தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிகரிக்கும் கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்களுக்கு பதற்றமும் பயமும் தீர்வாகாது

3 mins read
d64f768c-01a3-41ed-9426-c6ee4ff01138
கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துவருவதற்கு இடையே கூட்டமான இடங்களில் முகக்கவசம் அணியுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் டிசம்பர் 3 முதல் 9 வரையிலான வாரத்தில் 56,043 கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டன. அதற்கு முந்தைய வாரத்தில் பதிவான 32,035 சம்பவங்களைக் காட்டிலும் இது 75% அதிகரிப்பு என்று சுகாதார அமைச்சு டிசம்பர் 15ஆம் தேதியன்று தெரிவித்தது.

கொவிட்-19 சம்பவங்கள் தொடர்பில் மூன்றாவது வாரமாக இந்த அதிகரிப்பு காணப்படுகிறது.

இந்நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் முகக்கவசம் அணிந்துகொள்ளவும் சுகாதார அமைச்சுடன் மருத்துவர்களும் இணைந்து மக்களைக் கேட்டுக்கொண்டனர். 

கொவிட்-19, சளிக்காய்ச்சல், சாதாரண சளி போன்ற கடுமையான சுவாசத் தொற்றுச் சம்பவங்கள் வழக்கமாக ஆண்டிறுதியில் அதிகரிக்கலாம் என்பதால் மக்களுக்கு இந்த அறிவுறுத்தல்.

கொரொனா கொள்ளைநோய் தலைவிரித்தாடிய காலகட்டத்தில் நாம் அனைவரும் சுகாதாரத்தைப் பேணும் வகையில் கட்டிக்காத்த பழக்கவழக்கங்களை மீண்டும் தொடங்குவது முக்கியம்.

கைகளை நன்கு கழுவுதல், முகத்தைக் கைகளால் தொடாமலிருத்தல் போன்றவை இந்தப் பழக்கங்களில் அடங்கும்.

இந்தச் சிறுசிறு செயல்களும் சுவாசத் தொற்றுச் சம்பவங்கள் பரவுவதைக் குறைக்க உதவும்.

இருப்பினும், இவற்றில் அதிகம் அச்சுறுத்தம் ஒன்று நிச்சயம் கொவிட்-19தான்.

சிங்கப்பூரிலும் உலக நாடுகளிலும் இந்தக் கிருமித்தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அதிகம்.

உள்ளூரில் தொடரும் ஒரு நோயாக கொவிட்-19 மாறிவிட்ட நிலையில், கிருமித்தொற்றுச் சம்பவங்கள் திடீரென அதிகரித்தால் தனிப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சமூகத்தைப் பற்றிய அக்கறை உணர்வு, சுகாதாரப் பராமரிப்பு அமைப்புமுறையின் தயார்நிலை போன்றவற்றின் மூலமே சூழலைச் சிறப்பாகக் கையாள முடியும். 

கொவிட்-19 தொற்றுச் சம்பவங்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வதால் குறிப்பாக, சுகாதாரப் பராமரிப்பு அமைப்புமுறை மீது அனைவரது கவனமும் திரும்பியுள்ளது. 

மருத்துவமனைகள் நெருக்கடி நிலையில் சிக்கியுள்ளன.

நோய்க்கான கடுமையற்ற, மிதமான அறிகுறிகளைக் கொண்டோர் தங்களின் வீட்டுக்கு அருகே உள்ள தனியார் மருந்தகத்திற்கோ பலதுறை மருந்தகத்திற்கோ செல்லுமாறு பொது மருத்துவமனைகள் மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றன.

பின்னர் தேவை ஏற்படின், அவசர சிகிச்சைப் பிரிவுக்கோ வெளிநோயாளிப் பராமரிப்புக்காக ஒரு மருத்துவ நிபுணரிடமோ நோயாளி அனுப்பப்படலாம்.

தற்போது கிருமித்தொற்றுச் சம்பவங்கள் மீண்டும் தலைதூக்கினால் அதற்குச் சுகாதாரப் பராமரிப்பு அமைப்புமுறை தயாராக உள்ளது.

கொள்ளைநோயின் தீவிரம் கடுமையாக இருந்த ஒரு கட்டத்தில் அரசாங்கம் மருத்துவமனைப் படுக்கை கிடைத்தல், கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை, சம்பவங்களைக் கையாளும் ஆற்றல் குறித்து ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை கண்காணித்துக்கொண்டிருந்தது.

அந்த நிலையில் சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்பு அமைப்புமுறை பெரும் சோதனைக்கு உள்ளானது.

அதில் பாடமும் கற்றுக்கொண்டது சிங்கப்பூர்.

இதையடுத்து, சிங்கப்பூர் அதன் மருத்துவமனைகளின் ஆற்றலை வலுவாக்கும் என்று இவ்வாண்டு மார்ச் மாதம் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நாடாளுமன்றத்தில் கூறினார்.

அந்தக் கடுமையான கிருமிப் பரவலுக்குப் பின், அரசாங்கம் அதன் கொள்ளைநோய் தயார்நிலையையும் செயல்பாடுகளையும் மேலும் வலுப்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி புதிதாக வந்திருக்கும் கிருமியை உடனுக்குடன் அடையாளம் கண்டு, அதைக் கையாள எத்தகைய நடவடிக்கைகளை எடுப்பது என்பதைப் புரிந்துகொள்ளும் திறன் சிங்கப்பூருக்கு இருக்கும்.

அடுத்த நெருக்கடி நிலை என்ற ஒன்று இருந்தால், நம் சுகாதாரப் பராமரிப்பு அமைப்புமுறை அதைச் சந்திக்கத் தயார்.

இருப்பினும், மருத்துவமனைகளை நெருக்குதலுக்கு ஆளாக்கும் அளவுக்கு சிங்கப்பூரர்கள் பதற்றநிலைக்குத் தள்ளப்படுவது தேவையற்ற ஒன்று. இந்தப் பதற்றம் இல்லாதிருப்பது முக்கியம்.

இதனாலேயே, கடுமையற்ற அறிகுறிகள் உடையோர் தனியார் மருந்தகங்கள், பலதுறை மருந்தகங்கள் ஆகியவற்றின் அக்கறையுடன் கூடிய செயல்திறன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று நினைவுறுத்தப்படுகிறது.

கொள்ளைநோயிலிருந்து சிங்கப்பூரர்கள் என்ன கற்றுக்கொண்டார்கள் என்ற கேள்வி எழுகிறது.

வலுவான உள்கட்டமைப்பு வசதியுடன், ஒட்டுமொத்த மக்களும் நடந்துகொள்ளும் விதத்திலிருந்து பிறக்கும் சமூக மீள்திறன் ஆகிய இரண்டுமே உண்மையான மீள்திறனுக்கு வழிவகுக்கும்.

அதனால், அதிகப்படியாகப் பதற்றமடைதல் ஆகாது. குறிப்பாக, சமூக ஊடகங்களில் பரவும் பொய்யான தகவல்களை அறிந்து பதற்றப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.

கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுப்பதற்காக 2020ஆம் ஆண்டில் சிங்கப்பூர் ‘சர்க்கியுட் பிரேக்கர்’ எனும் நோய்ப்பரவலை முறியடிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.

இதே கிருமி முறியடிப்புத் திட்டத்தை அரசாங்கம் மீண்டும் நடப்புக்குக் கொண்டுவரும் என்று அண்மையில் சமூக ஊடகங்களில் பரவியதைப் பொய்யான தகவல் என்று அரசாங்கம் சுட்டிக்காட்டியது.    

அத்துடன், பதற்றத்தில் மக்கள் ஆன்டிஜன் விரைவுப் பரிசோதனைக் கருவிகளை அதிகப்படியாக வாங்கி வைத்துக்கொள்வதும் தேவையற்றது.

இது அதிகப் பதற்றம், பயம் உருவாகக் காரணமாகி நோய்க்கு எவ்விதத் தீர்வும் ஏற்படாத நிலை உருவாகிடும்.    

குறிப்புச் சொற்கள்