாடல்கள், இறைவனை அடைவதற்காகவும் எப்பாலராலும் பாடப்படுகின்றன.
‘திருப்பாவை தீந்தமிழைப் பருகினோம்’
சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பாடத்தைப் பயிலும் அனுத்தம் முகுந்தன், 21, கடந்த மூன்று ஆண்டுகளில் திருப்பாவை சார்ந்த பணித்திட்டங்களைப் பற்றி ஆராய்ந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
ஆழ்வார்களின் பாடல்களைப் பெற்ற திவ்யதேசங்கள் எனும் ஆலயங்கள் பற்றிய திருப்பாவை குறிப்புகளைக் கண்டு அவை குறித்து உரையாற்றுவது, நாமா ஶ்ரீவைஷ்ணவ சத்சங்கத்தைச் சேர்ந்த அனுத்தமின் இந்த ஆண்டின் பணித்திட்டமாக இருந்தது. அத்துடன், இது பற்றிய காணொளி ஒன்றைத் தயாரித்த அனுத்தம், அதனைப் பதிவு செய்வதற்கு திருப்பதி வரை சென்றார்.
“அங்கண் மாஞாலத்து என்று தொடங்கும் திருப்பாவையின் 22ஆவது பாசுரத்தை இந்த முறை ஆராய்ந்தேன். அழகர் கோயில் எனப் பிரபலமாக அறியப்படும் திருமாலிருஞ்சோலைப் பற்றிய அந்தப் பாடல் தொடர்பான விரிவுகளையும் கேட்டதுடன் கட்டுரைகளையும் படித்தேன். பாவைப் பாடல்களுக்குப் பல்வேறு பொருள்களை அறிஞர்கள் விளக்குவதைக் கேட்கும்போது தமிழின் செழுமையை என்னால் மேலும் உணர முடிந்தது,” என்றார் அனுத்தம்.
திருப்பாவையின் ஆய்வில் ஈடுபட்ட மற்றொரு மாணவரான ஸ்ரீகேஷவ் ஸ்ரீமான் கிடாம்பி, 11,
தொடர்புடைய செய்திகள்
மாதங்களில் சிறந்ததாகக் கருதப்படும் மார்கழிக்காக தாமும் தம் நண்பர்களும் ஆவலுடன் காத்திருப்பதாகக் கூறுகிறார்.
ஆளுக்கொரு பாடல்களைத் தேர்ந்தெடுத்து அதைத் தீர ஆராய்ந்தபின் அந்தப் பாடலைப் பற்றி பல கோணங்களில் சிந்தித்து அதை விளக்கும் காணொளி ஒன்றைத் தயாரித்து யூடியூப் தளத்தில் அண்மையில் வெளியிட்டதாக ஸ்ரீகேஷவ் தெரிவித்தார்.
“பல பொருள் கொண்டுள்ள ஒரே சொல்லையும் ஒரே சொல்லுக்கான பல பொருள்களையும் ஆண்டாளின் கவிநயம் மிகுந்த பாடல்களின்மூலம் கற்றேன்,” என்று ஸ்ரீகேஷவ் கூறினார்.
‘திருவெம்பாவை தேனமுதைச் சுவைத்தோம்’
சிவபெருமானைப் போற்றும் திருவெம்பாவையை ஓதியும் ஆராய்ந்தும் பயன் பெற்றார் டன்மன் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த குமரவேலு கமலசிவானி, 15.
ஹவ்காங்கில் வசிக்கும் சிவானி, மார்கழி மாதத்தின்போது ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுந்து ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயிலுக்குச் சென்று திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சியைப் பாடி மகிழ்ச்சி காண்கிறார்.
அக்கோயிலில் கடந்த ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி நடைபெற்ற பாவை விழாவிலும் இவர் பங்கேற்றார்.
“பாவை விழாவுக்காக திருவெம்பாவை பாட்டு ஒன்றைக் கற்று அதற்கான விளக்கத்தைப் பார்வையாளர்களிடம் விளக்கவேண்டும்,” என்று அவர் கூறினார்.
நல்ல வாழ்க்கைத் துணையின் முக்கியத்துவத்தை வலியுறுத்த, பாவை நோன்பு மேற்கொள்ளப்பட்ட பண்பாட்டை பாவை பாடல்கள் மூலம் தெரிந்துகொண்டதாக சிவானி கூறுகிறார்.
திருவெம்பாவை பொருள்செறிவைக் கற்றுணர்ந்த சிவானி, ‘ஒண்ணித் திலநகையாய்’ என்ற நான்காவது பாட்டில் கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே என்ற வரி, காலத்தின் மதிப்பைக் காட்டி அதைப் பயனுள்ளதாக்க வேண்டும் என்ற படிப்பினையை உணர்த்துவதாகக் கூறினார்.
“எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க என்ற வரி, இறை அர்ப்பணிப்பின் உச்சத்தைக் காட்டுவதால் அதுவும் என் மனதை நெகிழ வைக்கிறது,” என்றும் அவர் கூறுகிறார்.