மரபைப் போற்றுவோம், மாண்போடு வாழ்வோம்

3 mins read
1f4bf516-fd69-4106-a79f-78831474acde
ஜோதி ஸ்டோர் புஷ்பக் கடையின் ரெகுநாத் சிவா (வலது), ருமா மக்கான் மினாங் உணவகத்தின் முகம்மது ஹாஸ்மி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஓர் இனத்திற்கு, ஒரு நாட்டிற்குத் தனித்த அடையாளத்தைப் பெற்றுத் தருவதில் அதன் மரபு, பண்பாடு, கலை போன்றவற்றுக்குப் பெரும் பங்குண்டு.

மரபையும் பண்பாட்டையும் வெறும் வழக்கமாகக் கருதிவிட முடியாது. அது வழிவழியாகப் படிமலர்ச்சி பெற்று, மனிதகுலம் செழிக்கவும் நிலைபெறவும் அடிப்படையாக விளங்கிவரும் வாழ்க்கைமுறை.

இத்தகைய பெருமையும் சிறப்பும் இருந்தாலும், நவீன அறிவியல் தொழில்நுட்பங்களால் நாளுக்குநாள் மாறிவரும் உலகிலும் பெருநிறுவனங்கள் தங்கள் இருப்பை விரிவுபடுத்திவரும் சூழலிலும் மரபார்ந்த தொழில்களை, வணிகங்களைத் தொடர்ந்து நீடித்திருக்கச் செய்வதென்பது எளிதான செயலன்று.

அதனை உணர்ந்துள்ள சிங்கப்பூர் அரசாங்கம், சிங்கப்பூரின் பண்பாட்டு அடையாளத்தையும் மரபுடைமையையும் பாதுகாத்து, பரந்த மரபுடைமைச் சூழலுக்கு ஆதரவளிக்கும் இலக்குடன், ‘நமது எஸ்ஜி மரபுடைமைத் திட்டம் 2.0’ எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தி, செயல்படுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, 30 ஆண்டுகளுக்குமேல் இயங்கிவரும் தொழில், வணிக நிறுவனங்களுக்குக் கைகொடுக்கும் நோக்கில் எஸ்ஜி மரபுடைமை வர்த்தகத் திட்டம் எனும் முன்னோடித் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்திட்டம் குறித்து அறிவித்த கலாசார, சமூக, இளையர்துறை மூத்த துணையமைச்சர் லோ யென் லிங், உள்ளூரிலேயே வேரூன்றிய வணிகங்கள், பண்டங்கள், சேவைகள் ஆகியவை ஒரு சமூகத்தின், ஓர் இடத்தின் அடையாளத்திற்கு முக்கியப் பங்காற்றி வருவதைச் சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.

புதிய திட்டத்தின்கீழ், பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த லிட்டில் இந்தியா, கம்போங் கிளாம், சைனாடவுன் உள்ளிட்ட சிங்கப்பூரின் மத்தியப் பகுதியில் நெடுங்காலமாகச் செயல்பட்டுவரும் வணிக நிறுவனங்களுக்கு விளம்பரப்படுத்தல், சந்தைப்படுத்தல், ஆலோசனை வழங்குதல் போன்ற வழிகளில் அரசாங்கம் ஆதரவு வழங்கவிருக்கிறது.

தலைமுறை தலைமுறையாகத் தொழில் செய்துவரும் வணிக நிறுவனங்களுக்கு அரசாங்கத்தின் இந்த ஆதரவு பேருதவியாக இருக்கும் என்பது உறுதி.

இதன்மூலம் மரபார்ந்த தொழில்கள், நிறுவனங்கள் குறித்து மக்களிடம் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

அத்துடன், மரபார்ந்த தொழில்களைத் தொடர்ந்து நடத்த அடுத்த தலைமுறையினரும், குறிப்பாக இளையர்கள் ஆர்வத்துடன் முன்வரலாம்.

அதே நேரத்தில், மதியாதரவு மட்டும் போதாது, நிதியாதரவும் வேண்டும் என்பதும் சில வணிக நிறுவனங்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஏனெனில், வாடகை, சம்பளம் போன்றவை தொடர்ந்து அதிகரித்துவருவதால், விளம்பரம், சந்தைப்படுத்தல், புதிய தொழில்நுட்பங்களைத் தழுவுதல் போன்றவற்றுக்காக அவை கூடுதலாகச் செலவிட வேண்டியிருக்கும் என்பதால் அரசாங்கம் நிதியாதரவு வழங்குவதையும் கவனத்தில் கொள்ளலாம்.

மனிதவளப் பற்றாக்குறையும் அவர்களின் ஒரு கவலையாக இருந்துவருகிறது.

புதிய, இளைய தொழில்முனைவர்களை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திவரும் அரசாங்கம், மரபார்ந்த தொழில்கள் நீடித்து நிலைத்திருக்க வழிசெய்வதும் வரவேற்கத்தக்கது.

அதுபோல, நலிந்துவரும் தொழில்களையும் அடையாளம் கண்டு, ஆதரவு வழங்கி, அவையும் தாக்குப்பிடித்து நிலைபெறுவதற்குக் கைகொடுக்கலாம்.

அரசாங்கத்தின் ஆதரவு ஒருபக்கம் இருந்தாலும், மரபும் பண்பாடும் காலங்காலமாக நிலைபெறுவதில் சமூகத்தினருக்கும் பொறுப்புண்டு.

மின்வணிகம் பெருகிவரும் இக்காலச் சூழலில், பல்லாண்டுகளாகச் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்களுக்கு மக்கள் ஆதரவு தொடரும்போதுதான் அவையும் உயிர்ப்புடன் இருந்து, தொழில்மரபு நிலைத்திருக்கும்.

புத்தாக்கத்தை எப்படிப் புறந்தள்ள முடியாதோ அதுபோல நம் வரலாறுகூறும் மரபைப் பேணி நிலைத்திருக்கச் செய்வதும் இன்றியமையாதது.

மரபுவழிப்பட்ட எதுவும் வாழ்வோடு இணைந்திருக்கும்போதுதான் அதனை அடுத்துவரும் தலைமுறையினரிடத்திலும் கொண்டுசேர்த்து, கட்டிக்காக்க முடியும்.

கலை, பண்பாடு, மொழி, தொழில் என எதுவாக இருந்தாலும், அவற்றோடு தொடர்புடையோர் மட்டுமன்றி, அரசாங்கமும் ஒட்டுமொத்தச் சமூகமும் ஆதரவளிக்கும்போதுதான் அவை மேலும் செழிப்புறும்.

ஆகவே, மரபுத்தொடர்களில் மட்டும் மரபு வாழ்ந்திருக்கலாகாது, அதுசார்ந்த அனைத்திற்கும் நீடித்த ஆதரவளித்து, மரபைப் போற்றி, மகத்தான நாடாக வெற்றிநடையைத் தொடர்வோம்!

குறிப்புச் சொற்கள்