சிங்கப்பூரையும் உலகையும் புதியதொரு எதிர்காலத்தை நோக்கி நகர்த்தியுள்ளது இந்த ஆண்டு.திரும்பிப் பார்த்தால், அமைதியாக இடம்பெற்றிருக்கும் திருப்பங்கள் புருவம் உயர்த்த வைக்கும்.
நன்கு திட்டமிடப்பட்டு ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூரின் ஆட்சிப் பொறுப்பு நான்காம் தலைமுறையிடம் ஒப்படைக்கப்பட்டது. மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கிடமிருந்து நாட்டின் தலைவராகவும் ஆளும் மக்கள் செயல் கட்சியின் தலைமைச் செயலாளராகவும் தலைமை ஏற்றுள்ள 52 வயது லாரன்ஸ் வோங்,தோளில் கைபோட்டு நட்பாக வழிநடத்துபவர்.
முதல்தர நாடாக வளர்ந்துவிட்ட சிங்கப்பூருக்கு ஏற்ப கல்வி முறையில் மாற்றங்கள், ஒரு விழுக்காட்டுக்கும் கீழே குறைந்துவிட்ட பிறப்பு விகித்தை உயர்த்தத் திட்டங்கள், வேலையில்லாதோருக்கு நிதியுதவி என்று சமூக உதவியில் அதிக கவனம்.
தொடர் பொருளியல் வளர்ச்சிக்கு வெளிநாடுகளின் பங்காளித்துவத்தையும் வெளிநாட்டினரின் வருகையையும் ஊக்குவிக்கும் அதேவேளையில், சிங்கப்பூரின் செழிப்பையும் வசதி வாய்ப்புகளையும் அவர்கள் தவறாகப் பயன்படுத்தாமல் இருக்க கடுமையான சட்ட வளையங்கள்.
முன்னோக்கிய பார்வையுடன் முன்னோக்கிச் செல்ல வழியமைக்கிறது புதிய தலைமைத்துவம்.
கிழக்கு- மேற்கு ரயில் போக்குவரத்து பாதிப்பு, இணைய பாதிப்பு, அடையாள அட்டை எண் பயன்பாடு குறித்த சர்ச்சை என்று எதிர்மறையான விஷயங்களையும் இந்த ஆண்டில் நாடு எதிர்கொண்டது.
உலகமும் இவ்வாண்டு பல மாறுதல்களைச் சந்தித்தது.
இந்தியா, இந்தோனீசியா, பிரான்ஸ், பிரிட்டன், தென்னாப்பிரிக்கா என்று 60க்கும் மேற்பட்ட நாடுகள் தேர்தல்களைச் சந்தித்தன. வேட்பாளர் மாற்றம் முதல் அமெரிக்காவில் படுகொலை முயற்சிகள் வரை, மகத்தான தேர்தல்கள், அரசியல் மாற்றங்களை 2024 கண்டது. உரிமைகளை அறிந்து மாற்றங்களைக் கோரிய வாக்காளர்களால் பல நாடுகளில் தலைகீழான திருப்பங்கள் இடம்பெற்றுள்ளன. இலங்கையில் எல்லா இன மக்களும் சேர்ந்து இடதுசாரி அரசியல் தலைமைத்துவத்தைத் தேர்வு செய்தது, பங்ளாதேஷில் இளையர் புரட்சி கொண்டுவந்த ஆட்சிக் கவிழ்ப்பு, பிரான்சில் அரசாங்கம் கவிழ்ந்தது, டிரம்ப் மீண்டும் வெற்றிபெற்றிருப்பது என்று ஆராய்ந்து பார்த்தால், அவை மெல்ல ஏற்பட்டிருக்கும் சிந்தாந்த, சிந்தனை மாற்றம் என்பது புரியும்.
தொடர்புடைய செய்திகள்
பல கணிப்புகளையும் ஆய்வுகளையும் மீறி, உலகப் பொருளியல் மந்தநிலைக்குச் செல்லாமல் மேலேறிச் சென்றது நிம்மதியைத் தந்தது. பணவீக்கமும் வேலையிழப்பும் உள்ளூரிலும் அனைத்துலக அளவிலும் தொடர்ந்தாலும் மறுபக்கம் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகின.
ரஷ்யா -உக்ரேன், இஸ்ரேல் -பாலஸ்தீனப் போர்கள் உக்கிரமாகி, ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியான நிலையில், சமாதானத்தையும் அமைதியையும் ஏற்படுத்த மற்ற நாடுகளும் உலக அமைப்புகளும் தீவிரமான முயற்சிகளை எடுத்தன. விரைவில் தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கையை ஆண்டிறுதி ஏற்படுத்தியுள்ளது.
உலக ஒற்றுமையை வெளிப்படுத்திய தருணங்களாக பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டும் உலக கூட்டமைப்புகளின் கூட்டங்களும் அமைந்தன.
மின்னிலக்கமும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமும் பல மடங்கு முன்னேற்றத்தையும் வசதியையும் ஏற்படுத்தின. எடுத்துக்காட்டாக, சிங்கப்பூரில் கடப்பிதழ் இல்லாத பயணம், எளிதாக்கப்பட்ட சோதனைச் சாவடி சோதனை முறைகள், கியூஆர் குறியீடு பயன்பாடு என்று பயணங்கள் எளிதாகின.
அதேபோல, இணைய மோசடிகளும் அச்சுறுத்தல்களும் கோளாறுகளும் உலக நாடுகளை ஆட்டிப்படைத்து விட்டன. மோசடிகளால் பில்லியன் கணக்கான பண இழப்பு, செயல் இழப்பு என்று வளர வளர விழிப்புணர்வும் அதிகரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது இந்த ஆண்டு.
எல்லாவற்றையும் தாண்டி, இந்த ஆண்டில் உலக மக்களை முழுமையாக ஆட்கொண்டவை விலைவாசி ஏற்றமும் பருவநிலை மாற்றமும். இனிமேல் இப்படித்தானா என்ற அச்சத்தையும் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற விழிப்பையும் இவை ஏற்படுத்தியுள்ளன.
வெப்பநிலையும் மழைப்பொழிவும் பல நாடுகளில் இதுவரை இல்லாத உச்சத்தை பல முறை எட்டின. இந்த ஆண்டு சிங்கப்பூர், ஆக அதிகமாக 122 அதிக வெப்பமான நாள்களைக் கண்டிருப்பதாக அண்மைய ஆய்வு தெரிவிக்கிறது. வெயில், பனி, மழை, வெள்ளம் எல்லாம் தாறுமாறாக வந்ததால் ஏராள மக்கள் பாதிக்கப்பட்டனர். உயிரிழப்பு, உடமைகள் இழப்புகள் அதிகமாகின. காலநிலை காலை வாரியதால் வேளாண்மை பெரும் பாதிப்படைந்தது.
மொத்தத்தில் இந்த ஆண்டு விழிப்புணர்வையும் படிப்பினையையும் விதைத்துள்ள வேளையில், அதை ஏற்று நடத்த புதிய தலைமுறை தயாராக உள்ளது என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
ஆண்டு விடைபெற்றாலும், இவ்வாண்டின் நிகழ்வுகளின் விளைவுகள் தொடரும். அடுத்த ஆண்டின் போக்கை நிர்ணயிக்கும். போர் களைந்து, பூசல்கள் நீங்கி, தனி மனிதரும் உலக நாடுகளும் வாழும் சூழலில் அக்கறையுள்ளவர்களாகி புதியதோர் உலகத்தைப் புதிய ஆண்டு உருவாக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த ஆண்டுக்கு விடைகொடுப்போம். இனியதோர் ஆண்டை வரவேற்போம்!