உலகம் அமைதிக்காகக் குரல்கொடுக்கும் நேரத்தில் ஆசியான் உச்சநிலை மாநாடு நடந்துமுடிந்திருக்கிறது. காஸாவில் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையிலும் தொடரும் தாக்குதல்கள், ரஷ்ய-உக்ரேனியப் போர், அமெரிக்க-சீன வர்த்தகப் பூசல் போன்ற சூழலுக்கு இடையில்தான் 47வது ஆசியான் உச்சநிலை மாநாடு (அக்டோபர் 26-28) கோலாலம்பூரில் தொடங்கியது.
சிங்கப்பூரைப் பொறுத்தவரை, ஆசியான் மாநாட்டில் கணிசமான அனுகூலங்கள் கிடைத்துள்ளன. பிரதமர் லாரன்ஸ் வோங் பல நாடுகளின் தலைவர்களோடு உறவுகளைப் புதுப்பித்துக்கொண்டார். எரிசக்தி, பசுமைப் பொருளியல், மின்னிலக்கத் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் சேர்ந்து பணியாற்ற இணக்கம் எட்டப்பட்டது.
ஆசியான் மின்னிலக்கப் பொருளியல் கட்டமைப்பு உடன்பாடு, ஆசியான் பொருள் வர்த்தக உடன்பாடு உட்பட பல்வேறு அம்சங்களில் முன்னேற்றம் காணப்பட்டதையும் திரு வோங் சுட்டினார். பிரேசில், கனடா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுடன் ஆசியான் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டதை அவர் மெச்சினார்.
ஆசியான் தலைவர்கள், முன்னெப்போதையும்விட இப்போது அதிக ஒற்றுமையோடு செயல்படவேண்டியதன் அவசியத்தைத் தெளிவாய்ப் புரிந்துகொண்டிருப்பதாகப் பிரதமர் சொன்னார். உலகில் நிலவும் நிச்சயமற்ற சூழலில், பல கருமேகங்களுக்கு இடையே அது மின்னல் கீற்றைப் போல் நம்பிக்கையொளியைத் தருவதாக அவர் குறிப்பிட்டார்.
ஆசியான்-இந்தியா மாநாட்டில் பேசியபோது, ஆசியான் நாடுகள் அனைத்திற்கும் இந்தியா நேரடி விமானச் சேவைகளை வழங்க ஆவன செய்யவேண்டும் என்று திரு வோங் கேட்டுக்கொண்டார். இதன்வழி ஆசியாவில் வேகமாக வளர்ந்துவரும் இந்தியாவின் முன்னேற்றத்தில் ஆசியானும் பங்குவகிக்கும் வாய்ப்புகள் கூடும்.
மலேசியா, ஆசியான் மாநாட்டை வெற்றியாகக் கருதுகிறது. அதற்கு மூன்று முக்கியக் காரணங்கள். முதலாவது, அமெரிக்கா விதித்த குறைவான வரிகளை உறுதிசெய்ய அதனுடன் உடன்பாட்டைச் செய்துகொண்டதில் வட்டாரத்திற்கு முன்னோடியாக இருந்தது கோலாலம்பூர்.
இரண்டாவது, கம்போடிய-தாய்லாந்துப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதில் அமெரிக்கா தலையிட்டாலும் அதை முன்னெடுத்தது, வழிநடத்தியது, சுமூகமாக முடித்துவைத்தது எல்லாமே மலேசியாதான்.
மூன்றாவதாக ஆசியானின் பதினோராவது உறுப்பு நாடாகத் திமோர் லெஸ்டேயை இணைத்துக்கொண்டது. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை ஆசியானுக்கு வரவைத்ததற்காக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமை நிச்சயம் பாராட்ட வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
மாநாட்டில், பலரின் கவனத்தை ஈர்த்தவர் அதிபர் டிரம்ப். மலேசிய மண்ணில் கால் வைத்ததும் ஆடிப்பாடி வரவேற்ற குழுவினருடன் அவரும் ஆடினார். கோலாலம்பூரில் இப்படிக் கோலாகலமாக ஆரம்பித்தது திரு டிரம்ப்பின் ஆசியப் பயணம்.
திரு டிரம்ப், 2017ல் பிலிப்பீன்சில் நடைபெற்ற ஆசியான் மாநாட்டில் கலந்துகொண்டிருந்தபோதும் இம்முறை பங்கேற்றதற்குத் தனிப்பட்ட காரணம் உண்டு.
இரண்டாம் தவணை அதிபரான பிறகு, அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்றவர், மற்ற வட்டாரங்களின் மீது பாராமுகமாக இருந்தார். சீனாவுடன் ஏற்பட்ட வர்த்தகப் போட்டாப்போட்டி உச்சத்தை எட்டியது. அதனை எதிர்கொள்ள வளங்கள் நிறைந்த மற்ற வட்டாரங்களின் ஆதரவு தேவை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது அமெரிக்கா. இந்நிலையில்தான் திரு டிரம்ப்பின் கவனம் ஆசியானின் பக்கம் திரும்பியிருக்கிறது.
கம்போடிய-தாய்லாந்துப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவந்ததில் திரு டிரம்ப்புக்கு முக்கியப் பங்கிருந்தது. இரு தரப்பும் சண்டை நிறுத்தத்திற்கு இணங்கவில்லை என்றால் ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த தீர்வைகள் அதிகரிக்கப்படும் என்று அவர் மிரட்டினார். இரு தரப்பும் போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்புக்கொண்டன. போரை நான்தான் நிறுத்தினேன் என்று பறைசாற்றினார் திரு டிரம்ப்.
அமெரிக்க அதிபர் அவரின் இலக்கில் குறியாக இருந்தார். கம்போடியா, தாய்லாந்து, மலேசியா, வியட்னாம் ஆகிய நாடுகளுடன் முக்கிய இரு தரப்பு ஒப்பந்தங்களைச் செய்துகொண்டார். இதன் மூலம் வட்டாரக் கட்டமைப்பை ஓரங்கட்டிவிட்டதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். அமெரிக்கா அதன் நிலையை மறுஉறுதிப்படுத்திக்கொண்டது ஆசியான் வழியாகத்தானே தவிர, ஆசியானுடன் அல்ல என்பது அவர்களின் வாதம். இன்னொரு புறம், திரு டிரம்ப்புக்குக் கோலாலம்பூர் அளித்த வரவேற்பையும் உபசரிப்பையும் சிலர் குறைகூறினர்.
ஆசியானுக்குச் சிக்கல் தரும் விவகாரங்கள் இரண்டு. ஒன்று தென்சீனக் கடல். அதன் சர்ச்சைக்குரிய சில பகுதிகளுக்குத் தொடரும் உரிமைப் போராட்டம். அதனால் அவ்வப்போது நிலவும் பதற்றம். மற்றொன்று மியன்மார். 2021ல் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து அங்கு அமைதியில்லை. ஆசியான் எவ்வளவு முயன்றும் அசைந்துகொடுக்க மறுக்கிறது மியன்மார். டிசம்பர் இறுதியில் தேர்தல் நடத்தப்போவதாக அது அறிவித்துள்ளது. தேர்தல் நியாயமான முறையில் நடத்தப்படுமா என்பதில் ஆசியானுக்கு ஐயம். ஆனாலும் அது நம்பிக்கையோடு இருக்கிறது.
இவ்வாறு பல அரசியல், பொருளியல் சவால்களுக்கு இடையில் ஆசியானின் அடுத்த தலைமைத்துவத்தை ஏற்றுள்ளது பிலிப்பீன்ஸ். அதன் தலைமைத்துவத்தின்கீழ் ஆசியான் நாடுகளுக்கு இடையில் ஒத்துழைப்பு மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கலாம்.
ஆசியான், உருவாக்கியுள்ள கட்டமைப்புகளைக் கொள்கைகளாக்க வேண்டும். சொல்வதைச் செய்யவேண்டும். நடைமுறைப்படுத்தும்போதுதான் நம்பகத்தன்மை கூடும்.
ஆசியானுக்குள் பொருளியல்களை மேலும் ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுப்பது அவசியம். ஒற்றுமையோடு செயல்பட்டால் முடியும்.
தனிமரம் தோப்பாகாது. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. இவை நமக்கும் தெரியும், தலைவர்களுக்கும் தெரியும். முனைப்புடன் செயல்பட்டால் அனைவருக்கும் வெற்றி நிச்சயம்.

