இன்றைய மின்னிலக்க உலகில் ஒருவர்க்கொருவர் நேரில் கண்டு தொடர்பு ஏற்படுத்திக்கொள்வதைவிட இணையவழித் தொடர்பை உருவாக்கிக்கொள்வது மிக மிக எளிதாக இருக்கிறது.
பரந்தவெளி என்றபோதும் கட்டற்ற வாய்ப்புகளைக் கைக்கெட்டும் தொலைவில் கொண்டுவருகிறது இணையவெளி. அதே நேரத்தில், கண்ணுக்குத் தெரியாத, சட்டென்று நம் அறிவிற்குப் புலப்படாத இடர்களும் நம் முதுகிற்குப் பின்னாலேயே வரிசைகட்டி ஒளிந்துகொண்டிருக்கின்றன.
அந்த அறியாமையையே மோசடிப் பேர்வழிகள் பயன்படுத்தி, நம்மை ஏமாற்றி, நம் பணத்தைச் சுருட்டிவிடுகின்றனர். இதனால், ஒருசிலர் தம் வாழ்நாள் சேமிப்பையே இழக்க நேரிடுகிறது.
இப்போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த 2020 முதல் 2025 செப்டம்பர்வரை சிங்கப்பூரில் குறைந்தது 3.88 பில்லியன் வெள்ளி மோசடிகள்மூலம் பறிபோய்விட்டது.
இப்போதைக்குச் சிங்கப்பூரில் பதிவாகும் குற்றச்செயல்களில் பெருவாரியானவை, அதாவது 60 விழுக்காட்டுக் குற்றங்கள் மோசடி சார்ந்தவை என்று நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் உள்துறை மூத்த துணையமைச்சர் சிம் ஆன் தெரிவித்தார்.
அதனால், ‘கொடியாரை வேந்தொறுத்தல்’ எனும் கூற்றுக்கு ஏற்ப, மோசடிக் குற்றவாளிகளையும் அவர்களுக்குத் துணைபோவோரையும் கடுமையாகத் தண்டிக்கும் வகையில், அரசாங்கம் முன்மொழிந்த குற்றவியல் சட்டம் (பல்வகைத் திருத்தங்கள்) மசோதாவை நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
அவ்வகையில், குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து, மோசடிப் பேர்வழிகள், மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர்கள், மோசடிக் கும்பலுக்கு ஆட்சேர்ப்போர் ஆகியோர்க்குக் கட்டாயமாக ஆறு முதல் 24 பிரம்படிகள்வரை விதிக்கப்படும். வங்கிக் கணக்கு, சிம் அட்டை, சிங்பாஸ் விவரங்கள் போன்றவற்றை வழங்கி மோசடிக்கு உடந்தையாய் இருப்போர்க்கு 12 பிரம்படிகள்வரை விதிக்கப்படலாம்.
இந்நிலையில், வெளிநாடுகளிலிருந்து செயல்படும் மோசடிக் கும்பல்களை வேரறுக்க, எல்லை தாண்டிய கூட்டுமுயற்சிகளைத் தொடர்ந்து மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் வேண்டும்.
பாலியல் குற்றவாளிகளும் இணையத்தில் ஆபாசப் படங்களைப் பரப்புவோரும் இனி கடுமையான தண்டனையை எதிர்கொள்ள நேரிடும். குறிப்பாக, அத்தகைய பாதிப்பை எதிர்கொள்ளும் சிறுமி ஒருவர் அடையும் மனத்துன்பம் அளவிட முடியாதது.
அத்தகையதொரு படம் பல்லாயிரம் பேரிடம் சென்றுசேர்ந்தால் அதனை முற்றிலுமாக அகற்றுவதென்பது இயலாத செயல். ஒளிந்திருக்கும் அரக்கன்போல அவை எப்போதும் வெளிப்படலாம் என்பதால், பாதிக்கப்பட்டவர்க்குத் துன்பம் தீர்ந்து, அமைதி கிட்டுவது அரிதுதான்.
ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவுமூலம் இழிவான படங்களைப் பரப்பும் அபாயமுள்ளது என்பதால் அதற்கும் தீர்வுகாணப்படும் என அமைச்சர் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
உயிரிழப்பிற்கு இட்டுச்செல்லும் உடல்சார்ந்த துன்புறுத்தல்களுக்கும் தண்டனைக்காலம் உயர்த்தப்பட்டுள்ளது.
அரசாங்க ஊழியர் ஒருவர்க்குத் தீங்கு விளைவிக்கும் எண்ணத்துடன், அவரைப் பற்றி பொய்யான தகவல்களைப் பரப்புவதும் இனிக் குற்றமாகக் கருதப்பட்டு, சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.
இப்படிப் பலவகைக் குற்றங்களுக்கான தண்டனைகள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், சமூகப் பாதுகாப்பிற்குப் பாதிப்பு ஏற்படுத்தாத எட்டுக் குற்றங்களுக்கு இனி பிரம்படி விதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தவறிழைத்தால் வாழ்க்கையே தவறிவிடலாம் எனும் எண்ணத்தை, அச்சத்தை விதைக்கும்படியாக குற்றவாளிகளுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்பட்டிருப்பது குற்றம் செய்வதற்குமுன் ஒரு நொடி சிந்திக்க வைக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஆயினும், ஒருவரைக் குற்றம் செய்யத் தூண்டிய, தூண்டும் சூழல் என்ன என்பது குறித்தும் அவரை அதிலிருந்து தடுப்பதற்குச் சாத்தியமான தீர்வுகள் குறித்தும் தொடர்ந்து ஆராய வேண்டியது அவசியம்.
அந்த வகையில், குற்றச் செயல்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய பணி.
மோசடிகள் தொடர்பில் இளந்தலைமுறையினர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
இவ்வாண்டின் முற்பாதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளையர்கள் மோசடிக்கு ஆளாகியுள்ளதும் மோசடிக் குற்றங்களுக்காக 300க்கும் மேற்பட்ட இளையர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதும் கவலைதரும் செய்தி.
இத்தகைய சூழலில், பள்ளி விடுமுறைக்காலமும் நெருங்கிவிட்ட நிலையில், பிள்ளைகள் தங்களை அறியாமல் குற்றச் சூழல்களில் சிக்கிவிடக்கூடும் என்பதைக் கருத்தில்கொண்டு, ‘பேரன்ட்ஸ் கேட்வே’ தளம் வாயிலாக கடந்த அக்டோபர் மாதம் மாணவர்களின் பெற்றோருக்கு நான்கு பக்க ஆலோசனைக் குறிப்பு அனுப்பப்பட்டிருப்பது பாராட்டிற்குரிய செயல்.
அதனைப் பெற்றோர் கருத்தூன்றிப் படித்து, அவற்றைப் பற்றி தங்கள் பிள்ளைகளுடன் பகிர்ந்துகொள்வது மிகவும் அவசியம்.
மோசடிகளை, குற்றச்செயல்களை எதிர்கொள்ளும் மீள்திறன்மிக்க, அறச்சமூகத்தை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துவந்தாலும் மக்களும் அறிவார்ந்து விழிப்புணர்வோடு செயல்பட வேண்டியது முக்கியம்.
என்னதான் கடுமையான சட்டங்கள் இருந்தாலும், திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. ஆயினும், விழித்துக்கொள்வோரெல்லாம் பிழைத்துக்கொள்வார்!

