இணையப் பாதுகாப்பில் விழிப்புணர்வே நமது கவசம்

இணையப் பாதுகாப்பில் விழிப்புணர்வே நமது கவசம்

படம்: ராய்ட்டர்ஸ்

15 Nov 2026 - 6:15 am

3 mins read

அண்மை வாரங்களில் இணையத் தாக்குதல்கள் அன்றாடச் சம்பவமாகி வருகின்றன.

அவற்றின்மூலம் கசிந்த பெயர்கள், தொடர்பு எண்கள், மின்னஞ்சல் முகவரிகள், அடையாள அட்டை விவரங்கள் போன்றவை மோசடிக்காரர்களுக்குப் பெரும்புதையலாக அமைகின்றன. தனிநபர் விவரங்களின்வழி செயற்கை நுண்ணறிவின் துணையுடன் நம்பத்தகுந்த வகையில் தகவல் மோசடிக்கான இணைய முயற்சிகளைச் சிலர் மேற்கொள்கின்றனர்.

அதிகாரபூர்வ அமைப்புகளிடமிருந்தோ அல்லது நமக்குத் தெரிந்தவர்களிடமிருந்தோ வருவதுபோல் நம்பகமான தகவலைப்போல் ஏமாற்றும் இத்தகைய செய்திகள், மிகுந்த விழிப்புணர்வுடன் இருப்பவர்களைக்கூட நிலைதடுமாறச் செய்துவிடும்.

இந்தத் தரவுக்கசிவுகள் ஒன்றோடொன்று தொடர்புடைய கூட்டுச்சதியாக இல்லாமல், சந்தர்ப்பவாதத் தாக்குதல்களின் எதிரொலியாகவே காணப்படுகின்றன எனச் சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பும் தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையமும் தெரிவித்துள்ளன.

இருப்பினும், முந்தைய தாக்குதல்களுக்கும் தற்போதைய தாக்குதல்களுக்கும் இடையே ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. அதுதான் செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம். கணினிக் கட்டமைப்புகளில் உள்ள மிக நுண்ணியப் பாதுகாப்பு ஓட்டைகளையும் பலவீனங்களையும் செயற்கை நுண்ணறிவு அதிவேகமாகக் கண்டறிந்து, இணைய ஊடுருவிகளை எளிதாக உள்நுழையச் செய்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சி இணைய ஊடுருவலை எளிதாக்கியுள்ளது என்பதையே இந்நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

நிறுவனங்களும் அரசாங்க அமைப்புகளும் தங்களின் கணினிப் பாதுகாப்பு அரண்களை வலுப்படுத்திவரும் அதே வேளையில், நாம் நமது அன்றாட மின்னிலக்கப் பழக்கவழக்கங்களின் மூலமே உண்மையான பாதுகாப்பை அடைய முடியும். அறிவார்ந்த தேசமாக நாம் வளர்ந்துவரும் அதே நிலையில், இணையப் பாதுகாப்பையும் மனத்தில் நிறுத்திச் செயல்பட வேண்டும்.

அறிமுகமில்லாத அல்லது எதிர்பாராத மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், தொலைபேசி அழைப்புகளை மிகுந்த சந்தேகக் கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும். அவை அரசாங்க அமைப்புகளிலிருந்தோ வங்கிகளிலிருந்தோ வருவதுபோல் தோன்றினாலும் எளிதில் நம்பிவிட வேண்டிய அவசியமில்லை.

சந்தேகத்திற்குரிய இணைய இணைப்புகளைச் சொடுக்குவது, எதிர்பாராத கோப்புகளைப் பதிவிறக்கம் செய்வது போன்ற செயல்களை முற்றிலுமாகத் தவிர்ப்பது அவசியம். ஏதேனும் வழக்கத்திற்கு மாறான கோரிக்கைகளோ, பொட்டல விநியோகத் தகவல்களோ வந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரப்பூர்வத் தளங்கள் மூலம் அவற்றை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

கடவுச்சொற்கள், ஒருமுறை பயன்படுத்தும் மறையெண்கள் (OTP), வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவற்றை எக்காரணம் கொண்டும் தொலைபேசி அழைப்புகள் மூலமாகவோ குறுஞ்செய்திகள் மூலமாகவோ பகிரக்கூடாது. மேலும், வங்கிக் கணக்குகள், முக்கியச் செயலிகளில் பன்முக அங்கீகார முறையை (Multi-Factor Authentication) கட்டாயம் செயல்படுத்துவதோடு, பொது இடங்களில் உள்ள பாதுகாப்பற்ற இலவச இணையச் சேவையைப் பயன்படுத்தி முக்கியப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.

இணைய ஊடுருவிகளைத் தடுத்து நிறுத்துவது என்பது அரசாங்கத்தாலோ நிறுவனங்களாலோ மட்டும் தனித்துச் சாதிக்கக்கூடிய செயலன்று. நிறுவனங்கள் தங்களின் மென்பொருள்களின் பாதுகாப்புத் தரநிலைகளைக் கண்காணிக்க வேண்டும். அதே வேளையில், பொதுமக்களாகிய நாம் எளிதில் ஏமாறாமல், மோசடிக்காரர்களின் வலையில் வீழாமல் இருப்பதே அவர்களின் முயற்சிகளை முறியடிக்கும் சிறந்த வழியாகும்.

எதிர்காலத்தைப் பொறுத்தவரை, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மேலும் வளர்ச்சியடையவே செய்யும். இணையப் பாதுகாப்பு என்பது ஊடுருவிகளுக்கும் பாதுகாப்பு அமைப்புகளுக்கும் இடையிலான ஒரு தொடரோட்டமாகவே இருக்கப்போகிறது. அவ்வாறு நடக்குமா என்பது கேள்வியன்று. எப்போதும் நடக்கலாம் என்பதே உண்மை.

செயற்கை நுண்ணறிவின்மூலம் அடையும் தொழில்நுட்ப வளர்ச்சியை நம் வாழ்க்கைக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டாலும், நாடும் நிறுவனங்களும் நாமும் விழிப்போடு செயல்படுவோம். மாறிவரும் வாழ்க்கையைப் பாதுகாப்புடன் எதிர்கொள்வோம்.

குறிப்புச் சொற்கள்