வாழ்க்கையைப் புரட்டிப் போடும் மாற்றங்கள் அசுர வேகத்தில் நடப்பதில்லை. அமைதியாய்த் தொடங்கி, மெதுவாய்ப் படர்ந்து, காலப்போக்கில் இன்றியமையாத் தேவையாய், நடைமுறை வாழ்க்கையாய் மாறும். அறிவியல் முன்னேற்றத்தின் புது விளிம்பில் உலகம் இப்போது உள்ளது.
கடந்த நூற்றைம்பது ஆண்டுகளுக்குள்ளாக வாழ்க்கையை மாற்றிய அறிவியல் கண்டுபிடிப்புகளை நினைவுகூர்ந்தால், வானொலி, தொலைக்காட்சி, விமானம், கணினி, இணையம், கைப்பேசி, மின்வணிகம், வங்கிச் சேவைகள் என பல மனத்தில் தோன்றலாம். 2025ஆம் ஆண்டு, முக்கிய மாற்றங்களுக்கு ஒரு திருப்புமுனை ஆண்டாக அமையும் என்பது பல வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள், எதிர்காலவியலாளர்களின் கருத்து.
இதில் முதன்மையாகப் பேசப்படுவது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence). சில ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமான செயற்கை நுண்ணறிவு, இணையத்திலும், மெய்நிகர்ப் பயன்பாடுகளிலும், வரையறுக்கப்பட்ட விதத்தில் இயங்கி வந்து, தற்போது ஆக்கமுறைச் செயற்கை நுண்ணறிவாக (Generative AI) மாறியிருக்கிறது. நம் தேவைக்கேற்ப, நாம் கேட்டுக்கொள்வதன்படி, நமக்கு வேண்டியதை கொணர்ந்துதரும் ஆற்றல் வாய்ந்தது இத்தொழில்நுட்பம்.
செயற்கை நுண்ணறிவைவிட, பேரளவுத் தரவுகளைக் கொண்டு, ஒருவகையான உள்ளுணர்வுத்தன்மையோடு எழுத்து, உள்ளடக்கம், படம், இசை, காணொளி, வசனம் எனப் பன்முகப் படைப்புகளை வழங்கக்கூடிய திறன் வாய்ந்த ஆக்கமுறைச் செயற்கை நுண்ணறிவு, இவ்வாண்டில், நம் அன்றாட வாழ்வின் பல பகுதிகளிலும் ஊடுருவும்.
மாணவர்களின் கல்விப் பயணத்தில் Chat-GPT, Gemini, Copilot போன்ற மேலும் பல செயற்கை நுண்ணறிவுத் தளங்கள் கற்கவும் தங்களின் படைப்புகளை மேம்படுத்தவும் உதவத் தொடங்கிவிட்டன. மாணவர்கள் பாடங்களைச் சரிவரக் கற்றுக்கொள்கிறார்களா என்பதில் ஆசிரியர்கள் சில சவால்களை எதிர்நோக்கினாலும், இப்புதிய அலையை நிறுத்தமுடியாது என்பதை அறிந்து, அதனை ஒரு நற்கருவியாகப் பயன்படுத்தவேண்டும் என்பதை அனைவரும் உணர்ந்து வருகின்றனர்.
நோயறிதல் துல்லியத்தை மேம்படுத்துதல்; சிகிச்சைத் திட்டங்களை அவரவர்களுக்கேற்ப தனிப்பயனாக்குதல்; மருத்துவ நிர்வாகச் செயல்முறைகளை நெறிப்படுத்துதல் என்று நோயாளிப் பராமரிப்பிலும் மருத்துவ ஆராய்ச்சியிலும் செயற்கை நுண்ணறிவு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் உதவியுடன் பல்லாயிரக்கணக்கான மருத்துவத் தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதன்மூலம் மருத்துவர்கள் பல தீரா நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றக்கூடியத் திறனைப் பெறுவார்கள்.
சிங்கப்பூர் கடந்த பல ஆண்டுகளாகவே ஊக்குவித்து வரும் தொலைமருத்துவம் (Telehealth) போன்ற திட்டங்கள், மூப்படைந்துவரும் மக்கட்தொகைக்கு பக்கபலமாய் உள்ளன. கடந்த சில ஆண்டுகளில், தொலைமருத்துவச் சேவை ஏறக்குறைய ஆண்டிற்கு 150 விழுக்காடு வளர்ச்சி கண்டிருக்கிறது. இவ்வாண்டில் இதுபோன்றச் சேவைகள் மேலும் வளர்ச்சிகண்டு, நடைமுறையாகலாம்.
சமூக ஊடகத் தளங்களில் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைப்பது சவால்களையும் வாய்ப்புகளையும் வழங்கும். தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தைக் கண்டறிந்து குறைக்க செயற்கை நுண்ணறிவு உதவ முடியும் என்றாலும், தவறான தகவல்களின் பெருக்கம் குறிப்பிடத்தக்க எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம்.
தொடர்புடைய செய்திகள்
மின்சார வாகனங்கள் (Electric Vehicle) இவ்வாண்டில் மேலும் பிரபலமாகும். கடந்த இரு ஆண்டுகளிலேயே ஏறத்தாழ 10,000 வாகனங்கள் விற்கப்பட்டுவிட்டன. வாகன மின்னூட்ட வசதிகள் பெருகப் பெருக, இவ்வாகனங்களின் எண்ணிக்கை வெகுவாகக் கூடும் என்பதில் ஐயமில்லை. சிங்கப்பூரின் நீடித்த நிலைத்தன்மை இலக்குகளை எட்டுவதற்கு அரசாங்கம் பல வழிகளில் முயன்று வருகிறது. தற்போது 16,000 ஆக உள்ள வாகன மின்னூட்ட வசதிகள் 2030க்குள் 60,000ஐ எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், கைப்பேசிகளின் திறன் பன்மடங்கு மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 6G அலை கட்டமைப்பிற்காகப் பல நாடுகள் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன. குவாண்டம் (Quantum) அறிவியல் தொழில்நுட்பத்தின்வழி இயங்கும் கணினி, மருத்துவக் கருவிகள் உள்ளிட்டவை இவ்வாண்டு வெகுவாகச் செயலாக்கம் காணும் என நம்பப்படுகிறது.
மொத்தத்தில், இவ்வாண்டில் செயற்கை நுண்ணறிவு அன்றாடப் பயன்பாடாய் மாறிவிடும், சமூக ஊடகங்கள் நமக்கென்றே தகவல்களைத் தாங்கிவரும். தொலைக்காட்சியில் உகந்த நேரத்தில் பிடித்த நிகழ்ச்சிகளைக் காணலாம். ஆளில்லா வானூர்தி மூலம் உணவு நம் இடத்தை வந்தடையலாம்.
இம்மாற்றங்களை வரவேற்று, நமது வசதிகளுக்குப் பயன்படுத்திக் கொள்வதே உத்தமம். உலகோடு ஒத்து வாழ்வோம், எதிர்காலத்தை நோக்கிப் பயணம் செய்வோம்.

